
கண் திருஷ்டி என்பதை கண்ணூறு அல்லது கண்ணேறு என்று சொல்வது வழக்கம். இது சமஸ்கிருத வார்த்தையான 'த்ருஷ்டி' என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் 'பார்வை' அல்லது 'கண்' என்பதாகும். எனவே கண் திருஷ்டி என்பது தீய பார்வையை குறிக்கும் சொல்லாகும். இது மற்றவர்களின் பார்வை காரணமாக ஏற்படும் தீங்கை குறிக்கும். பிறரது பொறாமை அல்லது தீய பார்வையால் ஏற்படும் பாதிப்பு இது. மற்றவர்களின் எதிர்மறை பார்வையால் நோய்வாய்ப்படலாம், சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளை எதிர்கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது. 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள்.
கண் திருஷ்டியின் பொதுவான அறிகுறிகள்:
அதீத உடல் சோர்வு, கணவன் மனைவியிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்குவது, கவனம் சிதறுதல், அடிக்கடி கொட்டாவி விடுதல், புதிதாக அணிந்த ஆடை கிழிந்து போவது, எடுத்த காரியங்கள் நடைபெற தாமதமாவது போன்ற பல அறிகுறிகள் ஒருவருக்கு கண் திருஷ்டி இருப்பதை உணர்த்துகிறது. கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன உப்புசப்பற்ற விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி பிரச்சனைகள் வருவது இதன் அறிகுறியாகும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. சுப நிகழ்ச்சிகளில் தடை, கைப்பொருள் இழப்பு, வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நலக்குறைவு மற்றும் மருத்துவ செலவுகள் ஏற்படுதல், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும். பண வரவு தடைப்படுவது, தொழிலில் நஷ்டம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.
குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்:
சாதாரண மனிதர்களை விட குழந்தைகளுக்கு கண் திருஷ்டி அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் திடீரென அழ ஆரம்பிப்பதும், பசியின்மை அல்லது நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சோர்ந்து போவது, பிள்ளைகள் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவது, உடல்நிலை சரியில்லாமல் போவது போன்ற அறிகுறிகள் தென்படும்.
திருஷ்டி கழிப்பது:
இப்படி உண்டாகும் திருஷ்டிகளை கழிப்பதற்கு அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி சுற்றிக் கொள்பவரை விட வயதில் மூத்தவராக இருப்பது அவசியம். செவ்வாய், வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் திருஷ்டி கழிப்பது சிறந்தது. திருஷ்டி கழிக்க வேண்டியவர்கள் வெறும் தரையில் அமராமல், தரையில் ஏதேனும் விரிப்பு அல்லது பாய் விரித்துக்கொண்டு அமர வேண்டும். ஒருவருக்கோ அல்லது வீட்டில் உள்ள அனைவருக்குமோ சுற்றிப் போடலாம். திருஷ்டி கழிப்பவர் கிழக்கு திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.
கண் திருஷ்டி பரிகாரங்கள்:
கண் திருஷ்டியைப் போக்க கற்பூரத்தை எரிப்பது, ஆரத்தி எடுப்பது, கால்களில் கருப்பு கயிறு கட்டுவது, வியாபாரத் தலங்களில் எலுமிச்சம் பழத்தை நறுக்கி வைப்பது, சாம்பிராணி போடுவது போன்றவை எளிய வழிகளாகும். கண் திருஷ்டி பரிகாரங்களாக வீட்டிற்கு வருகிறவர்களின் கண்களில் படும் இடத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க விடலாம். நிலவாசப்படிக்கு மேல் கண் திருஷ்டி கணபதியை வைக்கலாம்.
வீட்டிற்கு வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம். வீட்டு வாசலில் எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய்களை திடமான கயிற்றில் கோர்த்து தொங்க விடலாம். கற்றாழைச் செடியை வாசலுக்கு நேராக கட்டி தொங்கவிடலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'ஆகாய கருடன் கிழங்கை' வாங்கி வந்து மஞ்சள், குங்குமம் தடவி வீட்டுக்கு வெளியே வாசலில் கட்டி வைக்கலாம். குளிக்கும் நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து குளிக்க கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் சோர்வு, அசதி போன்றவை நீங்கிவிடும்.