இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கூடலழகர் பெருமாள் திருக்கோயில், மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில், மேற்கே வடம் போக்கித் தெருவில் ஐந்து கலசத்துடன்கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 பிராகாரங்கள் என அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 4வது தலம் இது. இக்கோயில் மூலவர் பெருமாள் பெயர் கூடலழகர். பெருமாள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாது இந்த கோயிலில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சியளிக்கிறார். அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் எனும் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல்நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காட்சி தருகின்றனர்.
கூடலழகர் கோயில் விமானம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரை கூடலழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானக் கலசத்தின் நிழல் எந்த பொழுதிலும் தரையில் விழாது. அவ்வளவு கலை அம்சத்துடன் இது கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெளர்ணமியன்றும் இந்தக் கோயிலின் விமானத்தை கிரிவலம் போன்று வலம் வந்து வழிபடுகின்றனர்.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில் வெள்ளி அல்லது தங்க முலாம் பூசிய எடை குறைந்த சடாரிகளைக் கொண்டே பெருமாளின் திருவடி ஆசி வழங்கப்படும். ஆனால், இங்கே ஒரு கிலோ எடையுள்ள தங்க சடாரி உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே இந்த சடாரியைக் கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கப்படுகிறது. பெரியாழ்வார் ‘திருப்பல்லாண்டு’ பாடிய இத்தலத்தில் அவருக்குக் காட்சி தந்த மகாவிஷ்ணு, ஐஸ்வர்யம் தரும் தனது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அதன் நினைவாக இங்கு சடாரி சேவை சாதிக்கப்படுகிறது.
கூடலழகர் பெருமாள் கோயிலில் 12 தமிழ் மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக, முருகன் கோயில்களில் பக்தர்கள் பால் குடம் எடுப்பது வழக்கம். அதேபோல், பக்தர்கள் இங்கே தாயார் மதுரவல்லிக்கு பால் குடம் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். நவராத்திரிக்கு பின்பு தாயாரை சாந்தப்படுத்தும் விதமாக புரட்டாசி பெளர்ணமி அன்று இந்த வழிபாடு நடைபெறுகின்றது. பொதுவாக, சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சன்னிதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கும். வைணவ தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னிதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
தமிழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடும் ஒரே பெருமாள் கோயில் இதுதான். திருவோணம் அன்று இங்கே விசேஷ பூஜை நடைபெறுகிறது. சங்க காலத்திய பாண்டிய மன்னனான தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்கள் எடுத்து மகிழ்ந்தான். ஆவணி திருவோண நன்னாளில் சிறப்பான பல வழிபாடுகள் செய்தான். அதனை ‘மாயோன் மேய ஓண நன்னாள்’ என்று தமது மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறுகிறார். இதன் அடிப்படையில் இங்கே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலின் உட்புற சுவர்களில் 108 திவ்ய தேசத்து எம்பெருமான்கள் அந்தந்த தலங்களில் எவ்வித ரூபமாய் எழுந்தருளியுள்ளனரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால் தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது துளசி மாலை அணிவித்து பக்தர்கள் வழிபடுவார்கள். இக்கோயிலை ஒரு மண்டலம் (48 நாட்கள்) சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மதுரையை ஆண்ட வல்லபதேவப் பாண்டியன், ‘பரம்பொருள் என்ன என்பது பற்றி விளக்கிக் கூறுபவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படும்’ என்று அறிவித்தான்.
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து பெரியாழ்வார் மதுரை வந்து திருமால்தான் பரம்பொருள் என்று விளக்கம் அளித்து பொற்கிழி பெற்றார். அதனால் மன்னன் யானை மீது அவரை அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றார். பெரியாழ்வார் பொற்கிழி பெற்ற இடம் மேங்காட்டு பொட்டல். இது நடந்த காலம் மார்கழி அமாவாசை. பெரியாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி அமாவாசை அன்று பெரியாழ்வாரை கூடலழகர் பெருமாள் கோயிலிலிருந்து யானை மீது எழுந்தருளச் செய்து மேங்காட்டு பொட்டலுக்கு கொண்டு சென்று விழா நடத்துகிறார்கள்.