

தமிழகத்தில் தீபாவளி என்பது நரக சதுர்தசி என்று கொண்டாடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் தீபாவளி அதற்கு அடுத்த நாளான அமாவாசை மற்றும் பிரதமை என மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
'தைலே லட்சுமி ஜலே கங்கா' என்று பெரியவர்கள் கூறுவார்கள். தீபாவளி தினத்தில் எண்ணெய் ஸ்நானம் அதுவும் வெந்நீரில் செய்வது சிறப்பு. எண்ணையில் லட்சுமியும் தண்ணீரில் கங்கையும் இருப்பதாக ஐதீகம். தீபாவளி கொண்டாடும் தினமான சதுர்தசிக்கு அடுத்த நாள் அமாவாசை அன்று வட இந்தியாவில் 'சத் பூஜா' என்று பெண்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்நாளில் இல்லத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களின் நலனுக்காக பூஜை செய்வது வழக்கம். தமிழகத்திலும், ஆந்திராவிலும் 'கேதார கௌரி விரதம்' அன்று கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் மாலையில் அமாவாசை தினத்தில் லட்சுமி குபேர பூஜையும் வெகு விமர்சையாக செய்யப்படுகிறது.
தீபாவளித் திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது செல்வம் பெருகவும், பண வரவு சீராக இருக்கவும், கடன் தொல்லை நீங்கி குடும்பத்தில் நிலையான மகிழ்ச்சி மற்றும் பொருளாதார பாதுகாப்பு நிலவவும் செய்யப்படுகிறது. மகாலட்சுமி செல்வத்தைத் தருபவளாகவும், குபேரன் அந்த செல்வத்தைக் காப்பவராகவும் கருதப்படுகின்றனர். இருவரையும் ஒன்றாக வழிபடுவதால் வாழ்வில் நிலையான பொருளாதாரமும், நிம்மதியும் கிடைக்கும்.
செல்வத்தின் அதிபதிகளின் ஆசி:
மகாலட்சுமி செல்வத்தைத் தருபவள். குபேரன் அந்த செல்வத்தைப் பாதுகாத்து நிர்வகிப்பவர். இருவரையும் இணைத்து வழிபடும் பொழுது செல்வம் பெருகும். முறையற்ற செலவுகள் தவிர்க்கப்படும். செல்வத்திற்கும், நல்வாழ்விற்கும், அதிர்ஷ்டத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி தீபாவளி அன்று பாற்கடலில் இருந்து தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
குபேரனோ பிரம்மாவிடம் வரம் பெற்று, அண்ட சராசரத்தின் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் செல்வக் காவலர். லட்சுமி அருளால் கிடைக்கும் செல்வமும், குபேரனின் அருளால் அது நம்மிடம் நிலைத்து நின்று, வீண் விரயங்கள் இல்லாமல் பெருகும் என்பதும் நம்பிக்கை.
கடன் நிவாரணம்:
தீபாவளி அமாவாசை அன்று லட்சுமி தேவி பூலோகத்திற்கு வந்து தூய்மையாகவும், வெளிச்சமாகவும் இருக்கும் வீடுகளில் நுழைவதாக ஐதீகம். எனவே இந்நாளில் இரவில் செய்யப்படும் லஷ்மி குபேர பூஜையானது எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, வறுமையைப் போக்கி குடும்பத்தின் நிதி நெருக்கடிகள் மற்றும் கடன் சுமைகளைக் குறைத்து நேர்மறை ஆற்றலை நிரப்பும்.
நல்வாழ்க்கை மற்றும் வியாபார விருத்தி:
தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினர் புதிய கணக்குத் துவங்கி ஆண்டின் வளமான தொடக்கத்திற்காக இந்த பூஜையை செய்கின்றனர். குபேரனை வழிபடுவதன் மூலம் தொழிலில் நஷ்டங்கள் நீங்கி, புதிய முதலீடுகளும் லாபமும் பெருகும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமியின் அருளோடு குபேரனின் அருளும் சேரும்போது தரித்திரம் நீங்கி, உரிய வழியில் செல்வம் புழங்க வழி பிறக்கும்.
லட்சுமி குபேர பூஜை:
மேடை அமைத்து அதில் ஆசனம் போட்டு அதன் மேல் பட்டுத்துணி விரித்து நுனி வாழை இலையை வைக்கவும். அதில் அரிசியை பரப்பி கலசம் வைக்கவேண்டும். வெள்ளி அல்லது தங்க காசை கலசத்தினுள் போட்டு சுத்தமான ஜலமும் விட்டு முறைப்படி பூஜிக்கவேண்டும்.
முதலில் விநாயகர் பூஜை, அடுத்து நவக்கிரகங்களை ஆராதனை செய்து லட்சுமியை வாசனை பூக்களால் அர்சித்து , குபேரனை 108 நாணயங்கள் கொண்டு பூஜித்து (5 ரூபாய் நாணயங்களை லேசாக ஒலி எழுப்பி அர்சிக்க), பால், பாயசம் மற்றும் பலவித பட்சணங்களை நைவேத்தியம் செய்யலாம். பின்னர் தூப தீபம் காட்டி, கற்பூர ஆரத்தியுடன் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
பூஜை முடிந்த பிறகு அர்ச்சனைக்குப் பயன்படுத்திய நாணயங்களை நம் வீட்டு பணப்பெட்டியிலோ அல்லது பீரோவிலோ வைக்க செல்வம் மேன்மேலும் பெருகும் என்பது ஐதீகம். பொருள் ரீதியான செல்வம் மட்டுமின்றி, குண நலன்கள், ஆரோக்கியம் மற்றும் மனஅமைதி போன்ற அஷ்ட லட்சுமிகளின் அருளும் இந்த பூஜையின் மூலம் கிடைக்கும். ஆண் பெண் என இருவருமே இந்த பூஜை செய்து விரதம் அனுஷ்டிக்கலாம்.