
தீபாவளியை ஒட்டி மக்கள் செய்யும் வழிபாட்டில் லட்சுமி குபேர வழிபாடு முக்கியமானது. இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். நிரந்தரமாக நம் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திவ்ய ரூபா, கவுரவர்ணா, பிரசன்ன வதனா, பூரண சந்திரமுகி, வெண்பட்டு நாயகி, இவையெல்லாம் மகாலட்சுமியின் வேறு பெயர்கள். அதிகாலை 5 மணி என்பது பிரம்ம முகூர்த்தம். இந்த வேளையில் எழுந்திருப்பது வீட்டின் தரித்திரத்தைப் போக்கும். சுபிட்சத்தைக் கொடுக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் கடவுளை நினைக்க வேண்டும். எழுந்து உட்கார்ந்ததும் இரண்டு உள்ளங்கைகளையும் பார்த்துக் கொண்டு தெய்வத்தை வணங்க வேண்டும். கைகளில் கடவுளை தியானிக்க வேண்டும். கையின் உச்சியில் மகாலட்சுமி வசிக்கிறார், கையின் மத்தியில் சரஸ்வதி தேவி வசிக்கிறார், கையின் அடிப்பகுதியில் பார்வதி தேவி இருக்கிறார். இவர்கள் மூவரையும் வணங்கி அந்நாளை தொடங்க வேண்டும்.
காலையில் எழுந்த உடனே, வீட்டு முன்வாசலைத் திறக்கக் கூடாது. கொல்லைப்புற வாசலைத்தான் முதலில் திறக்க வேண்டும். அதன் பிறகே முன் வாசலைத் திறக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடவேண்டும். ஐந்து முக விளக்கின் தீபத்தில் அகம் குளிர்ந்து மகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தர வாசம் செய்வாள் என்கிறார்கள். வீடுகளில் மகாலட்சுமி படம் வைத்து, வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி,தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டு வித எண்ணெய் கலந்து காலையும், மாலையும் தீபம் ஏற்றினால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வீட்டில் தங்குவாள் என்பது ஐதீகம்.
வில்வ தளத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். சுவாமிக்கு ஒரு வில்வ தளத்தை உள்ளன்போடு சாத்தினாலே லட்சம் சொர்ண புஷ்பங்களை சாத்தியதற்கு சமம். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை பெளர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது.
பூஜை நடக்கும் இடங்கள், சங்கு நாதம் கேட்கும் இடங்கள், சிவ நாமம் கேட்கும் இடங்கள், அன்ன தானம் வழங்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அழகிய அடக்கமான பெண்கள், கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவி, கண்ணியமான ஆண்கள், ஆணவம் இல்லாதவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், சுறுசுறுப்பாக இயங்கும் நபர்கள், எப்போதும் தூய ஆடைகளை அணிகின்றவர்கள், துணிவு மிக்க ஆண் மற்றும் பெண்கள் ஆகியோர் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்தவர்கள்.
மணமக்களை வாழ்த்தும்போது அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ வேண்டும் என்கிறார்கள். அந்த அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்ன தெரியுமா? தலைமைப் பதவி, நல்ல குழந்தைகள், எந்தப் பலனும் எதிர்பாராமல் உதவும் உறவினர்கள், நல்ல வழியில் கிடைக்கும் பணம், அழகான ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், நல்ல தானியங்கள், வாகனங்கள், நினைத்ததை குறையில்லாமல் தானே செய்து முடிக்கும் வேலை ஆட்கள். இவை அனைத்தும் யாருக்குக் கிடைக்கிறதோ அவரே அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்றவர்கள் ஆவர்.
தேங்காய் மகாலட்சுமி தேவியின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தூய்மை மற்றும் வளமையைக் குறிக்கிறது. பாரம்பரியத்தின்படி, தீபாவளிக்கு முன் உங்கள் வீட்டிற்கு ஒரு தேங்காயைக் கொண்டு வருவது மங்கலகரமானது. பூஜை அறையில், குறிப்பாக மகாலட்சுமி தேவியின் சிலைக்கு அருகில் அதை வைத்திருப்பது, வாஸ்து குறைபாடுகளை நீக்கி, வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின்போது விநாயகர் மற்றும் மகாலட்சுமி தேவியின் புதிய சிலைகளை வாங்குவது ஒரு முக்கியமான வழக்கமாகும். மகாலட்சுமி மற்றும் கணபதி சிலைகளை வீட்டிற்குள் கொண்டு வருவது மகாலட்சுமி மற்றும் விநாயகரின் ஆசீர்வாதத்துடன் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் ஞானத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. வீட்டின் பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் இந்த சிலைகளை வைக்க வேண்டும்.