
ஐப்பசி மாதம் தமிழ் வருடத்தின் 7வது மாதமாகும். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலமாதலால் இதற்கு துலா மாதம் எனப் பெயர். மேலும், இம்மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் இதற்கு ‘அஸ்வினி மாதம்’ எனவும் பெயர். இதுவே ஐப்பசி மாதமாயிற்று.
ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானக் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். எனவே, ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதரை வழிபட, அனைத்து விதமான பாவங்களும் நீங்கும்.
மாயூரம் ஸ்ரீ மயூரநாதரை கடை முழுக்கு முடித்து வழிபட பாவங்கள் அனைத்தும் போகும். ‘முடவன் முழுக்கு’ என அழைக்கப்படும் இந்த ஐப்பசி ஸ்நானம் சிறப்பு வாய்ந்தது. இம்மாதத்தில் தேய்பிறையில் வரும் திரயோதசி கிழமை தன திரயோதசி ஆகும். இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது சிறப்பு. இதனால் பொருள், பணம் சேர்க்கை உண்டாகும். நோய் நீங்கி, ஆரோக்கியமாக வாழலாம். ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நரக சதுர்த்தசி எனப்படும்.
அன்றைய தினம் தீபாவளி பண்டிகை. இந்த நாளன்று ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்து மக்களைக் காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்று காலை எண்ணெய் தேய்த்து நீராடி விட்டு ஸ்ரீ கிருஷ்ணர் பூஜையும், லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு.
மகாலட்சுமியின் அருளினால் செல்ல வளம் சிறக்கும். தீபாவளிக்கு மறுதினம் கேதார கெளரி விரதம். இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். சண்டை சச்சரவு, குழப்பங்கள், பூசல்கள் நீங்கும்.
இம்மாதத்தில் வளர்பிறை சஷ்டி, கந்த சஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள் சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தான். பல முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இம்மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்க வீட்டில் வறுமை போகும். பசி, பிணியின்றி நீடித்த வாழ்வு தரும். அன்னாபிஷேகத்திற்கு அரிசி முதலான பொருட்களை கோயிலுக்கு வாங்கிக் கொடுக்க வாழ்வு சிறக்கும்.
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னன் இராஜராஜ சோழனை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்படுகிறது.
இந்த மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ எனப்படும். இந்நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட, வறுமை நீங்கும். பாப விமோசனம் பெற, பசி பிணி நீங்க இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த மாத தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா ஏகாதசி’ என அழைக்கப்படுகிறது. இதனால் நம் பாவம் மட்டுமன்றி, நம் முன்னோர்கள் செய்த பாவமும் நீங்கும்.