
தீபாவளியை இந்தியாவில் விழாவாகக் கொண்டாடும் அதேநேரத்தில் ஒருசிலர், குறிப்பாக தமிழகத்தில் தீபாவளியை சிவபெருமானை குறித்து நோற்கப்படும் நோன்பாகவும் அனுஷ்டிப்பதுண்டு. மற்ற மாநிலத்தவர்கள் பல்வேறு பூஜை முறைகளாலும் தீபாவளியை சிறப்பித்து வருகின்றனர். அதில் கேதார கௌரி விரதம் குறித்து இப்பதிவில் காண்போம்.
தீபத்தை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என்பது அவர்களின் கருத்து. தீபாவளி அன்று பகல், இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்து சிவ பூஜை செய்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி சிவ பூஜை செய்து, விடியும் முன்பு புத்தாடை உடுத்தி, சுத்த சைவ உணவு உண்டு கொண்டாடுவதே தீபாவளி விரதமாகும்.
மாசி மாத அமாவாசைக்கு முன் தினம் மகாசிவராத்திரியும், ஐப்பசி மாத அமாவாசைக்கு முன்தினம் தீபாவளியும் வரும். சிவபெருமானை வழிபடும் விரதங்கள் 8 என ஸ்கந்த புராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் எடுத்துரைக்கின்றது. அவை கார்த்திகை சோமவார விரதம், உமா மகேஸ்வர விரதம் (கார்த்திகை மாத பௌர்ணமி), திருவாதிரை விரதம் (மார்கழி), மகாசிவராத்திரி விரதம் (மாசி), கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்), பாசுபத விரதம் (தைப்பூசம்), அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வ பட்ச அஷ்டமி),கேதார மாவிரதம் (தீபாவளி) ஆகியவையாகும்.
இந்த தீபாவளி விரதம் நோற்கும் முறை: புரட்டாசி மாதம் பூர்வபட்ச அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து அதில் சிவபெருமானை ஆவாஹனம் செய்து, 21 இழை கொண்ட நூலைக் கையில் புனைந்து அர்ச்சனை செய்து, தூப தீப நிவேதனம் செய்து சிவபெருமானை வழிபடுவர்.
ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்தைய நாள் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையான ஆடை உடுத்தி, நெல்லின் மீது நிறை குடம் வைத்து மாவிலையும், தர்ப்பையும் வைத்து அதில் சிவமூர்த்தியை பிரதிஷ்டை செய்து சிவமாகவே பாவித்து, பக்தி பரவசமாக அர்ச்சித்து, பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.
மறு நாள் அமாவாசை அன்று காப்பை அவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் ‘கேதார விரதம்’ எனப்படும். இந்த விரதத்தைக் கௌதம முனிவர் கூற, உமை அம்மையார் நோற்று இறைவனுடைய இடப்பாகத்தைப் பெற்று மகிழ்ந்ததாக ஐதீகம். அன்னை கௌரி நோற்ற காரணத்தால் இது, ‘கேதார கௌரி விரதம்’ எனவும் பெயர் பெற்றது. இந்த விரதத்தை 21 நாட்கள் அனுஷ்டிக்க முடியாதவர்கள் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தி அன்று மட்டும் முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது பூஜை விதி. இந்த விரதத்தை நோற்பவர்கள் அதிகமானோர் உண்டு. அதேபோல், கேதார கௌரி விரதத்தையும் 21 நாட்கள் விரதமிருந்து அனுசரித்து 21வது நாள், 21 விதமான பொருட்களில் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கு வைத்து பூஜையை முடித்து தாம்பூலம் தருவது வழக்கம்.
இதுபோல், தீபாவளிக்கு முன்பாக கௌரி நோன்பை நோற்பது, லஷ்மி பூஜை நடத்துவது, காளி மாதாவிற்கு பூஜை நடத்துவது, கோவர்த்தன பூஜை செய்வது, சாரதா பூஜை செய்வது, குபேர பூஜை செய்வது என்று தீபாவளியை பல்வேறு பூஜை முறைகளாலும் வழிபடுகின்றனர். தீபாவளி காலத்தை வென்று மக்கள் மத்தியில் நின்று நிலைத்து விட்ட ஒரு புனிதமான இன்பத் திருநாள் என்பதும் இதனால்தான். இன்று அனைத்து மக்களும் தத்தமக்கே உரிய தனித்துவத்தோடு இந்த விழாவினை ஒருமைப்பாட்டு விழாவாக ஒருமித்துக் கொண்டாடி வருகின்றனர். இதுவே இருளையகற்றி ஒளியை பரப்பும் தீபாவளியின் சிறப்பு.