
திருமணத்திற்குப் பிறகு சீதா தேவியை அலங்காரம் செய்து ஸ்ரீராமபிரானின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீராமபிரான் உறங்குவது போல கண்களை மூடிக் கொண்டிருந்தார். சீதா பிராட்டி அவர் அருகே சென்று காலடியில் அமர்ந்தார். ‘தேவி, எனது பாதங்களை கொஞ்சம் பிடித்து விடேன்’ என்று புன்முறுவலுடன் கூறினார் ராமபிரான். ஆனால், சீதா தேவி தலையை குனிந்து கொண்டாள். ஸ்ரீராமரின் பாதங்களை பிடித்து விடவில்லை.
அதைக்கண்ட ஸ்ரீராமபிரான், ‘என்ன தேவி, அரச குமாரியான நாம் பாதங்களைப் பிடிக்கும் பணியைச் செய்வதா என்ற தயக்கமா? அவ்வாறாயின் வேண்டாம்’ என்று பாதங்களை இழுத்துக்கொண்டார்.
உடனே சீதா தேவி, ‘அப்படியல்ல சுவாமி, உங்களைப் பற்றி ஒரு கதை கேள்விப்பட்டேன். மிதிலை வரும் வழியில் ஒரு கல்லை தங்கள் பாதம் தீண்ட அழகான பெண்ணொருத்தி வெளி வந்து நின்று வணங்கினாளாம். இன்று எனக்கு அலங்காரம் செய்யும்போது நவரத்தின கற்கள் கொண்ட மோதிரத்தை பூட்டி உள்ளனர். தங்கள் பாதம் பட்டவுடன் நவரத்தினக் கற்கள் அழகிய கன்னியராக உருப்பெற்று வந்து இங்கே நின்றுவிட்டால் என்ன செய்வது? எனக்குப் போட்டி ஏற்பட்டு விடுமோ என்றுதான் அஞ்சுகின்றேன்’ என்று குறும்புடன் சொல்லிச் சிரித்தார்.
உடனே ஸ்ரீராமர் எழுந்து உட்கார்ந்து கொண்டார். தனது கையில் சீதா தேவியின் உள்ளங்கையை எடுத்து வைத்துக்கொண்டு, அதன் மீது தமது கையை வைத்து சத்தியம் செய்து கொடுத்தார். ‘தேவி, இந்த இப்பிறவிக்கிரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று உறுதிமொழி கூறினார்.
கம்பன் கூறும் இந்நிகழ்வில் இரு மாதர் என்று வரும் பாடல் வரிக்குப் பொருள் கூறும்போது, ‘நீ ஒருத்திதான் எனக்கு உரியவர். வேறு மாதரை இரண்டாவதாக மனதாலும் தீண்ட மாட்டேன்’ என்று சொல்வதாகவே எல்லோரும் கூறுவார்கள். ஆனால், அது சரியில்லை. மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி பூதேவி, நீளாதேவி என்ற மூன்று மனைவியர் உண்டு. பூவுலகில் ராமபிரானாக அவதரித்தபோது, ஸ்ரீதேவி மட்டும் சீதையாக அவரை மணந்து கொள்ள வந்து விட்டாள்.
ஆனால், பூதேவியும் நீளாதேவியும் வைகுண்டத்திலேயே தங்கி விட்டனர். இந்த ஜன்மத்தில் பூமிக்கு வந்து விட்ட பிறகு வைகுந்தத்தில் இருக்கும் எனக்குரிய தேவியரான பூதேவியையும் நீளா தேவையும் கூட நான் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று ராமபிரான் கூறியதாகத்தான் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
திருமணம் மூலம் தன்னை அடைந்திராத வேறு பெண்களை தனது மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கூறுவதில் தனியாக சிறப்பு ஒன்றும் இல்லை. ஆனால், தன்னை மனைவியாக அடைந்திருந்த, தனக்கு உரிமையானவர்களான இரு தேவியரையும் கூட தமது மனத்தாலும் தீண்ட மாட்டேன் என்று கூறியதில்தான் எத்தனை பெருமை, சிறப்பு அடங்கியுள்ளது.