மார்கழி மாதத்தில் நடைபெறும் அரையராட்டம் பற்றி அறிவோமா?

Markazhi Maatha Araiyarattam
Markazhi Maatha Araiyarattam
Published on

ரங்கனுக்கு செய்யும் சேவையே அரையர் சேவை ஆகும். வைணவ கோயில்களில் நடைபெறும் ஒருவகை நடனம் அரையர் சேவை எனப்படுகிறது. இது அனைத்து முக்கியமான ஊர்களில் உள்ள பெருமாள் கோயில்களிலும், குறிப்பாக ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களில் நடைபெறுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை இசையோடு பாடி அபிநயம் பிடித்து விளக்கம் சொல்லும் ஆட்டமே ‘அரையர் சேவை’ எனப்படும். இதனை இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த ஆட்டம் என்று கூறுவர். நாலாயிர திவ்ய பிரபந்த ஏடுகளை மிகுந்த சிரமத்தின் பேரில் கண்டெடுத்தவர் நாதமுனிகள் ஆவார். திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் வைணவ தலங்களில் இசைப்பது நின்று விட்டது. பின்னர் அந்த ஏடுகள் காணாமல் போய்விட அதனை கண்டெடுத்தவர் நாத முனிகளாவார்.

அவர் ஒரு இசை வல்லுநர். அப்பாடல்களுக்கு பண், தாளம் ஆகியவற்றை அமைத்து வகைப்படுத்தினார். அவரது சகோதரியின் பிள்ளைகளான கீழையகத்தாழ்வாள், மேலைய கத்தாழ்வாள் ஆகியோருக்கு இதனை கற்றுக் கொடுத்தார். இவர்கள் பிரபந்த பாடல்களை பெருமாள் வீதி வலம் வரும்போது பாடினார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் தூக்கிப்போட வேண்டிய 3 பொருள்கள்!
Markazhi Maatha Araiyarattam

இவர்களுக்குப் பின் ஆளவந்தாரின் மகனான ‘திருவரங்கத்து பெருமாள் அரையர்’ என்பவர் இத்துடன் நடனத்தையும் சேர்த்து வளர்த்தார். இந்தப் பரம்பரையினர் அரையர் எனப்படுகின்றனர். இவர்கள் ஆடுவதற்கு என்று பெரிய மேடைகள் எதுவும் கிடையாது. அதேபோல் அலங்கார ஆடைகளும் கிடையாது. பெருமாள் முன்பு பிரபந்த பாடல்களைப் பாடி நடிப்பதுதான் இவர்களது வேலை.

இவர்கள் அணிந்துகொள்ளும் குல்லாய் சற்று வித்தியாசமாகக் காணப்படும்‌. இது வெல்வெட் துணியால் ஆனது. உயரமான இந்த குல்லாயின் மேல் பகுதியில் கலச வடிவிலான பித்தளை குமிழ்கள் காணப்படும். அவை காதுகளை மறைக்கும் வண்ணம் குல்லாயின் இரு புறங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கும். தொப்பியின் முன்புறம் திருமண் காப்பும், சங்கு, சக்கரமும் காணப்படும்.

இந்த அரையர் ஆட்டத்தினை ஆண்கள் மட்டுமே ஆடுவார்கள். இந்த கலைக்குரிய பயிற்சி காலம் 12 ஆண்டுகள் ஆகும். 4000 பாடல்களை மனப்பாடம் செய்வது ஒரு சிறந்த பயிற்சியாகும். தாள ஓசையுடன் பாசுரங்கள் பாடப்படும். மார்கழி மாதத்தில் பகல் பத்து, இராப்பத்து நடைபெறும் நாட்களில் அரையராட்டம் இடம் பெறும். இந்த ஆட்டம் மூன்று பகுதிகளாக உள்ளது.

முதலில் பெருமாளின் புகழ் பாடுவது. இதற்கு ‘கொண்டாட்டம்’ என்று பெயர். அதற்குப் பிறகு பாசுரங்களை பாடி அபிநயம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்குப் பிறகு 'வியாக்கியானம்' எனப்படும் விளக்கம் சொல்லும் நிகழ்ச்சி இடம்பெறும். ஒரு அரையர் வியாக்கியானத்தை கூற, மற்றொருவர் அதனை கையில் ஏடு வைத்துக்கொண்டு சரி பார்ப்பார். இதுவும் இசை வடிவத்திலேயே அமைந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
மூலிகை தூபங்களும் அதன் நன்மைகளும்!
Markazhi Maatha Araiyarattam

இது முடிந்ததும் திரும்பவும் கொண்டாட்டம். அதாவது, திருமாலின் புகழ் பாடப்படும். பத்தாம் நாள் அரையர் ஆட்டத்தில் ‘முத்து குறி’ என்ற நிகழ்ச்சி நடைபெறும். அதாவது, தாய் தன் மகளுக்காக குறத்தியை அழைத்து குறி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் சோழிகளுக்கு பதிலாக முத்துக்களை வைத்து குறத்தி குறி பார்ப்பார். இதற்கு ‘முத்துக்குறி’ என்று பெயர். இந்நிகழ்ச்சியில் அரையரே தாய், குறத்தி, மகள் என மூன்று நிலைகளையும் அபிநயம் பிடித்துக் காட்டுவார்.

இதேபோல் ராப்பத்து காலத்திலும் அரையர் ஆட்டம் நடைபெறும். ராப்பத்து பத்தாம் நாள் நம்மாழ்வார்க்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியை செய்து காட்டுவார்கள். அரையர்கள் அரங்கனுக்கு செய்யும் சேவையே அரையர் சேவை. இந்த அரையர்கள் ஆழ்வார்களாகவே போற்றப்படுவார்கள். அரையர் சேவை என்பது சாதாரண ஒரு கலை அல்ல. அது ஒரு தெய்வீக சேவையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com