பொதுவாக, தூபத்தை நமது வீடுகளிலும் மற்றும் கோயில்களிலும் போடுவது வழக்கம். இதில் வீடுகளில் போடப்படும் தூபம் வீட்டில் இருக்கும் கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்களை விரட்டி அடிக்க உதவுகிறது. சுமங்கலிப் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தூபம் போட்டால், வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் அதிகரிக்கும். இந்தப் பதிவில் எந்தப் பொருளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
1. சந்தன தூபம்: சந்தனம் ஆன்மிக ரீதியாக மிகவும் மகிமை வாய்ந்தப் பொருள். சந்தனக் கட்டையை நன்றாக அரைத்து பொடியாக்கி தூபம் போடும்போது வீட்டிற்கு நல்ல வாசனை கிடைக்கும். இறை சக்தி வீட்டிற்குள் வந்துவிடும். நாம் வேண்டியது விரைவில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
2. சாம்பிராணி தூபம்: பொதுவாக, வீடுகளில் தூபம் போடும்போது சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது. இதனால் கண் திருஷ்டி போகும். வீட்டில் உள்ள பில்லி, சூன்யம், ஏவல் போன்ற பிரச்னைகள் விலக சாம்பிராணி தூபம் போட வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி தூபம் போட்டால் தொழில் வளர்ச்சியடையும், வீடுகளில் தூபம் போட்டால் செல்வம் பெருகும்.
3. ஜவ்வாது தூபம்: ஜவ்வாது தூபத்தை வீட்டில் போடும்போது அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வீட்டில் நல்ல வாசனை பரவும். கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் விலகும் என்று சொல்லப்படுகிறது.
4. அகிலி தூபம்: அகிலி என்பது ஒருவகை தாவரமாகும். இதனுடைய இலை அல்லது பட்டையை காய வைத்து அதைப் பயன்படுத்தி தூபம் போடும்போது வீட்டில் செல்வம் மென்மேலும் வளரும். மேலும் திருமணமான தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்றால், இந்த தூபம் போடும்போது குழந்தை பாக்கியத்தை பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.
5. துகிலி தூபம்: துகிலி தூபம் போடுவதால் குழந்தைகளின் ஆரோக்கியமும், ஆயுளும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
6. துளசி தூபம்: துளசி தூபம் போடுவதால், திருமணத்தடை நீங்கும். வீடு கட்டுவதில் தடை ஏற்பட்டிருந்தால் அது சரியாகும். வாழ்வில் வெற்றியடைய வழி பிறக்கும். துளசி பெருமாளின் அம்சம் என்பதால், லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
7. தூதுவளை தூபம்: தூதுவளையில் தூபம் போட்டால் தெய்வத்தின் நிந்தனைகளில் இருந்து விடுபடலாம். தெய்வ சாபம், முன்னோர்கள் சாபம் நம்மை விட்டு விலகும். வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யும்.
8. வெள்ளை குங்குலியம் தூபம்: நம்முடைய வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் தடை செய்யும் தீய ஆன்மாக்கள் வீட்டில் இருந்தால் அதை விரட்டுவதற்கு வெள்ளை குங்குலியம் தூபம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் பேய் ஓட்டுபவர்கள் வெள்ளை குங்குலிய தூபத்தை பயன்படுத்துவார்கள். இதனால் துர்சக்திகள் அழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
9. வெண்கடுகு தூபம்: வெண்கடுகு தூபத்தை வீட்டில் போடுவது மூலமாக நம் மீது பகை உணர்வோடு இருப்பவர்களுக்கு அந்த உணர்வு குறையும். அவர்களுடன் நட்புறவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவு குறைந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் நீங்கள் எந்தத் தூபத்தை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.