ஒவ்வொருவரும் தங்கள் குடும்பம் ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய சூழலை உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களையும் அறியாமல் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் சில பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால் அதன் வாயிலாக ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆரோக்கியமற்ற ஆபத்து நிறைந்த 3 பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஒட்டாத சமையல் பாத்திரங்கள்: இன்றைய சூழ்நிலையில் சமையலை எளிதாக்க நான்ஸ்டிக் பாத்திரங்களை முக்கியமாகப் பயன்படுத்துகிறார்கள். நான்ஸ்டிக் பான்கள், கடாய்கள் என பல பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் பல PFOA ரசாயனங்கள் அதாவது perfluorooctanoic அமிலம் இருப்பதால் இது சூடாகும்போது விஷப் புகையை வெளியிடுகிறது.
இவ்வகை ரசாயனங்கள் நம் உடலில் ஹார்மோனை சீர்குலைப்பதோடு புற்றுநோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது. ஆதலால் சமையலுக்கு துருப்பிடிக்காத எஃகு அல்லது வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
ஏர் ஃப்ரெஷனர்கள் மற்றும் வாசனை மெழுகுவர்த்திகள்: வீடுகளில் இதமான நறுமணத்திற்காக ஏர் ஃப்ரெஷனர்கள் மற்றும் வாசனை மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பல ஏர் ஃப்ரெஷனர்கள் மற்றும் வாசனை மெழுகுவர்த்திகளில் உள்ள பித்தலேட்டுகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருட்கள் உட்புற காற்றின் தரத்தை பாதித்து சுவாச பிரச்னைகள் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தி விடுகின்றன.
அதற்கு பதிலாக நச்சுகள் இல்லாத வீட்டை புத்துணர்ச்சியடைய வைக்க அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது மெழுகு மெழுகுவர்த்திகள் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
சுத்தம் செய்யும் பொருட்கள்: இன்று பெரும்பாலான வீடுகளில் டாய்லெட் பாத்ரூம்களை பளிச்சென்று வைத்துக் கொள்வதற்காக கலர் கலராக பல ரசாயன திரவங்கள், சோப்புகள் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.
இத்தகைய துப்புரவுப் பொருட்களில் ப்ளீச், அமோனியா போன்ற கடுமையான ரசாயனங்கள் இருப்பதால் அது சருமத்துக்கு தீங்கு விளைவிப்பதோடு, சுவாசப் பிரச்னையை உண்டாக்கி விடுகின்றன. ரசாயனப் பொருட்களுக்கு மாற்றாக சுத்தம் செய்வதற்கு வினிகர், பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்துவதால் ஆரோக்கியம் பாதிப்படையாது.
மேற்கூறிய மூன்று பொருட்கள் இருந்தால் வீட்டில் இருந்து தூக்கிப் போட சிறிதும் தயங்காதீர்கள்.