
வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில், மாதங்களில் விரதம் இருப்பதை அனைத்து மதத்தினரும் பின்பற்றுகின்றனர். நாமாக விரும்பி ஆன்மிக முன்னேற்றத்திற்காக ஒரு நோன்பினை அனுஷ்டிப்பது இயல்பானதாக இருக்க வேண்டும். யாருடைய வற்புறுத்தலாலும் மேற்கொள்ளப்படக் கூடாது. இதில் ஏகாதசியில் விரதம் இருக்கும்பொழுது எல்லோராலும் இரண்டு காரியங்களைச் செய்ய முடியும். ஒன்று பட்டினியாக இருப்பது, இரண்டாவது பகவத் கதைகளைக் கேட்பது ஆகும். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் காண்போம்.
சுத்த உபவாசம் என்பது முழு பட்டினி இருப்பதுதான். உபவாசம் என்ற சொல்லுக்கு இறை உணர்வோடு பகவானுடைய நினைவில் ஆழ்ந்திருத்தல் என்று பொருள். வயிறு காலியாக இருந்தால்தான் இறை உணர்வுடன் பகவானை தியானிக்க முடியும். மனசை ஒருமுகமாக்க சுவாச பயிற்சி முக்கியமானது. வயிறு கனமாக இருந்தால் சுவாசப் பயிற்சி செய்ய முடியாது.
இதற்காகத்தான் உடம்பை நெற்று போல ஆக்கிக்கொண்டு அதனால் சுவாசத்தை மிக எளிதாக, நிதானமாக உள்ளிழுத்து, வெளிவிட்டு மனதை மிகவும் லேசாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பிறகு நன்றாக ஈஸ்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆகாரத்தை குறைவாக வைத்திருக்கப் பழக வேண்டும். பிறகு பக்ஷத்துக்கு ஒரு நாள் சுத்த உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
‘பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் சுகம் இருந்தாலும் மௌனம் அனுஷ்டி; கண் சொருகினாலும் இரவு முழுவதும் விழித்துக் கொண்டு ஈஸ்வர தியானம் செய்; இப்படி எல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும். இப்போதிலிருந்தே பழகிக் கொண்டுவிட்டால் மரண வேதனை என்று சொல்லும் நாளில் அந்தப் பெரிய இம்சை சரீரத்திற்கு வரும்போது மனதை பரமாத்மாவிடம் எளிதாக செலுத்த முடியும்’ என்றுதான் சாஸ்திரங்கள் விரத உபவாசங்களை வைத்திருக்கிறது.
தொடர்ந்து வேலைகளில் ஈடுபடும் நாம், ஆறு நாள் வேலை செய்தால் ஒரு நாள் ஓய்வு எடுக்கிறோம். மிஷின்கள் கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப்போய் விடுகின்றது என்று அவ்வப்போது அவற்றுக்கு ரெஸ்ட் கொடுக்கிறோம்.
இப்படி வயிற்றுப் பகுதியில் உள்ள ஜீரண உறுப்புகளுக்கும் ரெஸ்ட் கொடுத்தால்தான் ஆரோக்கியம் மேம்படும். ‘லங்கனம் பரம ஔஷதம்’ என்பது வைத்திய சாஸ்திர வசனம். இப்படி ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன.
‘லங்கனம்’ என்றால் பட்டினி என்று அர்த்தம் செய்து கொள்கிறோம். அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் 'தாண்டுவது' என்பதால் ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய்விட்டால் (Skipping a meal) அதுதான் லங்கனம்.
பட்டினி கிடக்கின்றபோது மனசுக்கு அது பரம ஆத்திகமாகவும், இறைவனின் கருணைப் பார்வை நம் மீது விழும் என்ற நம்பிக்கை தோய்ந்து நிற்கிற தன்மையும் உண்டாகிறது. இதனால்தான் பகவத் ஸ்மரணம் விசேஷமாக இருக்க வேண்டிய தினங்களில் பூர்ண உபவாசமோ ஒருபொழுதோ உணவு உண்பதை வைத்திருக்கிறார்கள்.
அதாவது, கரும்பை கசக்கிப் பிழிந்தால்தான் கரும்புச் சாற்றினை சாப்பிடும் இன்பம் கிடைக்கும். அதுபோல உடம்பை வருத்தி ஒருமுகப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு சுகரசம் கிடைக்கும் என்கிறது உபவாசம்.
விஞ்ஞான பார்வை: இதை விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் சந்திரன் வான்வட்டப் பாதையை சுற்றி வர ஏறக்குறைய இருபத்தொன்றரை நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். இது வான மண்டலத்தில் சூரியன் இருக்கும் இடத்துக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரத்தைக் காட்டுகிறது. அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒரு இடத்தில் உள்ளதால் அவற்றுக்கிடையே உள்ள தூரம் 0 டிகிரி. தினமும் 12 டிகிரி சந்திரன் விலகிச் செல்கிறது. அதாவது பௌர்ணமி அன்று சந்திரன் சூரியனிலிருந்து 180 டிகிரியில் உள்ளது. சூரியனிலிருந்து சந்திரன் விலகிச் செல்லச் செல்ல புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது.
இந்த நாட்களில், அதாவது சந்திரன் சூரியனிலிருந்து அதிகம் விலகி இருக்கும் நாட்களில் ஜீரண உறுப்புகளின் சக்தி குறைகிறது. ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கவே சந்திரன் சூரியனிலிருந்து 132 டிகிரி விலகி இருக்கும் ஏகாதசியன்று உபவாச விரதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உபவாசத்தன்று உள்ளே சேர்ந்துள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறி குடல் பகுதிகள் சுத்தமாகின்றன.
ஆதலால், துவாதசியன்று ஜீரண உறுப்புகளுக்கு வேலை தர தொடங்கும்போது 'ஏ' வைட்டமின் நிறைந்த அகத்திக் கீரையும் 'சி' வைட்டமின் மிகுந்த நெல்லிக்காயையும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அது ஜீரண உறுப்புகளை வலுவடைய வைக்கின்றன. மாதம் இரு முறை அதுவும் நமது முன்னோர்கள் கூறிய ஏகாதசிகளில் உபவாசம் இருந்து துவாதசியில் முறையான பாரணை செய்தால் தேக ஆரோக்கியம் சுகம் பெறும் என்பது உண்மையாகிறது.
ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், மனசு ஆகிய 11 இறை உணர்வில் ஆழ்ந்திடும் நாள்தான் பதினோராவது திதியாகிய ஏகாதசி ஆகும். ஆதலால், இப்படி ஏகாதசி விரதம் இருந்து ஆன்மிக ஏற்றம் பெறலாம் என்பதுடன், மற்ற முக்கியமான நாட்களிலும் இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் உடலும் உள்ளமும் சீர் பெறும் என்பதால்தான் அனைத்து மதத்தினரும் அவரவரின் மத கோட்பாடுகளின்படி உபவாசம் அனுஷ்டிக்கின்றனர்.