திருமணமான பெண்கள் காலின் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மெட்டி அணியும் வழக்கம் உண்டு. இந்த மெட்டியை அணிவதால் என்ன பலன்? எவ்வாறு அணிய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பெண்கள் கால் விரல்களில் அணியும் மெட்டி வெள்ளியால் ஆனதாக இருக்க வேண்டும். தூய வெள்ளியால் ஆன மெட்டியை பெண்கள் அணிவதால், கால் நரம்புகளில் தூண்டுதலைக் கொடுத்து கர்ப்பப்பையில் இணையும் நரம்புகள் வழியே கருப்பையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைக்கும். மாதவிடாய் சீராக வருவதற்கும் உதவும். இதனால் பாரம்பரியமாக திருமணத்தின்போது பெண்ணுக்கு கணவனின் கையால் மெட்டி அணிவிக்கப்படுகிறது.
பெண்கள் காலில் மெட்டி அணிவதால், கருப்பை பிரச்னைகளை சரிசெய்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, உஷ்ணத்தை குறைக்கிறது. வெள்ளி சுக்கிர பகவானுக்கு உரிய உலோகமாகும். பெண்கள் அனைத்து சுகபோக வாழ்க்கையை பெறுவதற்காக கால்களில் மெட்டி அணிய வேண்டும்.
பொதுவாக, இரண்டு வளையங்களைக் கொண்ட மெட்டி அணிவது வழக்கம். அவ்வாறு அணியும் மெட்டியானது கால் நகத்திற்கு மேலே முட்டிக்குக் கீழே தங்கியிருக்க வேண்டும். மெட்டி அதற்குக் கீழே செல்லக் கூடாது. பெண்கள் நடக்கும்போது மெட்டி கீழே உரச வேண்டும். இதுவே சரியான மெட்டி அணியும் முறையாகும்.
தேய்ந்துபோன மெட்டியை பெண்கள் ஒருபோதும் அணியக்கூடாது. அப்படி அணிந்தால், குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் பொருளாதாரம் தேய்ந்துக்கொண்டேவரும் என்பது ஐதீகம். பெண்கள் மெட்டியை வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மெட்டியை மாற்ற வேண்டும். வேறு உலோகங்கள் பயன்படுத்தக்கூடாது.
மெட்டியை காலின் கட்டை விரலுக்குப் பக்கத்தில் உள்ள விரலில் மட்டுமே அணிய வேண்டும். காலில் மூன்று விரல்களில் கண்டிப்பாக மெட்டி அணியக்கூடாது. அப்படி அணிந்தால், கணவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படும் மற்றும் உடல்நல பிரச்னைகள் வரும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் மெட்டியை எப்போதும் கழட்டி வைக்கக்கூடாது. நடக்கும்போது தரையில் மெட்டி எழுப்பும் ஓசை குடும்பத்தில் சுபிட்சத்தைத் தரும். இது ஒரு இனிய மங்கல ஒலியாகும்.