சாணியடித் திருவிழா:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அருகில் உள்ள கும்டாபுரம் எனுமிடத்தில் பீரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் விவசாயம் செழிப்பதற்காக, தீபாவளிப் பண்டிகையை அடுத்து வருகின்ற மூன்றாவது நாள், 'சாணி குண்டம் இறங்கும் விழா' நடைபெறுகிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தை ஒரு பக்தர் சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் வீசி எறிந்ததாகவும், அவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று, அந்தக் குப்பைமேட்டில் ஏறிய போது, அங்கிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறி வந்ததாகவும், அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, அங்கேச் சிவலிங்கம் இருந்தது தெரிய வந்திருக்கிறது.
அதைத் தொடந்து, ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து மூன்றாம் நாள் சாணத்தில் இருந்து மீண்டு எழுந்ததின் நினைவாக சாணியடித் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் நினைவாக, இந்த விழாவை அன்றிலிருந்து தொடர்ந்து நடத்தி வருவதாக இவ்விழா கொண்டாடுவதற்கான காரணம் சொல்லப்படுகிறது.
விழா நடைபெறுவதற்கு முன்பாகவே, கிராமத்தில் உள்ள அனைத்துப் பசு மாட்டின் சாணங்களும் சேகரிக்கப்பட்டுக் கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்படுகிறது. பின்னர் ஊர்க்குளத்தில் இருந்து சுவாமியை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். ஊரின் தெய்வமாகக் கருதப்படுகின்ற பீரேஸ்வரருக்கு சிறப்புப் பூசைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
பூசை செய்வதற்கு முன்பாக குளத்தில் குளித்துவிட்டுச் செல்லும் ஆண்கள் மேற்சட்டையின்றி கோயிலுக்குள் சென்று சிறப்பு பூசைகளைச் செய்கின்றனர். அதன் பிறகு, கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள சாணத்தை உருண்டையாக உருட்டிக் கொண்டு, பங்கேற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்கின்றனர். பெண்களும், ஊர் மக்களும் இதனை ஆர்வமாகக் கண்டுகளிப்பர்.
விழா நிறைவிற்குப் பின்னர் அங்கிருந்த சாணத்தை விவசாய நிலங்களுக்குக் கொண்டு போய் உரமாக இடுகின்றனர். விவசாய நிலத்தில் இடப்பட்ட அந்த சாணம் நல்ல உரமாக மாறுவதுடன், அங்கு விளையும் பயிர்கள் கூடுதலான அறுவடையைத் தரும் என்று நம்புகின்றனர்.
புடவை நோன்பு வழிபாடு:
புடவை நோன்பு என்பது நாட்டார் வழிபாடுகளில் ஒன்றாகும். இதனை புடவை படைத்தல், புடவை, வேட்டி படைத்தல், புடவை வழிபாடு என வேறு சில பெயர்களிலும் அழைக்கின்றனர்.
குடும்பத்தில் இறந்த முன்னோர்களை நினைவு கொண்டு வழிபடும் நிகழ்வாக, தை மாதம் முதல் நாள் புடவை நோன்பு நடத்தப்படுகிறது. முன்னோர்கள் பயன்படுத்திய வேட்டி, சேலை அல்லது இவைகளில் ஒன்றை வருடத்திற்கு ஒரு முறை எடுத்து வழிபடுகின்றனர். இதற்காக முதல் நாளே நன்னீர் நிலைகளில் சுத்தம் செய்து வைக்கின்றனர்.
இந்தத் துணிகளை முறுக்கி, பலகைக் கட்டையின் மீது வைத்து அலங்காரம் செய்கின்றனர். தலை வாழை இட்டு அதில் முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகளை வைத்துப் படைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல், அசைவ உணவு உண்பவர்களெனில், வெண் பொங்கலில் குழி அமைத்து அதில் கோழிக்கறிக் குழம்பு ஊற்றிப் படையல் இடுகின்றனர்.
தேங்காய் உடைத்து, தூப ஆராதனைகள் காட்டிய பிறகு சூடம் வைத்து ஆராதனை செய்கின்றனர். சூடம் அனைந்த பிறகு இலையிலிருக்கும் உணவுகளைக் காக்கைக்கு வைக்கின்றனர். முன்னோர்களே காக்கைகளாக வந்து உண்பதாக நம்புகின்றனர். காக்கை சாதம் எடுத்த பிறகு, குடும்பத்தினர் அனைவரும் உண்கின்றனர்.
சிலர் முன்னோர்கள் பயன்படுத்திய ஆடைகளுக்குப் பதிலாக, புதிதாக வாங்கி படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு புதிதாக ஆடை வாங்கிப் படைத்தால், அதனை மாலை நேரத்தில் சூடம் காட்டி வழிபட்ட பிறகு கட்டிக் கொள்கின்றனர்.