கங்கை, காவிரி போல புண்ணியவதி அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் பிள்ளைகளான பித்ரு தேவதைகளிடம் மிகுந்த பக்தி கொண்டவள். பித்ரு தேவதைகளை எப்படியும் தரிசிக்க வேண்டும் என அவள் விரும்பினாள். அதற்காக அவள் அச்சோதம் நதிக்கரையில் 8000 வருடங்கள் கடும் தவம் செய்தாள்.
அவளது தவத்தில் மனம் இரங்கிய பித்ரு தேவதைகள் ஒரே நேரத்தில் அவளுக்குக் காட்சி தந்தனர். ‘என்ன களை? என்ன அழகு? என்ன கம்பீரம்?’ என்று அவர்களைப் பார்த்து வியந்தாள் அச்சோதை. மாவசு என்ற பித்ரு தேவதையின் கம்பீரமான வடிவம் அச்சோதையை மிகவும் கவர்ந்தது. உடனே அவள் மனம் பேதலிக்கத் தொடங்கியது. ‘மாவசு எனக்குக் கணவராக வாய்த்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமயமாக விளங்கும்’ என்று நினைத்தாள். அதை உணர்ந்த மாவசு, ‘தெய்வமகள் ஒருத்தி இப்படி நடந்து கொள்கிறாளே’ என்று நினைத்தவன், ‘மனித பிறவி போல் நடந்து கொண்ட உனக்கு இனி சொர்க்கத்தில் இடம் இல்லை’ என்று கூறி அவளை பிடித்து பூமியில் தள்ளினான்.
அதனால் அலறித் துடித்த அச்சோதை, ‘இந்த சிறு தவறுக்கு இவ்வளவு கடும் தண்டனையா? எனது இத்தனை வருட தவத்துக்கு பலனே கிடையாதா’ என்று கேட்டாள். அதனால் சொர்க்கத்திலிருந்து பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அவள் அந்தரத்தில் அப்படியே அசையாமல் நின்றாள். அங்கிருந்தபடியே அவள் மீண்டும் கடுந்தவம் புரிந்தாள். அவளது தவத்தை மெச்சிய மாவசு அவளுக்கு தரிசனம் தந்தான். “மகளே, உனது தவறை மன்னித்தோம். உனக்கு சோதனை ஏற்பட்ட நாள் இனி அமாவாசை என்று உலகத்தாரால் அறியப்படட்டும்” என்று கூறி மறைந்தார்.
அச்சோதை மீண்டும் தனது தவத்தைத் தொடர்ந்தாள். அதன் பலனாக பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பித்ரு தேவதைகள் அனைவரும் அவளுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தனர். அவர்களிடம் தனது தவறை மன்னித்து ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டாள் அச்சோதை.
பித்ரு தேவதைகள் அப்படியே செய்ததுடன், “அச்சோதை பாவத்துடன் உன்னை நெருங்கும் தேவர்களின் பாவத்தை ஏற்று அவர்களைப் புனிதப் படுத்துவாயாக. துவாபர யுகத்தில் நீ மீன் வயிற்றில் பிறப்பாய். அப்போது உனது பெயர் மச்சகந்தியாக இருக்கும். பராசரன் என்ற முனிவரை மணந்து, வியாசர் என்ற மாமுனிவரின் தாய் ஆவாய். பின்பு சந்தனு மகாராஜாவின் தேவியாகி இரண்டு புத்திரர்களைப் பெறுவாய். அதன் பிறகு அச்சோதை என்ற புண்ணிய நதியாக மாறுவாய். உனக்கு இக்கட்டு நேர்ந்த இத்தினம் அமாவாசை என்று அழைக்கப்பட்டு இத்தினத்தில் எவரொவர் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்கிறார்களோ அவர்களை நாம் ஆசீர்வதிக்கிறோம். அந்த முன்னோரும் தங்கள் சந்ததியை வாழ வைப்பார்கள்” என்று வாழ்த்தி மறைந்தனர். இப்படித் தோன்றியதுதான் அமாவாசை தினம்.