திருவண்ணாமலை திருத்தலம் செல்வோர் ஆலய தரிசனத்தின்போது அண்ணாமலையாரோடு இன்னொன்றையும் முக்கியமாக தரிசித்து வருவார்கள். அதுதான் வல்லாள கோபுரம். இந்த கோபுரத்துக்கு அநேக மகிமைகள் உண்டு. இந்த கோபுரத்தின் உச்சியில் ஏறித்தான் அருணகிரிநாதர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்து முருகப்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். இந்த கோபுரத்தை கட்டியது வல்லாளன் எனும் மன்னன்.
அண்ணாமலையாரின் திருப்பணியில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்ட இம்மன்னன், இவன் பெயராலேயே இந்த கோபுரம் வல்லாள கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தை தரிசிக்கும்போது வல்லமை மிக்க மாமன்னன் வரலாறும் தெரியும்.
மாமன்னன் என்றாலும் அவனுக்கும் ஒரு குறை இருந்தது. அள்ளி அணைத்துக் கொஞ்சி மகிழ குழந்தை ஒன்று இல்லாத குறைதான் அது. அதற்காக அண்ணாமலையாரிடம் அனுதினமும் வேண்டி மன்றாடினான். அடியார்களிடம் சோதனை நடத்தாமல், அவர்களோடு திருவிளையாடல் புரியாது அருள்புரிவது என்பது ஈசனின் சரித்திரத்தில் கிடையாது.
அப்படித்தான் தென்னாடுடைய சிவபெருமான், வல்லாளன் வாழ்விலும் விளையாடத் துவங்கினார். வல்லாள மகாராஜனின் மனப்பக்குவத்தை சோதித்துப் பார்க்க திருவுளம் கொண்டார் இறைவன். அடியார் வேடங்கொண்டு அரசவைக்கு வருகிறார். வந்தவர் அண்ணாமலையார் என்பதை மன்னன் அறியவில்லை. வெண்ணீறு பூசிய திருமேனியும் கருணை ததும்பும் விழிகளுமாக சிவப்பழமாக நின்ற அந்த சிவனடியாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி வரவேற்று உபசரித்த பின், “அடியவரே யாது வேண்டும்?” என்று கேட்டான்.
மனதுக்குள் பெரும் சிரிப்பு சிரித்தவராய் மன்னனை ஆழ்ந்து நோக்கிய அந்த அடியவர் அவனிடம், “இன்று இரவு இன்பம் துய்க்க ஏற்ற நல்லிரவு. இதனை வீணாக்குதல் கூடாது. அதனால் இன்பம் துய்க்க ஒரு இளம் பெண் வேண்டும்” என்று நறுக்கென்று கேட்டார் சிவனடியார். சிவனடியார் இப்படிக் கேட்பார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை வல்லாளன். ஆயினும், என்ன செய்ய? கேட்பது சிவத்தொண்டரல்லவா? மறுத்தால் சிவன் நிந்தை புரிந்த குற்றத்திற்கு ஆளாக நேரிடுமே!
இறைவன் அடியார்க்கு ‘இல்லை’ என்ற பதிலே சொல்லக்கூடாது என்பதை உணர்ந்த மன்னன் மலர்ந்த முகத்துடன், “நீங்கள் சொன்னது மிகவும் நல்லதே. அவ்வாறே தருகிறோம்” என்று மறுமொழி கூறினான். காவலர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஆணையிட்டான். அன்றிரவு அடியவருடன் மஞ்சத்தில் தங்குவதற்கு ஏற்ற கன்னியைத் தேடிக் காவலர்கள் பரத்தையர்கள் இல்லங்களுக்குச் சென்றனர்.
அதே நேரத்தில் அண்ணாமலையார் நகரில் உள்ள அனைத்து பரத்தையர் வீடுகளிலும் ஒவ்வொரு ஆடவன் இருக்குமாறு இறைவன் செய்துவிட்டான். ஆதலால் பரத்தையர் எவருமே கிடைக்காது காவலர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். எல்லா பரத்தையருமே பிறர் வயப்பட்டிருக்கும் விஷயத்தை காவலர்கள் கூறியதைக் கேட்ட மன்னன், ‘அடியவரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத பாவியாகி விட்டேனே’ என புலம்பினான். இதனை அறிந்த மகாராஜனின் இளைய ராணியாகிய சல்லமா தேவி என்பவள் அடியவருடைய விருப்பத்தை நிறைவேற்ற தானே முன்வந்தாள். இரவு வந்தது. தூங்காமல் தூங்கும் பாவனையில் பஞ்சணையில் ஆழ்ந்திருந்தார் அடியவர் உருவிலிருந்த இறைவன்.
அடியவரின் துயிலைக் கலைக்கும் பொருட்டு அவரின் திருப்பாதத்தை லேசாகத் தொட்டாள் இளையராணி. அப்போதுதான் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த கணமே அடியவரின் திருமேனி குழந்தையாக மாறி மஞ்சத்தில் கிடந்தது. சிறிது நேரத்தில் அரசன் முதல் அவையோர் வரை பலரும் அங்கு கூடி விட்டனர். எல்லோரும் ஆனந்தப் பரவசமாகி அண்ணாமலையானை மனதில் நிறுத்தி வணங்கி நின்றனர். பிள்ளைக்கலி தீர்க்க வந்த அண்ணாமலையார் ஆகாயத்தில் ரிஷப வாகனத்தில் காட்சியளித்து, “மன்னா உனது பெருமையை உலகுக்கு உணர்த்தவே யாம் அடியவர் வேடம் தாங்கி வந்தோம்” என்று அருள்பாலித்தார்.
வல்லாள மகாராஜனின் குழந்தையில்லாப் பெருங்குறையை தீர்க்க எம்பெருமானே குழந்தையாக எழுந்தருளினார் என்பதால் வருடந்தோறும் வல்லாள மகாராஜனுக்கு ஈமக் கடன் செய்யும் பொருட்டு அண்ணாமலையார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப்பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி உத்திர கிரியை நடத்தி வரும் உத்ஸவம் திருவண்ணாமலையில் இன்றும் நடைபெற்று வருகிறது. ஈசனின் திருவிளையாடலுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, வல்லாள மகாராஜனால் கட்டப்பட்டதே இந்த பெருமைமிகு கோபுரம்.