நம் வீட்டில் அதிகமாக எதிர்மறை ஆற்றல் இருக்கும்போது தானாகவே சண்டை, சச்சரவு போன்ற பிரச்னைகள் வரத்தொடங்கும். இதனால், சில சமயங்களில் ‘நமக்கு பில்லி, சூனியம் போன்றவற்றை யாரேனும் வைத்துவிட்டார்களோ’ என்று கூடத் தோன்றும். இப்படி ஒரு வீட்டில் பில்லி, சூன்ய பிரச்னைகள் இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் இருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சில வீட்டில் வாழ்பவர்களுக்கு மன அமைதி என்பதே இருக்காது. ஆனால், அந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது மனம் நிம்மதியடையும், சாந்தமாக இருப்பர். அப்படியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக அர்த்தம். சில உயிரினங்கள் வீட்டிற்குள் வருவதை வைத்தும் அந்த வீட்டில் பில்லி, சூன்யம், ஏவல் பிரச்னைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
வீடுகளில் விஷ ஜந்துகள் நுழைந்தால், கஷ்ட காலம் வரப்போவதாக அர்த்தம். பாம்பு எல்லோர் வீட்டிற்குள்ளும் நுழையாது. வீட்டைச் சுற்றி இருக்குமே தவிர, வீட்டிற்குள் நுழைவது அரிது. அப்படி பாம்பு ஒரு வீட்டிற்குள் நுழைந்தால், குடும்பத்தில் ஏதோ ஒரு வகையில் மனக்கசப்பு ஏற்படவிருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
கருவண்டு ஒரு வீட்டிற்குள் நுழைகிறது என்பது நல்ல சகுனமில்லை. கருவண்டு மூலமாக செய்வினை செய்து அனுப்ப முடியும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கருவண்டு நம் வீட்டை வட்டமடித்துக் கொண்டிருப்பதற்கான அர்த்தம். கண்ணுக்குத் தெரியாத ஏதோ கெட்டது நடக்கவிருப்பதாகப் பொருள். மேலும், கருவண்டு நம் வீட்டிற்குள் வட்டமடித்து சுவற்றில் முட்டிக்கொண்டு இறந்துவிட்டால், இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வீட்டிற்குள் பூரான் வந்தால், பணக்கஷ்டம், மனக்கஷ்டம் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். வவ்வால் வீட்டிற்குள் வரவே கூடாது. அதுவும் இரத்தக் காயத்துடன் வவ்வால் வீட்டிற்குள் வருகிறது என்றால், அது ஏதேனும் கெட்ட சகுனத்திற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. பகல் நேரத்தில் வீட்டிற்குள் வவ்வால் வந்தால், செய்வினை மூலம் ஒரு இழப்பு நிகழப்போவதை சுட்டிக்காட்டுகிறது என்று அர்த்தம்.
வீட்டிற்குள் தேரை நுழைவதால், கணவன் மனைவிக்குள் செய்வினை மூலமாக சண்டை சச்சரவு வரும் என்று சொல்லப்படுகிறது. சில வீடுகளில் எறும்பு தொல்லையே இருக்காது. திடீரென்று பார்த்தால் சாரை சாரையாக எறும்புகள் அந்த வீட்டிற்குள் வரும். இது பார்ப்பதற்கும் வினோதமாக இருக்கும். இவ்வாறு நடந்தால், உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் வந்தால், அது வந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு மஞ்சள் கலந்த தண்ணீர் அல்லது கோமியத்தை தெளிக்கவும். வீட்டின் மூலை முடுக்கெல்லாம் சாம்பிராணி புகையை பரவ விடுங்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.