இருமல் உடல் வெளிப்படுத்தும் ஒரு டிஃபென்ஸ் மெக்கானிசம். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக சளியையோ, தூசியையோ வெளியே தள்ளும் ஒரு செயலாகும். மூக்கிலிருந்து நீர் ஒழுகி, சளி ஏற்பட்டாலும் இருமல் வரும். சாதாரண இருமலுக்கு சூடான தண்ணீர் குடித்தாலே போதும். சீதோஷ்ண நிலை மாறும்பொழுது மூக்கடைப்பு, ஜலதோஷம், இருமல் வருவது இயற்கை.
இருமலின் வகைகள்: இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருகிறது. ஒவ்வொரு முறை இருமும் பொழுதும் சளியும் சேர்ந்து வந்தால் சளி இருமல் என்றும், வீசிங்கால் வருவது, அதாவது காற்றுப்பாதை சுருங்குவதால் விசில் சத்தத்துடன் இருமல் வருவது.
அறிகுறிகள்: வறட்டு இருமல் ஒரு அறிகுறி. இது தனிப்பட்ட நோய் அல்ல. ஒவ்வாமை உணவு மற்றும் காற்று மாசு, சைனஸ் எனப்படும் பிரச்னை, தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று மற்றும் மருந்துகளின் பக்கவிளைவாகக் கூட ஏற்படும். இருமல் வந்தால் அடக்கக் கூடாது. அடக்கினால் இன்னும் அதிகமாகும். இருமல் வருவதற்கு முன்பு அதற்கான அறிகுறிகள் தொண்டை கம்முதல், அரிப்பு, எரிச்சல் ஏற்படுதல், தொண்டையில் முள் தைத்த மாதிரி குத்துதல், பசியின்மை, மார்பில் இறுக்கம் போன்றவை இருக்கும்.
காரணங்கள்:
* பொதுவான காரணங்கள் ஜலதோஷம், காய்ச்சல், சுவாசத் தொற்று நோய்கள், காற்றுப் பாதைகளை வீக்கப்படுத்துவதன் மூலம் வறட்டு இருமலைத் தூண்டும்.
* பூக்களின் மகரந்தம், தூசி பூச்சிகள், சில உணவுகள், செல்லப்பிராணிகளின் மூலம் ஏற்படும் ஒவ்வாமை போன்றவை இருமலுக்கு வழிவகுக்கும்.
* புகை, காற்று மாசு, சுவாச மண்டலத்தை எரிச்சலடைய செய்யும் நாற்றங்களும் இருமலை ஏற்படுத்தும்.
* உயர் இரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் வறட்டு இருமலைத் தூண்டும்.
வீட்டு வைத்தியங்கள்:
* இந்த நேரத்தில் வெந்நீரில் கல் உப்பை போட்டு வாய் கொப்பளிக்கலாம். துளசி, இஞ்சி சாறு குடிக்கலாம். தொண்டைக்கு இதமாக இஞ்சி டீ அருந்தலாம். இவையெல்லாம் இருமலை வராமல் செய்துவிடும்.
* அதிமதுரப் பொடியை சிறிது நீரில் கலந்து பருக நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகு பொடி சேர்த்து பருக வறட்டு இருமல் குணமாகும்.
* ஒரு பெரிய துண்டு இஞ்சியை ஒரு கப் நீரில் துருவிப் போட்டு கொதிக்க விட்டு ஆறியதும் சிறிது தேன் கலந்து பருகலாம்.
* இருமல் ஏற்பட்டால் குளிர்ச்சியான பானங்களையோ, உணவையோ சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுடன் எளிதில் மலத்தை இளக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
* தொண்டையை தொந்தரவு செய்யும் விஷயங்களில் இருந்து புகை, காற்று மாசு போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது, முகக் கவசம் அணிவது சிறந்த பலனைத் தரும். ஒவ்வாமையால் ஏற்படும் இருமலை குறைக்க நம் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகும் வைத்துக்கொள்வது நல்லது.
வறட்டு இருமலுக்கு தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் தொண்டை மற்றும் மார்பு பகுதியில் அசௌகரியத்தை உண்டுபண்ணுவதுடன் தூக்கத்தையும் கெடுத்து விடும். இருமலுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது தொடர்ந்தால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. பொது இடங்களில் மூக்கு, வாய் பகுதியை மறைக்கும் முகமூடியை அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு அது பரவாமல் இருக்கும்படி செய்யலாம்.