வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும், கணிதம் நன்றாகப் போட முடியும் என்று சொல்லி நம் வீடுகளில் நம்மை வெண்டைக்காயை சாப்பிட வைத்திருப்பார்கள். எனவே, வெண்டைக்காய் நமக்கு நன்கு பரிச்சயமான காய்கறிதான். ஆனால், கஸ்தூரி வெண்டை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கஸ்தூரி வெண்டை மிகவும் அரிதான மருத்துவ குணங்களைக் கொண்ட காய்கறியாகும். இது வெண்டை ரகங்களில் முக்கியமான ஒன்று. கஸ்தூரி வெண்டையின் பூ, காய் மற்றும் இளம் தளிரை சமையலுக்குப் பயன்படுத்தலாம். இதனுடைய விதையை அரைத்து அதிலிருந்து வாசனை திரவியம் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
கஸ்தூரி வெண்டை களைச்செடி போலவே வேகமாக வளரக் கூடியதாகும். இரண்டே மாதத்தில் காய்கள் கொத்து கொத்தாக காய்க்க ஆரம்பித்துவிடும். இந்த கஸ்தூரி வெண்டையை காயாக இருக்கும்போது சமையலுக்குப் பயன்படுத்தலாம். அதுவே காய் காய்ந்து போய் விட்டால், அதன் விதைகளைக் காய வைத்து அரைத்து காபி போட பயன்படுத்தலாம்.
இதனுடைய பல்வேறு பாகங்கள் ஆயுர்வேத மூலிகையில் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய பெயருக்கு ஏற்றவாறு நல்ல நறுமணம் மிக்கது. எல்லா சீசனிலும் இச்செடி காய்கள் கொடுக்கும். மாடி தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது என்பதால், இதை சுலபமாக வளர்க்கலாம்.
கஸ்தூரி வெண்டையில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால், அதை அப்படியே பச்சை காய்கறியாகவே சாப்பிடலாம். இதனுடைய இலையை கீரையாக சமையலுக்குப் பயன்படுத்தலாம். மேலும், இதனுடைய இளம் இலைகளில் சூப் வைக்கலாம்.
கஸ்தூரி வெண்டையின் விதையை அரைத்து எண்ணெய் எடுக்கப் பயன்படுத்துகிறார்கள். இதன் விதை இனிப்பாக இருப்பதால், ஐஸ்கிரீம் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
ஐ.டி துறையில் தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்பவர்கள் மனதில் அடுத்த கட்டத்தை சிந்திக்க தேக்கம் இருக்கும். அவர்கள் இந்த கஸ்தூரி வெண்டையை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால், சிந்தனை அதிகரித்து மூளை சுறுசுறுப்பாகும். படிக்கும் மாணவர்கள் இதை எடுத்துக்கொண்டால் நினைவாற்றல், வேகமாக சிந்திக்கும் சக்தி கிடைக்கும்.
நரம்பு சம்பந்தமான பிரச்னை, வயிற்று பிரச்னைகளைப் போக்கவும் இது உதவுகிறது. வெண்டைக்காயை சமைப்பது போலவே இந்த கஸ்தூரி வெண்டையை கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.