
அதிகாலை எழுந்ததும் எம்பெருமானின் வேங்கடேச சுப்ரபாதமான,
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்’
எனத் தொடங்கும் சுலோகத்தை பலரும் பக்திப் பரவசத்துடன் கேட்டு வழிபடுவதைக் கண்டிருப்போம். அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தில் வரும் ஸ்லோகங்களின் பொருள்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
திருவேங்கடமுடையானை துதி செய்து திருப்பள்ளி எழச் செய்வதற்காகப் பாடப்பட்ட ஸ்தோத்திரமே ஸ்ரீ வேங்கட சுப்ரபாதம் ஆகும். அது வடமொழியில் இயற்றப் பெற்றதாகும். அதில் மொத்தம் இருபத்தொன்பது சுலோகங்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் சுலோகத்தில் வேங்கடேசர் இராமபிரானாக உருவகப்படுத்தி துயில் எழுப்பப்படுகிறார்.
இரண்டாவது சுலோகத்தில் அவர் கோவிந்தனாக அழைக்கப்பட்டு துயில் எழுப்பப்படுகிறார். மூன்றாம் சுலோகத்திலும் நான்காம் சுலோகத்திலும் மகாலட்சுமி தாயார் துயில் எழுப்பப்படுகிறார். ஐந்தாவது சுலோகத்திலிருந்து மீண்டும் வேங்கடேசரே துயில் எழுப்பப்படுகிறார்.
ஐந்தாம் சுலோகத்திலும் ஆறாம் சுலோகத்திலும் சிவபெருமான் முதலான தேவர்களும், அத்ரி முதலான முனிவர்களும் வந்து வேங்கடேசரின் சேவைக்குக் காத்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றன.
ஏழாம் சுலோகத்தில் காற்று, எட்டாம் சுலோகத்தில் கிளிகள், ஒன்பதாம் சுலோகத்தில் நாரதர், பத்தாம் சுலோகத்தில் வண்டினங்கள், பதினோராம் சுலோகத்தில் தயிர்க் குடம், பன்னிரண்டாம் சுலோகத்தில் வண்டினங்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லப்படுகின்றன.
பதிமூன்றாம் சுலோகம் எம்பெருமானின் சிறப்பை விவரிக்கிறது. பதினான்காம் சுலோகத்தில் அடியார்களின் நிலை விவரிக்கப்படுகிறது. பதினைந்தாம் சுலோகத்தில் வேங்கடமுடையானின் ஆறு மலைகளைப் பற்றி விவரிக்கப்படுகின்றன. சிம்மாசலம் ஏழாவது மலையாகும்.
பதினாறாம் சுலோகத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள்,பதினேழாம் சுலோகத்தில் ஆதிசேஷன் முதலானவர்கள், பதினெட்டாம் சுலோகத்தில் நவகிரகங்கள் முதலானவர்களின் நிலை விவரிக்கப்படுகிறது.
பத்தொன்பதாம் சுலோகத்திலிருந்து இருபத்து மூன்றாம் சுலோகம் வரை அடியார்களும் நித்யசூரிகளும் திருவேங்கடமுடையானின் அருளுக்காக ஏங்கியிருப்பதை விவரிக்கின்றன.
இருபத்து நான்காம் சுலோகத்தில் பரந்தாமனின் தசாவதாரங்களைப் பற்றிச் சொல்லப்படுகின்றன. இருபத்தைந்தாம் சுலோகத்தில் திருமஞ்சனத் தீர்த்தம் கொண்டு வரும் அடியார்கள், இருபத்தாறாம் சுலோகத்தில் மங்களா சாசனம் செய்யும் அடியார்கள், இருபத்தேழாம் சுலோகத்தில் மங்கலப் பெருள்களுடன் வந்திருப்பவர்கள், இருபத்தெட்டாம் சுலோகத்தில் பகவானின் அருளை நாடி வந்திருக்கும் பக்தர்கள் முதலானவர்களுக்கு அருள் செய்தல் வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது.
இருபத்தொன்பதாம் சுலோகத்தில் தினமும் அதிகாலை நேரத்தில் சுப்ரபாதத்தை எவறொருவர் தினமும் உடல் தூய்மையுடனும் உள்ளத் தூய்மையுடனும் படித்தாலும் அல்லது பாராயணம் செய்தாலும் பரம்பொருளாகிய திருமலையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வேங்கடேச பெருமாளின் அருளும் ஆசியும் முழுமையாகக் கிட்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.
அனுதினமும் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தை கேட்டோ அல்லது பாராயணம் செய்தோ திருவேங்கடமுடையானின் அருளைப் பெறுவோம்.