
திருவண்ணாமலை திருத்தலம், சிவபெருமானுக்கு உரிய பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகும். இங்குள்ள மலை அடிவாரத்தின் கீழ் சிவாலயம் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தன்று இந்த மலை மீது ஏற்றப்படும் தீபத்தில் ஈஸ்வரன் அருள்பாலிக்கிறார். இங்கு மலையே சிவலிங்கமாகும். இந்த மலையை சுற்றி வருவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. திருவண்ணாமலை மிகவும் பழைமை வாய்ந்த புண்ணியத் திருத்தலமாகும். அதாவது, இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அண்ணாமலையார் கோயில் இருபத்திநான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அண்ணாந்து பார்க்கும் அளவு உயரம் கொண்ட மலையே அண்ணாமலை. இந்தத் தலம் பௌர்ணமி நாளில் மிகவும் விசேஷம் என்பதால் பதினான்கு கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றுவட்ட பாதையில் கிரிவலமாக வந்து அருணாசலேஸ்வரரை வணங்க வேண்டும். ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன் வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பௌர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் அண்ணாமலையாரை கிரிவலம் செல்வது மரபு. இதில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் எல்லோரும் அமாவாசையன்றும் பௌர்ணமியன்றும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வலம் வந்து சிவனின் அருளைப் பெறுகின்றனர். அன்று நாமும் பௌர்ணமி அமாவாசைகள் அன்று வலம் வருவதால் நமக்கு சகல நன்மைகளும் ஏற்படும்.
மலையை வலம் வரும்போது வலமிருந்து இடமாகவும், மேல்சட்டை அணியாமலும், தலைப்பாகை அணியாமலும், காலில் செருப்பு அணியாமலும் வலம் வர வேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பல இலட்சக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டால் நமது முற்பிறவி பாவங்களை அழித்து விடும் என்பது உண்மை.
அவரவர் உடைமைகளை கையில் பிடித்துக்கொண்டு வலம் வருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், கிரிவலம் வரும்போது மனதில் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல், எங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்க வேண்டும். கிரிவலம் முடித்தவுடன் உடனே குளிக்கக் கூடாது, தூங்கக்கூடாது.
ஞாயிறு பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் கயிலாயம் சேரும் பாக்கியம் கிடைக்கும்.
திங்கள் பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் செல்வ வளம் கிடைக்கும்.
செவ்வாய் பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் வறுமை மற்றும் கடன் நீங்கும்.
புதன் பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியையும் முக்தியையும் தரும்.
வியாழன் பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் ஞானத்தைத் தரும்.
வெள்ளி பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் விஷ்ணு லோகமான வைகுண்ட பதவியை அடையலாம்.
சனி பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பம் நீங்கும், பிறவிப் பிணிகளைப் போக்கும்.
அஷ்டமி தினத்தன்று கிரிவலம் வந்தால் நம்மிடம் இருக்கும் தீய வினைகள் நீங்கும்.
அமாவாசை, பௌர்ணமிகளில் கிரிவலம் வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஆளுமை முழுமையாக இருக்கும். இந்த நாளில் சந்திரனின் சக்தி அதிகரிக்கும். நல்ல சக்திகள் மேலோங்கி நிற்கும். எனவே, இந்த சிறப்பு மிகுந்த நாளில் கிரிவலம் வருவதால் சந்திரனை ஆபரணமாகக் கொண்ட சிவபெருமானின் முழுமையான அருளையும் திருவண்ணாமலையில் மோட்சமடைந்த சித்தர்களின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
கிரிவலத்தன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும். அனைத்து உயிரினங்களுக்கும் தானம் செய்தால் சித்தர்களின் ஆசிகளைப் பெறலாம். இதனால் முன்ஜன்ம பாவங்கள் நீங்கி, பிறவிப் பலன் கிடைக்கும்.
பௌர்ணமி சக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நிலவு மிகவும் பிரகாசமாக இருப்பதால் இது தெய்வீக சக்தியின் வெளிப்பாடு என்று நம்பப்படுகிறது. இதனால் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வதன் மூலம் தெய்வீக சக்தியை நம்மால் பெற முடியும் என்று நம்பப்படுகிறது. பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்பொழுது அக்னி லிங்கத்தை வழிபாடு செய்வதால் ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். மிகவும் சக்தி வாய்ந்த கிரிவலம் சென்றாலே நமது இஷ்டங்கள் நிறைவேறி, கஷ்டங்கள் நீங்கி விடும். அருணாசலேஸ்வரரின் பரிபூரண அருளும் கிடைக்கும்.