
ஒரு நல்ல காரியத்தை செய்யத் தொடங்கும் பொழுது யாராவது தும்மினால் அல்லது எங்கிருந்தாவது தும்மல் சத்தம் கேட்டால் நாம் ஒரு நிமிடம் நிதானிப்போம். பிறகுதான் எடுத்த காரியத்தில் ஈடுபடுவோம். அதேபோல், யாராவது வீட்டில் தூங்கி எழுந்திருக்கும் பொழுதே தும்மிக் கொண்டு எழுந்தால் திட்டுவோம். அப்படித் தும்மல் தும்மும்போது நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
ஒருவர் பல முறை தும்மினால் காரிய ஸித்தி உண்டாகும். தும்மின பிறகு இருமினால் லாபம் உண்டாகும். தாம்பூலம் தரித்துக்கொள்ள போகும்போதும், தாம்பூலம் தரித்துக்கொண்டே தும்முதல், போஜனம் செய்ய தொடங்குகையில் மற்றும் படுக்கைக்குப் போகும் போதும் தும்முதல் நலம் சேர்க்கும்.
ஒருவர் தும்மும் போது செம்பு, பித்தளை போன்ற பொருட்களைத் தொட்டுக் கொண்டிருந்தால் அவர் செய்து கொண்டிருக்கும் அந்தக் காரியம் நலமுடன் நடைபெறும். அதே கைகள் இரும்பு மற்றும் வெள்ளி பொருட்களைப் பிடித்துக் கொண்டிருந்தால் செய்யும் காரியம் கெடும். மேலும், இளம் பிள்ளைகள், குழந்தைகள் இப்பொழுது தும்மினால் காரியம் வெற்றி அடையும்.
ஒருவர் தும்மிக் கொண்டே தூக்கத்திலிருந்து படுக்கையை விட்டு எழுந்தால் நல்லது. தும்மிக் கொண்டு உட்கார்ந்திருத்தல் ஆகாது. இதனால் செய்யும் காரியம் கெடும். ஒரு விஷயத்தை ஆலோசிக்கும் போதும், முக்கியமான விஷயம் பொருட்டு பிரயாணம் செய்யும் போதும் நான்கு கால்களை உடைய உயிரினங்களில் ஏதேனும் ஒன்று தும்மினால் தீமை விளையும். அதேபோல், ஒருவர் போராடிக் கொண்டே தும்மினால் மேற்கொள்ளும் காரியத்துக்கு பங்கம் ஏற்படும்.
ஒரே தும்மல் தீமை. தும்மின பிறகு மூக்கை சுத்தம் செய்தால் துர் சம்பவம். ஒரே தும்மல் தும்மின போதும், உடனே சுத்தம் செய்த போதும் எடுத்த காரியத்தை செய்யாமல், காலம் தாழ்த்தி பிறகு செய்தால் தோஷம் இல்லை.
இந்த தும்மல்கள் இயற்கையாக நிகழ்ந்தால்தான் இந்த விதி பொருந்தும். ஏதாவது மூக்கைத் துளைக்கும் வாசனையினாலும், அதன் நெடியினாலும், மூக்குப்பொடி போடுவதால் உண்டாகும் தும்மலுக்கு பலன் இல்லை. அதைப் பார்த்து யாரும் பயமோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை.