
அழகிய மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிரம்பிய ஹிமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் காஷாவ்ரி கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற, அதிசயம் நிறைந்த பிஜிலி மகாதேவர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அதன் அமைதி மற்றும் இயற்கை அழகுக்கும் பிரபலமானது. கடல் மட்டத்தில் இருந்து 2,460 மீ. உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் கஹால் மலைத்தொடரில் உள்ள உயரமான மலையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப் பழைமையான கோயில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் பலர் வந்து மஹாதேவரின் அருளைப் பெறுகின்றனர். இந்தக் கோயிலுடன் தொடர்புடைய பல மர்மமான கதைகள் மற்றும் புராணக் கதைகள் அதன் மர்மத்தை மேலும் அதிகரிக்கின்றன.
முன்பொரு காலத்தில் குலு மலைப்பிரதேசத்தில் குலந்த் என்ற ஒரு பெரிய அரக்கன் வசித்து வந்தான். இவன் அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் தொல்லைகளைக் கொடுத்தான். நாளாக நாளாக அரக்கனின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. ஒரு நாள் மிகப்பெரிய நாக வடிவத்திற்கு மாறிய அசுரன், பூமியை தண்ணீரில் அமிழ்த்தி அனைத்து ஜீவராசிகளையும் கொல்ல முயற்சி செய்தான்.
எல்லை மீறிய அசுரனை சிவபெருமான் வதம் செய்து மலையாக மாற்றினார். அந்த மலையின் மீதுதான் பிஜிலி மஹாதேவர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை முதன் முதலாக பஞ்சபாண்டவர்கள் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோயில் மீது 12 வருடங்களுக்கு ஒருமுறை மின்னல் அடிக்க இந்திரனுக்கு சிவபெருமான் கட்டளையிட்டதாக செவிவழிக் கதைகள் சொல்லப்படுகின்றன. அதனால், ஒவ்வொரு 12 வருடங்களுக்கு ஒரு முறை சரியாக இந்தக் கோயிலில் மின்னல் தாக்கி சிவலிங்கத்தை உடைக்கிறது. இந்தத் தொடர் சம்பவம் உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் ஆச்சர்யத்தை தருகிறது. இந்த மர்மத்தை இதுவரை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
மின்னல் தாக்குதலில் உடைப்பட்ட சிவலிங்கத்தை கோயிலின் பூசாரிகள் ஒன்று சேர்த்து அதை கடலை மாவு, பருப்பு மற்றும் சிறிது உப்பு சேர்க்காத வெண்ணெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பசையைப் பயன்படுத்தி ஒன்றாக இணைக்கின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு சிவலிங்கம் முன்பு போலவே மாறிவிடுகிறது. இது அனைவருக்கும் ஆச்சரியப்பட வைக்கிறது.
சில விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த இடம் ஒரு உயரமான மலையில் உள்ளது. இந்த மின்னல் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக இந்த இடத்தில் அடிக்கடி தாக்கக் கூடும். இந்த இடத்தில் காற்றும் ஈரப்பதமும் அதிகம். அதனால் அவை மின்னலை ஈரக்க சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால் , மின்னல் அடிக்கடி அந்தப் பகுதியில் விழுவதில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவலிங்கத்தின் மீது மட்டும் சரியாக விழுகிறது என்பதுதான் ஆச்சர்யம்.
அதுபோல, அதே லிங்கத்தை ரசாயான ஒட்டுதல் எதுவுமின்றி சாதாரண அபிஷேகப் பொருட்களை வைத்து ஓட்டி சரி செய்ய முடிகிறது. இதுவும் இன்னொரு ஆச்சர்யமாக உள்ளது. உள்ளூர்வாசிகள் தீய சக்திகளை மஹாதேவர் தன்னுள் கிரகித்துக் கொண்டு மக்களை காப்பாற்றுகிறார் என்று கூறுகின்றனர். தீமைகளை இறைவன் எடுத்துக் கொண்டு மக்களுக்கு அருளையும் அதிர்ஷ்டத்தையும் கொடுப்பதாக நம்புகின்றனர்.
இந்தக் கோயிலுக்குச் செல்ல சண்டிகர் அல்லது குலு வரை விமானம் வழியாக செல்லலாம். ரயில் மூலமாக சிம்லா வரை சென்று அதன் பின்னர் பேருந்து மற்றும் சிற்றுந்து மூலமாக குலுவை அடையலாம். அங்கிருந்து 3 கி.மீ. தூரம் நடந்து சென்றும் கோயிலை அடையலாம்.