
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கோலார் மாவட்டத்தில் கோலாதேவி என்ற சிறிய கிராமத்தில்தான் உலகிலேயே கருடனுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஸ்ரீ ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பெருமாள் கோயில்கள் அனைத்திலும் பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிராக கருடன் சன்னிதி அமைந்திருக்கும். ஆனால், கருடனே மூலவராக வீற்றிருந்து அருள் செய்வது இந்தக் கோயிலில் மட்டும்தான்.
ராமாயணக் காவியத்தில் இலங்கை மன்னன் ராவணன், சீதையை கடத்திச் சென்றான். அவனிடமிருந்து சீதையை காப்பாற்றுவதற்காக ஜடாயு என்ற பறவை ராவணனுடன் சண்டையிட்டது. ஆனால், ராவணன் ஜடாயுவின் சிறகுகளை தனது வாளால் வெட்டியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பறவை போராடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த ராம, லக்ஷ்மணர்களிடம் ராவணன் சீதையை கடத்திச் சென்ற விஷயத்தை சொல்லி, ராமரின் காலடியிலேயே உயிரை விட்டது ஜடாயு. ராமபிரான் தனது கைகளாலேயே ஜடாவிற்கு இறுதிச் சடங்கு செய்து அது உயிர் விட்ட இடத்திலேயே ஜடாயுவை அடக்கம் செய்தனர். அதனால் இந்த இடத்திற்கு கோலாதேவி என்ற பெயர் உருவாகியது. கலி யுகத்தில் ஜடாயு கருடனாகக் கருதப்படுகிறது.
மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் ஒரு சமயம் வேட்டைக்குச் சென்றான். அர்ஜுனன் எய்திய பலமான சக்தி வாய்ந்த அம்பினால் காடே தீப்பற்றி எரிந்தது. இதில் ஏராளமான பாம்பு இனங்கள் தீயில் கருகி சாம்பல் ஆயின. இதன் காரணமாக அர்ஜுனனுக்கு சர்ப்ப தோஷம் ஏற்பட்டது. தனது சாபம் தீர பல முனிவர்களிடம் சென்று வழி கேட்டான் அர்ஜுனன். அந்த முனிவர்கள் அளித்த அறிவுரையின்படி இத்தல கருடனை வழிபடத் துவங்கினான் அர்ஜுனன். அவன் செய்த கடும் தவத்தின் பலன் மற்றும் பூஜையின் பலனாக பாம்புகளை அழித்த பாவங்களில் இருந்து வெளியே வந்தான்.
அன்று முதல் சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷங்களைப் போக்கும் தலமாக இந்த கருடன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கருடன் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் ஒரு காலை மடக்கி, மண்டியிட்ட கோலத்தில் காட்சி தருகிறார். அவரைச் சுற்றி எட்டு பாம்புகள் அவரது நகைகளாக உள்ளன. இந்த ஒற்றைக்கல் கருடன் சிலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராமானுஜரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இவர் தனது வலது கரத்தில் மகாவிஷ்ணுவையும் இடது கரத்தில் மகாலட்சுமியையும் சுமந்த நிலையில் காட்சி தருகிறார். மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி என்பதால் இடது கரத்தை சற்று உயர்த்திப் பிடித்தபடி உள்ளார் கருடன்.
மகாவிஷ்ணுவும் இந்த கருடனும் மகாலட்சுமியை காண்பது போல காட்சி தருகிறார்கள். அதேசமயம் மகாலட்சுமி பக்தர்களை நோக்கி பார்வையை செலுத்தியவாறு காட்சி தருகிறார். திருமாலின் வாகனமான கருடன் இங்கு மூலவராக வீற்றிருந்து அருள்செய்வதால் இவரை பெருமானின் அம்சமாகவே கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள். கருடன் மற்றும் அனுமனுக்கு தனித்தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. இவர்கள் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்ப்பது போல் சரியான சீரமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது ஆச்சரியம்.
ஸ்ரீ ராமபிரானே ஜடாயுவுக்கு இறுதிச் சடங்கு செய்ததால், ஜடாயு ஸ்ரீராமரின் தந்தை ஸ்தானத்தை பெறுகிறார். மகாவிஷ்ணுவின் அம்சமான இத்தல கருடனின் அருளைப் பெற்றால் ஸ்ரீராமனின் அருளை பெறுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.
இந்தக் கோயிலில்தான் அனைத்து சர்ப்ப தோஷங்களும் ஒரே நேரத்தில் நீக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கருடனுக்கு கற்பகுடி கிடையாது. கருடனுக்காக வழங்கப்பட்ட கற்பகுடி கொண்ட ஒரே கோயில் இதுவாகும். எனவே, ‘கருட தேவாலயம்’ என்றே இது அழைக்கப்படுகிறது.