
குங்கிலியக்கலய நாயனார் என்பவர், 63 நாயன்மார்களில் ஒருவர். காவிரி பாயும் சோழவள நாட்டில் திருக்கடவூர் திருத்தலத்தில் கலயனார் என்ற சிவனடியார் தினமும் அமிர்தகடேஸ்வரருக்கு குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை தவறாது செய்து வந்தார். ஆதலால் அவரை ‘குங்கிலியக்கலயர்’ என்று அழைத்தனர்.
இவர் வறுமையில் வாடியபோதும் தாம் செய்து வரும் திருப்பணியை வழுவாது செய்து வந்தார். இவரது வறுமை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, தமது நிலங்களை விற்றார். காளை கன்றுகளையும் விற்றார். அப்படியிருந்தும் கலயனார்க்கு ஏற்பட்ட வறுமை குறைந்தபாடில்லை. இதனால் அவர் தமது வாழ்க்கை வசதிகளை சிறுகச் சிறுக குறைத்துக் கொண்டாரே தவிர, திருக்கோயிலுக்குச் செய்யும் தொண்டான குங்கிலியம் வழங்குவதை மட்டும் குறைக்கவில்லை.
வறுமையை தாங்க முடியாத அவருடைய மனைவி, தன்னுடைய திருமாங்கல்யத்தை கழற்றி கணவரிடம் கொடுத்து அதை விற்று பணம் பெற்று நெல் வாங்கி வருமாறு கேட்டுக்கொள்ள, இதனால் மனம் துடிதுடித்துப் போன கலயனார் வேறு வழியின்றி திருமாங்கல்யத்தை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
அவரது சிந்தனை முழுவதும் நெல் வாங்கும் எண்ணத்தில் இல்லாமல், மறுநாள் கோயிலுக்கு குங்கிலியம் வாங்க வேண்டும் என்பதில்தான் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல எதிரில் வணிகன் ஒருவன் குங்கிலியப் பொதியுடன் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்த கலயனாருக்கு பசியில் வாடும் குழந்தைகளோ, மனைவியின் முகமோ தெரியவில்லை. ‘ஆஹா, நாளை எம்பெருமானுக்கு குங்கிலியம் கொடுக்க வாய்ப்பு கிடைத்து விட்டது’ என்று மகிழ்ந்து வணிகனை அணுகி, ‘மாங்கல்யத்தை எடுத்துக்கொண்டு குங்கிலிய பொதியைக் கொடு’ என்றார்.
வணிகனும் மகிழ்ச்சியுடன் குங்கிலியப் பொதியை அவரிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, கோயிலுக்கு விரைந்தார் நாயனார். குங்கிலிய மூட்டையை கோயிலில் சேர்த்துவிட்டு அங்கேயே தங்கியும் விட்டார். மனைவியோ, ‘கணவன் வருவார், குழந்தைகளின் பசியை போக்கலாம்’ என்றெண்ணி எதிர்பார்த்து ஏமாந்தாள். குழந்தைகள் பசியால் வாடி அழுவதற்குக் கூட சக்தியின்றி தூங்கி விட்டன.
இறைவன் கலயனார் இல்லத்தில் அருள்பொழிய எண்ணி, நெல்லும் மணியும் பொன்னும் பட்டாடையும் குவியச் செய்தார். கணவன், மனைவி இருவரது கனவிலும் எழுந்தருளி இச்செய்தியை அருளி மறைந்தார். திடுக்கிட்டு துயிலெழுந்தவள், வீட்டில் பொன்னும் மணியும் நெல்லும் குவிந்து கிடப்பதைக் கண்டு எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தாள். இரவென்றும் பாராது உணவு சமைத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் உண்டனர். எளியவனையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட எம்பிரானின் கருணையை போற்றிப் புகழ்ந்து துதித்தனர். இவரது பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணிய இறைவன் ஒரு திருவிளையாடல் புரிந்தான்.
திருப்பனந்தாள் கோயிலில் உள்ள இறைவனுக்கு மலர்மாலை அணிவிக்க வந்த தாடகை என்ற பெண் இறை வழிபாடு முடிந்த பின் மாலையை அணிவிக்கப்போகும் சமயத்தில் அவளுடைய ஆடை சற்று நெகிழ்ந்தது. ஆடையை இரண்டு கைகளாலும் இறுகப் பற்றி கொண்டு இறைவனுக்கு மாலை போட முயன்று முடியாமல் போக இறைவன் அப்பெண்ணிற்காக மனமிரங்கி சற்று சாய்ந்து கொடுக்க மாலையை அணிவித்து மகிழ்வுடன் சென்றாள். அன்று முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்து காணப்படவே, சோழ மன்னன் சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நிமிர்த்த பல முயற்சிகள் செய்தான். யானைகளை சிவலிங்கத்துடன் சேர்த்து கயிற்றால் கட்டி இழுக்கச் செய்தும் சரியாகவில்லை.
இந்த விஷயம் ஊரெங்கும் காட்டுத் தீ போல பரவ, குங்கிலிய நாயனார் காதுகளுக்கும் இந்தத் தகவல் எட்டியது. கோயிலை அடைந்த குங்கிலிய நாயனார் குங்கிலிய புகையினால் இறைவனின் சன்னிதியை தூபமிட்டு வணங்கி ஒரு கயிற்றை எடுத்து ஒரு பக்கத்தை எம்பெருமானுடைய திருமேனியில் இணைத்து மறுபக்கத்தை தன்னுடைய கழுத்தில் கட்டிக்கொண்டு பலமாக இழுத்தார். தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து இழுக்க, ஈசன் அந்த அன்பிற்கு அசைந்து கொடுத்து நேராக நிமிர்ந்தார்.
கலயனார் கழுத்தில் போட்டிருந்த சுருக்குக் கயிறு பூமாலையாக மாறியது. ஈசனின் கழுத்திலிருந்த கயிறு கொன்றைப்பூ மாலையாக மாறியது. குங்கிலியகலயனாரின் பக்தியை இறைவன் உலகிற்குக் காட்ட, மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர். சோழ மன்னன் கலயனாரின் பாதங்களில் விழுந்து வணங்கி அவருக்கு மானியங்கள் கொடுத்து கௌரவப்படுத்தினான்.