நமது உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காததும் அல்லது அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்போதும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோய் வருகிறது. இதனால் இதயநோய், சிறுநீரகக்கோளாறு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சமீபத்தில் பிரபலமாகப் பேசப்படுவது என்னவென்றால், ஒட்டகப் பாலில் இன்சுலின் இருப்பதாகவும், அதை அருந்துவதன் மூலம் சர்க்கரை நோய் குணமாவதாகவும் சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இன்சுலின் என்பது ஒரு Peptide என்னும் புரதமாகும். டைப் 1 டயாபடீஸ் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுத்தமாக சுரக்காத காரணத்தால், அதை ஊசியின் மூலம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்சுலினை மாத்திரை வடிவத்தில் எடுத்துக்கொள்வதால், அது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து Coagulum ஆக உருமாறி விடுகிறது. மாத்திரையாக இன்சுலினை எடுத்துக்கொண்டாலும் அது வயிற்றிலிருந்து இரத்தத்திற்கு ஊறிஞ்சிக் கொள்ளப்படாத காரணத்தால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இன்சுலினை ஊசியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், ஒட்டகப் பாலில் Insulin mimicking peptide என்னும் காம்போனன்ட் உள்ளதால் இது பாலுடன் சேர்ந்து அதனுடைய தன்மைகளைக் கொண்டிருப்பதால், வயிற்றில் உள்ள ஜீரண அமிலம் இதை பாதிக்காமல் Coagulum என்பது உருவாகாமல் இரத்தத்தில் கலந்து சர்க்கரையை குறைப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இதனால் Type 2 diabeticsல் எந்த மாற்றமும் ஏற்படாது. டைப் 2 டயாபடீஸ் பிரச்னை இன்சுலின் எதிர்ப்புத் தன்மையே தவிர, சுரப்பது இல்லை.
ஒட்டகப் பாலை அதிகமாகக் குடிக்கும் அரபு நாட்டில் டைப் 2 நீரிழிவு பிரச்னை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஒட்டகப் பாலை அருந்துவதால் டைப் 1 டயாபடீஸ் உள்ளவர்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படுவதால் அதிக விலை கொடுத்து ஒட்டகப் பாலை வாங்கி பயன்படுத்துவது என்பது முடியாத காரியமாகும்.
அது மட்டுமில்லாமல், இதைக் குடிப்பதால் சர்க்கரை வியாதி குறையுமே தவிர, குணமாகப் போவதில்லை என்பதால் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் இன்சுலின் ஊசியையே பயன்படுத்திக்கொள்வதே சிறந்ததாகும். இப்படி ஒட்டகப் பாலின் மூலமாக செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், இதனால் சர்க்கரை வியாதி முழுமையாகக் குறையாது. எனினும், இன்சுலின் தேவையை குறைக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது.