வீட்டு சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் நறுமணம் தரும் மசாலா பொருட்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது லவங்கம் எனப்படும் கிராம்பு. மருத்துவ குணமிக்க கிராம்பு வீட்டு சமையலில் மட்டுமல்ல, பல்வேறு மருத்துவ பொருட்களிலும் பயன்படுகிறது. கிராம்புவின் சாதக, பாதகப் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பல நூற்றாண்டுகளாக உணவில் பயன்படுத்தப்பட்டு வரும் கிராம்புவில் வைட்டமின் சி, கே, இ, கால்சியம், மெக்னீசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் கிராம்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்ததாக உள்ளது.
பல்வேறு சத்துக்கள் நிறைந்த கிராம்பு புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் நுரையீரலுக்கு பாதுகாப்பாகவும் செயல்படுகிறது. ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது. கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால் பாக்டீரியாக்களை நீக்கி பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கச் செய்கிறது.
இரவில் தூங்க செல்லும் முன்பு 2 கிராம்புகளை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் அகன்று குடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்கின்றனர். காது வலி, தொண்டை வலி போன்றவற்றுக்கு நிவாரணம் தருகிறது. கை, கால் நரம்புகள் பலத்துக்கு உதவும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையை சீராக்குகிறது.
கிராம்பு மேற்கண்ட பல்வேறு உடல் நலப் பலன்களைத் தந்தாலும், அதை அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கிராம்புவை அதிகம் எடுத்துக்கொள்வதால் இரைப்பை, குடல் பிரச்னைகளை உண்டாக்கும். இதன் காரணமாக வயிற்றுப் பிரச்னைகள், வயிற்றுப்போக்கு மற்றும் அல்லது எரியும் உணர்வு, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படலாம்.
கிராம்பு இயற்கையாகவே இரத்தத்தை எளிதாக்கும் தன்மை கொண்டது. ஆனாலும், அதை அதிகமாக உட்கொண்டால் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். உதாரணமாக, நீங்கள் காயப்பட்டால் இரத்தப்போக்கு விரைவில் நிற்காது. அதேபோல் அடிக்கடி ஒவ்வாமை எதிர்விளைவுகள் இருந்தால் கிராம்புவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கிராம்பு எடுத்துக்கொண்டாலும் அதை மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். கிராம்புவில் காணப்படும் மூலக்கூறுகள் அலர்ஜி பிரச்னையை அதிகப்படுத்தி, சருமத்தில் சொறி அல்லது அரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
அதிகப்படியாக கிராம்பு எடுத்துக்கொள்வது சில மருந்துகளுடன் வினைபுரியும் என்பதால் கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்னைகளுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்வோர் கிராம்புவை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே கிராம்புவை எடுத்துக்கொள்ள வேண்டும்.