சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சி சுந்ததேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலைக் குறித்து திருவாசகத்தில் மாணிக்கவாசகர் போற்றிப் பாடி உள்ளார்.
மதுரை சொக்கநாதப் பெருமான் கார்த்திகை பெண்களின் சாபம் நீக்கி, அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை அருளிய திருவிளையாடல் இத்தலத்தில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப்பெருமானை பாலூட்டி, சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்கள் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசிக்குட்படி வேண்டினார்.
அதற்கு சிவபெருமான், 'அஷ்டமா சித்திகள் பார்வதி தேவியிடம் பணிந்து குற்றேவல் புரியும். எனவே, நீங்கள் பார்வதி தேவியை வணங்கி அஷ்டமா சித்தி உபதேசத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
ஆனால் கார்த்திகை பெண்களோ, பார்வதி தேவியை வணங்காமல் சென்று விட்டனர். இதனை அறிந்த சிவபெருமான் கோபம் கொண்டு கார்த்திகை பெண்கள் ஆறு பேரையும் பட்டமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் கற்பாறைகளாக இருக்கும்படி சாபம் கொடுத்தார்.
தங்களது தவறை உணர்ந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் மனம் வருந்தி, சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றார்கள். ஆனால், ஈசன் அதனை மறுத்து விட்டார்.
அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு மதுரை சொக்கநாத பெருமான் பட்டமங்கலத்தில் தட்சிணாமூர்த்தி - குரு பகவான் வடிவில் அவர்களுக்குக்காட்சியளித்து கார்த்திகை பெண்கள் ஆறு பேரின் சாபத்தையும் போக்கியதாகப் புராணம் கூறுகிறது.
எனவே, இத்தலத்தில் அருளும் குரு பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவரை வணங்கினால் செல்வமும் புகழும் செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம்.