
இந்து மதம் ஒருவர் பூமியில் வாழும் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை பரிந்துரைக்கிறது. ஒருவேளை அவர் அந்த தர்மத்தை மீறி அதர்மத்தை கடைபிடித்தால் அதற்கான மோசமான பலன்களையும் அவர் கட்டாயம் அனுபவிப்பார். அது அவர் உயிருடன் இருந்தாலும் அல்லது இல்லாமல் போனாலும் சரி, கருட புராணம் ஒருவர் பூவுலக வாழ்க்கையை முடித்த பின்னரும் அவரது கெடு பலன்கள் முடிவதில்லை என்று கூறுகிறது.
கருட புராணம் ஒருவரின் வாழ்க்கை பூமியில் முடிந்த பின்னர் நடக்கும் செயல்களைப் பற்றி விவரிக்கிறது. ஒருவரின் கர்ம பலன்கள், அதற்கு ஏற்ப தண்டனை மற்றும் கர்ம பலன் காரணமாகக் கிடைக்கும் மறு பிறப்பு பற்றி விரிவாக விவரிக்கிறது. ஒருவர் செய்யும் வினைப்படி அவரது அடுத்த வாழ்க்கை அமையும்.
ஒருவர் நிறைய பாவங்களை செய்திருந்தால் அவரது மரணத்திற்குப் பிறகு, அந்த ஆன்மா நரகத்திற்குச் செல்லும் என்று கருட புராணம் கூறுகிறது. மேலும் அந்த நபர் தனது பாவ செயல்களுக்கான தண்டனையை அனுபவிப்பர். தர்மராஜன் ஒருவரின் பாவக் கணக்குகளுக்கு ஏற்ப தண்டனைகளை ஆன்மாவுக்கு வழங்குவார்.
திருமணம் ஒரு புனிதமான பந்தமாகக் கருதப்படுகிறது. எந்தவொரு ஆணோ அல்லது பெண்ணோ இந்தப் பிணைப்பை மீறி திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டால், மரணத்திற்குப் பிறகு அவர்களுக்கு பயங்கரமான தண்டனைகள் கிடைக்கிறது. கருட புராணம் திருமணம் கடந்த உறவுகளுக்கான தண்டனைகளை பற்றியும் விரிவாக விவரிக்கிறது. ஆணும் பெண்ணும் தங்கள் துணைக்கு செய்யும் துரோகத்தின் பலனை மேலுலகில் அனுபவிப்பார்கள்.
ஆண்களுக்கு தண்டனை:
கருட புராணத்தின்படி, தனது மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளும் ஒருவர் அடுத்த பிறவியில் பறவையாகப் பிறப்பார். தனது மனைவிக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணிடம் இன்பம் கொள்ளும் ஆண் அந்ததமிஸ்ர நரகத்திற்கு செல்கிறான். அங்கு அவனது உடல் வெவ்வேறு இடங்களில் துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. அந்த பாவ ஆன்மா பல்வேறு வகையான துன்பங்களுக்கு ஆளாகிறது. நரகத்தில் கடுமையான சித்திரவதைக்கு அவன் ஆளாகிறான். இந்த நரகத்தை அந்ததமிஸ்திரம், இருண்ட நரகம் என்று அழைக்கிறார்கள்.
ஒருவன் காமத்தினால் பல பெண்களுடன் தவறு செய்திருந்தால் அவனது ஆன்மாவை ‘தப்தசுர்மி’ என்ற நரகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த நரகத்தில் பாவ ஆன்மாவை ஒரு மரத்தில் கட்டி வைத்து இரும்பு சாட்டையை நெருப்பில் காய விட்டு அதனால் அவன் உடல் முழுக்க சூடு வைக்கிறார்கள்.
பெண்களுக்கு தண்டனை:
கருட புராணத்தின்படி, கணவனுக்கு தெரியாமல் வேறு ஆணுடன் தவறான உறவில் உள்ள பெண்ணை, ஒரு கம்பத்தில் கட்டி சுற்றி நெருப்பு வைத்து கொளுத்தப்படுகிறாள். பின்னர் ஒரு ஆலையில் உக்கார வைத்து நசுக்கி பிழியப்படுகிறாள். அடுத்ததாக, அவளை முட்கள் நிறைந்த படுக்கையில் படுக்க வைத்து, ஒரு நீண்ட கயிற்றால் கட்டி, கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கிறார்கள். அவள் தான் செய்த பாவங்கள் குறையும் வரை இந்த பயங்கரமான தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த தண்டனை முடிந்த பிறகு, அந்தப் பெண் தனது முற்பிறவி பாவம் போக்க ஒரு பூச்சியாக பூமியில் மீண்டும் பிறக்கிறாள். இந்த வடிவில் அவள் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவித்து முடிக்க வேண்டும். தண்டனையை அனுபவிக்காவிட்டால் மீண்டும் மீண்டும் பூச்சி போன்ற பிறவிகள் கிடைக்கும். அவள் பாவங்கள் அனைத்தும் போன பின்னர் மீண்டும் மனித ரூபத்தில் பிறக்கிறாள். இதுபோன்ற தண்டனைகளை அறிந்து இருக்கும்போதே ஒருவருக்கு ஒருவர் உண்மையான நல்ல கணவன் மனைவியாக இருப்பது அவசியம்.