
நீண்ட காலத்திற்கு முன்பு அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் போர் ஏற்பட்டது. இருபுறத்திலும் ஏராளமானோர் மாண்டனர். எனவே, தேவர்கள் பிரம்மனை அணுகி, ‘சாகாமல் இருக்க என்ன வழி?’ எனக் கேட்டனர்.
பிரம்ம தேவன், அவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட, அமிர்தம் உண்டால் சாகாமல் இருக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். பாற்கடலை கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும். அதற்கு அசுரர்களின் உதவியும் வேண்டுமென்பதால், மகாவிஷ்ணுவின் ஏற்பாட்டின்படி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைவதற்கு ஆயத்தமாயினர்.
அதற்கு மேருமலையை மத்தாகவும் ஆயிரம் நாக்குடைய வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு வால் பக்கம் தேவர்களும் தலைப்பக்கம் அசுரர்களும் பிடித்துக் கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.
இதுபோல் இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி ஆயிரம் ஆண்டுகள் கடைந்ததால் வாசுகியின் உடல் புண்ணாயிற்று. இதனால் வாசுகி பாம்பு தன்னையும் அறியாமல் வலி பொறுக்க முடியாமல் ஆயிரம் வாயினாலும் விஷத்தை கக்கி விட்டது. அந்தச் சமயத்தில் கடலில் இருந்தும் விஷம் பொங்கியது.
இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காளம்' என்ற நீல விஷமும்,பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்பு புயல் போல் கொடிய வெப்பமும், கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.
தலைப்பக்கம் நின்ற அசுரர்கள் எரிந்து சாம்பலாக, தேவர்கள் தரிக்கெட்டு ஓடி ஒளிந்தனர். மகாவிஷ்ணுவின் உடல் விஷம் பட்டு கருநீலம் ஆயிற்று. எல்லோரும் பயந்து ஈசனிடம் முறையிட கயிலை சென்றனர்.
நந்தியம் பெருமான் அனுமதியுடன் உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தனது நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி, "அவ்விஷத்தை இவ்விடம் கொண்டு வா!" என்று பணித்தார்.
சிவபெருமானின் விருப்பத்திற்கு இணங்க சுந்தரரும் கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக்கிக் கொண்டு வந்தார். எல்லோரும் அதிசயிக்க சிவபெருமான் ஒரு கண நேரம் 'விஷாபகரணமூர்த்தி 'என்னும் ரௌத்திர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டு அருளினார்.
அப்போது பார்வதி தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழிந்து போகுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி பிடித்தார். கண்டத்தில் விஷத்தை நிறுத்தியதால் 'நீலகண்டர்' என்ற பெயர் ஏற்பட்டது. விஷம் கொண்டு வந்த சுந்தரர், 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.
கயிலையில் ஈசன் விஷம் உண்ட பிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரைப் போற்றித் துதி பாடியவாறு இருந்தனர். ஏகாதசி அன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேலையில் எழுந்து உமையவளை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி, டமருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' என்னும் தாண்டவத்தை ஆடினார்.
இந்த நாட்டியத்தைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் ‘ஹர ஹர'என்று துதித்தனர். அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்த்தி வருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கூத்தில் சரஸ்வதி வீணையையும், பிரம்மன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும், பூதகணங்கள் எண்ணற்ற இசைக் கருவிகளையும் இசைக்கின்றனர் என்பதுவும் நம்முடைய நம்பிக்கையே.