
இந்தியாவில் பல கோயில்கள் மலை மீதுதான் அமைந்திருக்கின்றன. மலைக்கோயில்கள் இல்லாத மாவட்டங்கள் குறைவுதான் என்பதோடு, புனித யாத்திரைகள் வழிபாடுகள் எல்லாம் இந்தியாவில் அதிக நம்பிக்கைகளுடன் பார்க்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற பல கோயில்கள் உயர்ந்த மலைகள் மற்றும் குன்றுகளில் காணப்படுகின்றன. அந்த வகையில், மலைகளின் மீது கோயில்கள் கட்டப்பட்டதற்கான காரணத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மற்ற மதங்களை விட இந்து மதத்தில் மலைக்கோயில்கள் அதிகம் உள்ளன. கேதார்நாத், பத்ரிநாத், வைஷ்ணவி தேவி கோயில், அமர்நாத் குகை கோயில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில், பழனி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் என மக்கள் படையெடுக்கும் பல கோயில்கள் மலைகளிலும் குன்றுகளிலும்தான் அமைந்துள்ளன. இதற்குப் பின் வெறும் ஆன்மிகக் காரணங்கள் மட்டுமில்லை, அறிவியல் காரணங்களும் உள்ளன.
பஞ்சபூதம்: வேதங்கள், புராணங்களின்படி, பஞ்ச பூதங்களான நீர், காற்று, நெருப்பு, பூமி, வானம் இவற்றில் இருந்து இந்தப் பிரபஞ்சம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பஞ்சபூதங்கள் அனைத்திலும் கடவுள்கள் நீக்கமற நிறைந்து வீற்றிருக்கிறார்கள். இதில் பூமியின் மகுடமாக மலைகள் உள்ளன. இந்த மகுடத்தை கடவுள்களுக்கு கம்பீரமாகக் கருணையுடன் சூட்டும்விதமாக புனிதத் தலங்களும், கோயில்களும் மலைகளில் கட்டப்பட்டுள்ளன.
மலைகளின் வடிவமைப்பு: மலைகள் சுத்தமாகவும், அமைதியாகவும் இருப்பதால் இந்த மலைகளில் உள்ள கோயில்களில் அமர்ந்தால் மன அமைதி தானாகவே தேடி வரும். எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் மலையேறி சென்று தெய்வ தரிசனம் செய்தால் மனம் இலகுவாகி, கஷ்டங்கள் காணாமல் போய்விடும்.
அப்படிப்பட்ட சூழலில் உள்ள நேர்மறை ஆற்றலை உடலுக்குள் பரவச் செய்யும் வடிவமைப்பு மலைகளில் காணப்படுகின்றது. நேர்மறை ஆற்றல்களின் மொத்த உருவமாக மலைகள் உள்ளன. பூமியின் அரண் போல காணப்படும் மலைகளில் தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மலைகளில் ஏறி இறைவனை தரிசிக்கும்போது உடலில் உள்ள மூட்டுகளும் நரம்புகளும் வலிமை பெற்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அமைதியையும் மன உறுதியையும் நல்குவதால் மலைக் கோயில்கள் மனிதர்கள் மனதில் அதிகம் இடம் பெற்று பிரபஞ்சத்தில் சிறப்புற்று விளங்குகின்றன.