
இறைவனிடம் நம் பிரச்னைகள் தீர்வதற்காக வேண்டிக்கொண்டு அதன் பொருட்டு பல்வேறு வழிபாடுகளை நாம் செய்வது அக்காலம் முதற்கொண்டு இக்காலம் வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுவரும் வழக்கமாக உள்ளது. அது போன்ற வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது துலாபார வழிபாடாகும்.
அந்தக் காலத்தில் மன்னர்கள் பிள்ளை வரம் வேண்டி அது நிறைவேறியதும் அந்தக் குழந்தையின் எடைக்கு எடை துலாபாரமாக தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை இறைவனுக்கு நேர்த்திக்கடனாகத் தந்தனர். நோய், திருமணத்தடை மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கவும் இந்த துலாபார வேண்டுதல் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
துலாபாரம் செய்யப் பயன்படும் பொருட்கள்: மஞ்சள், உப்பு, அரிசி, சர்க்கரை, வெல்லம், நெய், வெள்ளி, பொன் போன்றவற்றை பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு துலாபாரம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது இன்னும் பல கோயில்களில் வழக்கத்தில் உள்ளது. கிரகண காலத்தில் பொன்னும், அமாவாசை நேரத்தில் வெள்ளியும் துலாபாரமாகத் தருவதில் அதிக நன்மைகளைப் பெறலாம்.
இனி, துலாபாரத்தில் என்னென்ன பொருட்களை இறைவனுக்கு நேர்த்திக்கடனாக சமர்ப்பித்தால் என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதை அறிவோம்.
நெய்யை இறைவனுக்கு துலாபாரம் செய்ய உடல் நோய்கள் தீரும்.
தேன் துலாபாரம் செய்ய அபரிமிதமான சமூகத்தில் செல்வாக்கு பெருகும்.
மஞ்சள் துலாபாரம் செய்ய குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.
சந்தனத்தை துலாபாரம் செய்ய குழப்பங்கள் நீங்கி, வாழ்வில் பிரகாசமான ஒளி கிடைக்கும்.
சர்க்கரையை துலாபாரம் செய்ய உடல் நோய்கள் நீங்கி வாழ்வில் இனிமை பொங்கும்.
இறைவனுக்கு நாம் செய்யும் வேண்டுதல் பிரார்த்தனைகளிலேயே மிகவும் உயர்வானது துலாபார பிரார்த்தனையாகும். வேண்டுதல் பொருட்டு இறைவனுக்கு நாம் காணிக்கையாக செய்யும் துலாபார பிரார்த்தனையை நாம் முழு மனதோடு, சந்தோஷமாக செய்ய இறைவனின் பரிபூரண அருளாசி கிடைக்கும். நாம் வாழ்க்கையிலும் சந்தோஷமும் வளமும் பெருகும்.