இறை வழிபாட்டின்போது அர்ச்சனை தட்டை தொடச் சொல்வதன் தாத்பர்யம் தெரியுமா?

Archanai Sangalpam
Archanai Sangalpam
Published on

கோயிலுக்குச் செல்லும்போது நாம் பெரும்பாலும் சுவாமியை வழிபட்டு அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சனைத் தட்டு வாங்கிச் செல்வது வழக்கம். ‘அர்ச்சனை’ என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள். கோயிலுக்குச் சென்று ஒருவர் தனது பெயர், கோத்திரம், நட்சத்திரத்தைக் கூறி சங்கல்பம் செய்து கொண்டு இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ள செயலாகும்.

இப்படி வழிபடும்போது ஒருவருக்கு, ‘இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு, இன்ன பூஜை செய்யப்படுகிறது’ என்று சொல்லி பூஜை செய்வதே சங்கல்பம் எனப்படுகிறது. இப்படியான சங்கல்பத்தின் பொருட்டே அர்ச்சனை தட்டை தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள் அர்ச்சகர்கள்.

இதையும் படியுங்கள்:
மகாளய பட்ச மஹாபரணியில் மரண பயம் போக்கும் யம தீப வழிபாடு!
Archanai Sangalpam

பொதுவாக, அர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்கலாம். அல்லது வாழ்வில் இன்னும் மேம்பட இறைவனை வேண்டிக் கொள்வதாக இருக்கலாம். இவை தவிர, துன்பங்களைத் தாங்கும் மன உறுதியை இறைவனிடம் கேட்கலாம்.

கோயிலில் அர்ச்சனை செய்வது, வீட்டில் பூஜை செய்வதைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனங்களாலும், பூஜை மற்றும் வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாகத் திகழ்கிறது. ஆலயங்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்வது, ‘காம்ய பூஜை’ ஆகும். அதாவது, நாம் ஒன்றை வேண்டிக் கொண்டு நம்முடைய பிரார்த்தனையைக் கடவுளிடம் சமர்ப்பிப்பது காம்ய பூஜை எனப்படும்.

இதையும் படியுங்கள்:
திருமணத்தின்போது மழை பெய்வது நல்ல சகுனமா?
Archanai Sangalpam

ஒருவர் தனியாக ஆலயத்திற்குச் சென்று வழிபட்டாலும் அல்லது கூட்டத்துடன் சேர்ந்து வழிபட்டாலும் இறைவனின் அருள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையே செய்யும். அதன் பொருட்டே ஆலயங்களில் அர்ச்சகர் பெருமக்களால் ஆகம முறைப்படி இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அனுதினமும் சங்கல்பம் செய்து கொண்டே தினசரி பூஜைகளைத் தொடங்குவார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய விரும்பினால், அர்ச்சனை தட்டிலுள்ள புஷ்பத்தையோ, குங்குமத்தையோ அவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைக் கூறி தொடச் சொல்வது மரபு. இந்தச் செயல் இறைவனுக்கும் நமக்கும் இடையிலான ஒரு ஆத்ம தொடர்பை ஏற்படுத்தும் அற்புதமான செயல்பாடாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com