
‘தன்னை அறிதல்’ என்றால், ஆத்மாவை அறிதல் எனப் பொருள். எல்லையற்ற பரம்பொருளான சக்தி ஒவ்வோர் உள்ளத்திலும் ஆத்மாவாக இருக்கிறது. அதுவே, நான். இதை அறிவதுதான் ஞானம். ஆந்திர மாநிலத்தில் அமைந்த ராகு-கேது தோஷம் நீக்கும் திருக்காளத்தியில் அழகாகக் காட்சி தருகிறாள் அம்பிகை. சொர்ணமுகி நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. வேடன் கண்ணப்பன் இறைவன் மேல் கொண்ட பக்தியால் தனது இரண்டு கண்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து மோட்சம் பெற்ற திருத்தலம் இது.
உலக ஆரம்பத்தில் வாயு பகவான் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கற்பூர லிங்கத்தை ஏற்படுத்தி தவம் செய்தார். அதில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு மூன்று வரங்கள் தந்தார். அதன்படி வாயு பகவான், ‘தான் உலகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும், ஒவ்வோர் உயிரின் ஆத்மாவாக தானே இருக்க வேண்டும், தான் வழிபட்ட கற்பூர லிங்கம் தனது பெயராலேயே திகழ வேண்டும்’ என வரம் கேட்டார். வாயு பகவானுக்கு என்று தோன்றிய முதல் கோயில் இது. அம்பிகை ஒரு சமயம் ஈசனின் கோபத்துக்கு ஆளாகி அவரிடம் சாபம் பெற்று இந்த லிங்கத்தை பூஜித்து ஞானம் பெற்றாள். எனவே, இங்கு உறையும் அன்னைக்கு ‘ஞானாம்பிகை’ என்பது திருநாமமாயிற்று. அம்பிகை நின்ற கோலத்தில் இத்தலத்தில் தரிசனம் தருகிறாள்.
இத்தல ஈசனின் சிரசில் இருக்கும் கங்கை சொர்ணமுகியாக இக்கோயிலைச் சுற்றி ஆறாக ஓடுகிறாள். பல யுகமாக இருக்கிறது இம்மலை. ஒரு சமயம் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று சண்டை ஏற்பட்டது. கயிலாய மலையை ஆதிசேஷன் சுற்றிக் கொண்டார். அம்மலையை அவரிடமிருந்து மீட்க வாயு பகவான் போராடியதில் மலை எட்டு பாகங்களாக அம்மலை சிதறியது. அதில் இரண்டாவது சிதறல்தான் காளஹஸ்தி மலை. கண்ணப்பர் மலை, துர்கம்மா மலை என்ற இரு மலைகளுக்கு நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இதை, ‘தென் கயிலாயம்’ என்றும் கூறுகிறார்கள். பிரம்மாவும், அர்ஜுனனும் வழிபட்ட பெருமை பெற்ற தலம் இது. இக்கோயிலில் உறையும் ஞானசுந்தரி செங்குந்தர் குலத்தில் பிறந்து தவம் புரிந்து ஈசனை அடைந்தார். எனவே, ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் இக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அம்பிகைக்கு சீர் அனுப்புகிறார்கள். இக்கோயிலின் தல விருட்சம் மகிழ மரம். இந்தக் கோயில் ஈசனின் கருவறை அகழி வடிவில் உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக் கல் நந்தியும் பித்தளை நந்தியும் காட்சி தருகின்றன.
இது ராகு-கேது தலம் என்பதால் அம்மனின் இடுப்பில் உள்ள ஒட்டியாணத்தில் கேது பகவான் உருவம் காணப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது ஞானபீடமாகத் திகழ்கிறது. இங்கு அம்பிகையை வேண்டி சரஸ்வதி தீர்த்தத்தைக் கொடுத்தால் இயற்கையில் பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சு வரும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
அம்பிகையின் கருவறையை வலம் வரும்போது ஒரு மூலையில் வட்டமிட்டு மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது. இது சக்தி வாய்ந்த யந்திரம் என்பதால் இங்கு அமர்ந்து அம்பிகையின் நாமத்தை ஜபிப்பது மிகவும் விசேஷமாகும். இத்தலத்தில் ராகு-கேது பரிகார பூஜை செய்வது சிறப்பு. சந்திர, சூரிய கிரகணங்களின்போது கூட இக்கோயில் நடை மூடுவதில்லை என்பது விசேஷம்.