
கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனுக்கு முறுக்கு, சீடையும், வெண்ணெயும் பல இடங்களில் படைக்கப்படுகிறது. அதில் மிக முக்கியமானது வெண்ணெய். புராணங்களில் கூட கண்ணனுக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கண்ணனுக்கு ஏன் வெண்ணெய் படைக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
பக்தர்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்து படைக்கின்றனர். ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. இதற்கு புராணத்தில் ஒரு கதை உண்டு.
கம்சனைக் கொன்றதால் :
கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியை கட்டுவதற்காக மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் வெண்ணெயை கூட விற்கும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
கம்சனை கண்ணன் கொன்ற பிறகு மகிழ்ச்சியில் அந்த வெண்ணெயை கண்ணனுக்கு மக்கள் படைத்து கௌரவித்தனர். இதுவே கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைக்க காரணமாயிற்று.
இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது.
நண்பர்களுக்கு வெண்ணெய் திருடி கொடுத்தான்:
கண்ணன் ராஜா வீட்டுப் பிள்ளை என்றாலும், கோகுலத்தில் அவனது நண்பர்கள் அப்படியல்ல, அவர்கள் பலர் ஏழை, எளியவர்கள். கண்ணனுக்கு தினமும் யசோதா வெண்ணெய் தருவதால், அது மட்டும் தனது நண்பர்களுக்கு போதாது என்பதை உணர்ந்த கண்ணன் தன் வீடு மட்டுமல்லாமல் பல வீடுகளில் இருந்து வெண்ணெய் திருடி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உண்டான்.
அதுமட்டும் அல்லாமல் சில சமயங்களில் வெண்ணெய் போதாத போது ஒவ்வொரு வீட்டிலும் உரியை அடித்தும், உடைத்தும் கூட தயிர், வெண்ணெய் என எதையும் விட்டு வைக்காமல் உண்டான். எனினும் கண்ணன் அழகில் மயங்கிய கோகுல வாசிகள் அவனை அடிக்கவும் மனம் இல்லாமல், அதட்டவும் மனம் இல்லாமல் தவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்துத் தான் பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையை தொங்கவிட்டு உடைப்பது வழக்கம் ஆகிவிட்டது.
இப்படியாக கண்ணன் வெண்ணெயை தனது நண்பர்களுக்காகவும் திருடியது போன்ற கண்ணனின் லீலைகளை நினைவுபடுத்தவும் தான் வெண்ணெய் ஸ்ரீ கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.
வெண்ணெய் படைப்பதன் தத்துவம் :
மேலும் கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைப்பது ஒரு புனிதமான செயலாகும். வெண்ணெய் என்பது தூய்மை மற்றும் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறது. கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைப்பதன் மூலம் அவரது பக்தர்களும் அன்பையும் தூய்மையையும் வெளிப்படுத்துகின்றனர்.
கிருஷ்ணரின் வெண்ணெய் படையலுக்கு பின்னால் பல தத்துவத்தார்த்த காரணங்கள் உள்ளன. வெண்ணெய் திருடுவது என்பது மாயையை வெல்வதற்கும், மனதை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு குறியீடாக கருதப்படுகிறது. கிருஷ்ணரின் வெண்ணெய் விளையாட்டு பக்தர்களுக்கு ஆன்மீக ஞானத்தை தரும் ஒரு வழியாகவும் கருதப்படுகிறது.
வெறும் ஞானம் மட்டும் இருந்தால் அங்கு இறைவன் ஒட்டுவது இல்லை. பக்தியில் வெளிப்பட்ட இறைத்தன்மையாகிய வெண்ணெயை உண்டு கோபியர்களுக்கு அருள் புரிந்தேதே இதற்குப் பின்னால் இருக்கும் தத்துவமாகும்.
ஆன்மாவை இறைவன் விரும்புவதால் வெண்ணெய் படைத்தல் :
வெண்ணெய் ஆன்மாவுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அந்த ஆன்மாவில் ஒட்டி இருக்கும் கர்மாக்கள் நீக்கப்பட்டு சுத்தமான வெண்ணெய் வெளிப்படும். இந்த வெண்ணெயை இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வார் என்பதே இதன் ஐதீகம் .
ஒவ்வொரு ஆன்மாவையும் இறைவன் விரும்பி ஏற்றுக் கொள்வேதே கண்ணன் வெண்ணெய் திருடி சாப்பிட்டதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம்.
நாம் இறைவனிடம் இருந்து விலகி இருந்தாலும் அவர் நம்மை தேடி வந்து ஏற்றுக்கொள்வார். தன்னை வணங்குவோர்களை மட்டுமல்ல வணங்காதவர்களின் ஆன்மாக்களையும் இறைவன் விருப்பமுடன் ஏற்றுக் கொள்வான். அதனால் கண்ணன் நம்முடைய ஆன்மாவையே ஏற்றுக் கொண்டு நமக்கு நன்மைகள் வழங்க வேண்டும் என்பதற்காகவும், நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து வழிபடுவதற்கு சமம் என்பதாலும், கண்ணனுக்கு வெண்ணெய் படைத்து வழிபடுகிறோம்.