
ஸ்ரீ கிருஷ்ணன் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவன். இவனது மாமன் கம்சனின் கொடுமை காரணமாக, ஸ்ரீ கிருஷ்ணனின் பெற்றோர் சிறையில் வாட நேரிட்டது. தங்கத் தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய ராஜ குழந்தை, அடை மழையில் மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டான்.
அரண்மனை நந்தவனத்தில் உடலில் தூசி படியாமல் விளையாடி மகிழ வேண்டியவன் கானகத்தில் கல்லும் முள்ளும் குத்த ஆயர்பாடி புழுதியிலும் சாணத்தின் மணத்திலும் விளையாட வேண்டியவனாகிறான். ஆனால், ராஜலட்சணம் பொருந்திய அந்த முகம் பார்ப்பவர் அனைவரையும் வசீகரித்தது.
ஒரு ராஜகுமாரனுக்கு உரிய மிடுக்கையும் கம்பீரத்தையும் ஸ்ரீ கிருஷ்ணனின் சிறுபிள்ளை விளையாட்டுத்தனம் மறைக்க முயற்சித்தாலும் தோற்றப் பொலிவு அவனை ஒரு இளவரசனாகவே காட்டியது.
இதனாலேயே தலைமைக் குணம் மிகுந்திருக்க பிற பிள்ளைகளுக்கு தலைவனாக பிரகாசித்தான் ஸ்ரீ கிருஷ்ணன். அதோடு, அனைவரையும் அவன் வசீகரித்தான். புதுப் புது உத்திகளைக் கையாண்டு சின்னச் சின்ன பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டான். பெண் குழந்தைகளும் பெற்றோர் கட்டுப்பாட்டையும் மீறி, நாணத்தை மறந்து அவனுடன் கைகோர்த்து நட்பு கொண்டு மகிழ்ந்தனர்.
இப்படித் தங்களுக்குத் தலைவனாய், வழி நடத்துபவனாய், துயர் களைபவனாய் திகழும் கண்ணனை கௌரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள். அப்போது அங்கே சுற்றித் திரிந்த ஒரு மயிலைப் பிடித்தார்கள். அவர்கள் தன்னைப் பிடித்ததன் நோக்கம் புரிந்து கொண்ட அந்த மயில் தானாகவே ஓர் இறகை ஈந்தது.
அதை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணனின் கொண்டையில் அவனுடைய தோழர்கள் செருகினார்கள். ‘ராஜா வந்தார்… ராஜா வந்தார்… பராக்… பராக்…’ என்று சந்தோஷ மிகுதியால் ஆடிப் பாடினார்கள். இப்படித்தான் ஸ்ரீ கிருஷ்ணன் தலையில் மயிலிறகு அலங்கரிக்க ஆரம்பித்தது.