திருமணமான பெண்கள் அணியக்கூடிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை தவறாக அணிவதன் மூலம் கணவனின் ஆயுள் குறையும், பொருளாதார பாதிப்பு ஏற்படும், கணவன் மனைவியிடையே பிரச்னைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
திருமணமான பெண்கள் கையில் தங்க வளையல் அணிவதன் மூலம் லக்ஷ்மி கடாட்சம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. திருமணமான பெண்கள் கருப்பு வளையல்கள் அணியவே கூடாது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு, சனி தோஷம், பிரச்னைகள் ஏற்படும். குழந்தைகள் இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். திருமணமான பெண்கள் கருப்பு நிற காலணிகள் அணியக்கூடாது. இதனால், அவர்கள் செய்யக்கூடிய செயல்களில் தாமதம் ஏற்படும், நிதி பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பிரச்னை உண்டாகும்.
சாஸ்திர ரீதியாக தங்கம் மகாலக்ஷ்மியின் அம்சமாகவும், வெள்ளி சந்திர பகவானின் அம்சமாகவும் கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்கத்தை இடுப்பிற்கு மேலேதான் அணிய வேண்டும். வெள்ளியை இடுப்பிற்குக் கீழேதான் அணிய வேண்டும். தங்கம் என்பது உடலுக்கு சூட்டையும், வெள்ளி உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். பெண்கள் காலில் தங்கக் கொலுசோ அல்லது தங்க மெட்டியோ அணியக் கூடாது. இது மகாலக்ஷ்மியை அவமானப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. இதனால், பணப் பிரச்னை, கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும்.
திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது மிகவும் நன்மையைத் தரும். திருமணத்திற்கு பிறகு வரும் பிரஷர், டென்ஷன், பிரச்னைகளை சமாளிக்கும் அறிவைக் கொடுப்பது சந்திர பகவான். வெள்ளி சந்திர பகவானுக்கு உரியது என்று சொல்லப்படுகிறது. மேலும், கால் கட்டை விரலுக்கு அருகில் உள்ள விரல் கர்ப்பப்பையுடன் தொடர்புடையது. பெண்கள் மெட்டி அணிந்து நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக கர்ப்பப்பை வளர்ச்சி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மட்டும்தான் மெட்டி அணிய வேண்டும்.
பெண்கள் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருக்கும் சேலையை அணியக் கூடாது என்று சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை, கடன் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் நெற்றியில் திலகமிடுவது மிகவும் நல்லது. இதனால் கண் திருஷ்டி, பொறாமை அந்த பெண்ணை அண்டாது. திருமணமான பெண்கள் திலகமிட பயன்படுத்தும் குங்குமத்தை கணவனின் பணத்தில் வாங்கும்போது நல்ல வருவாய் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியில் திலகமாகப் பயன்படுத்தும் குங்குமத்தை மற்றொரு பெண்ணுக்கு தரக் கூடாது. இதனால் கணவனின் ஆயுள் பாதிக்கப்படும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும்.
திருமணமான பெண்கள் மாங்கல்யம் அணிவது மற்றவர்களுக்கு தெரியும்படி அணியக்கூடாது. தங்கத்தால் ஆன மாங்கல்யத்தில் இரும்பு பொருளை சேர்க்கக் கூடாது. சில பெண்கள் தாலியுடன் Safety pinsஐ அணிந்திருப்பார்கள். இதனால் சனி தோஷம் ஏற்பட்டு கணவன் ஆயுள் குறையும், குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு கடைப்பிடித்து வந்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.