
வாரணாசி அல்லது காசி என்றழைக்கப்படும் நகரமானது இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது. மிகப் பழைமையான நகரம் இது. பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. காசி சிவபெருமானின் இருப்பிடம் எனவும், சிவனும் பார்வதியும் இங்கு வசிப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் இங்கு வந்து கங்கையில் புனித நீராடி இறைவனை தரிசித்துச் சென்றால் அவர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறுவர் என்பது ஐதீகம். காசியில் நாம் காண வேண்டிய 8 முக்கியமான இடங்கள் எவையெவை என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. தஷாஷ்வமேத் காட்: காசியில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள பல படித்துறை (Ghat)களில் இது முக்கியமானதொன்று. இந்த 'காட்' டின் படிகளில் நின்று கங்கா தேவிக்கு சூரிய அஸ்தமன நேரத்தில் காட்டப்படும் ஆரத்தி மிகவும் கண்களைக் கவரும் காட்சியாகும். காசிக்குச் செல்பவர்கள் கண்டிப்பாகக் காண வேண்டிய அரிய காட்சி இது.
2. ட்ரெய்லோச்சன் காட் (Trilochan Ghat): மிகவும் ஒதுக்குப்புறமான தனிமையான இடத்தில் அமைந்துள்ள 'காட்'களில் இதுவும் ஒன்று. மன நிம்மதியும் அமைதியும் தரக்கூடிய இடம்.
3. மணிக்கர்ணிகா காட்: இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்குப் பொருத்தமான படித்துறை இது. நீண்ட காலமாகப் பிரசித்தி பெற்றிருக்கும் ஒரு கோயிலும் இங்கு உண்டு.
4.சாரநாத்: புத்தர்கள் அதிகமாக வசித்துவரும் இடம். இங்குள்ள கட்டடங்கள் பிரதிபலிக்கும் அதிசயிக்கத்தக்க கலையழகிற்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் சாரநாத்.
5. விஸ்வநாத் கலி: வாரணாசியில் புகழ் பெற்று விளங்கும் தெருக் கடைகள் அமைந்த வீதிகளில் ஒன்று விஸ்வநாத் கலி. அனைத்து வகையான பனாரசி பட்டுப் புடைவைகள் மற்றும் சரிகைப் பூ வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுத் துணிகளும், அணிகலன்களும் விற்கப்படும் இடம் இது.
6. ராம் நகர் கோட்டை: நதிக்கரையோரம் செரிவூட்டப்பட்ட மண் கற்களால் வடிவமைக்கப்பட்ட கோட்டை இது. இப்பொழுதும் இந்த ராம் நகர் கோட்டையில் அரசர் ராம் ஆனந்த் சிங் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
7. அஸ்ஸி காட்: வாரணாசியில் உள்ள 84 படித்துறைகளில், மிகப் பழைமை வாய்ந்தவைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது அஸ்ஸி காட். அஸ்ஸி நதி கங்கையில் கலக்குமிடம் இது. சாயந்திர நேரத்தில் இங்கிருந்து காட்டப்படும் ஆரத்தி கண்களுக்கு விருந்தாய் அமையும்.
8. காசி விஸ்வநாத் டெம்பிள்: 'கோல்டன் டெம்பிள்' என்றும் அழைக்கப்படும் இந்த பழைமை வாய்ந்த சிவன் கோயில், 1780ம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. யாத்ரீகர்கள் இங்குள்ள லிங்கத்திற்கு ருத்ராபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது விசேஷம்.
கர்ம வினைகள் அனைத்தையும் தீர்த்து மோட்சத்துக்கு செல்ல வழிகாட்டியாய் அமைந்துள்ள காசி நகருக்கு அனைவரும் வாழ்வில் ஒரு முறை சென்று வருவோம்.