
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகள் தவிர, சிறிதும், பெரிதுமாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. ஆனால், தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் முருகப் பெருமானின் ஆலயங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளன. முருகப் பெருமானை கார்த்திகேயன் என்ற பெயரில் மக்கள் பிரம்மச்சாரி கோலத்தில் வழிபடும் வட நாட்டிலோ ஒன்றிரண்டு ஆலயங்களே பிரசித்தி பெற்றவை.
கேரள மாநிலத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு என்றுள்ள மிகப் பெரிய ஆலயம் ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு ஆலயமாகும். இது ‘தட்சிண பழனி’ என்றும் பெருந்திருக்கோயில் என்றும் அழைக்கப்படும் பெருமை கொண்டது. ஹரிப்பாடு தவிர, கோட்டயம் மாவட்டம் கிடாங்கூர், கண்ணுர் மாவட்டம் பையனூர் மற்றும் பெரளஸேரி , கோட்டயம் மாவட்டம் உதயணபுரம், எர்ணாகுளம் மாவட்டம் எலங்குன்னப்புழா, பத்தனம்திட்டா மாவட்டம் கொடுந்தரா ஆகியவை இந்த மாநிலத்தில் உள்ள பிரபலமான சுப்பிரமணிய தலங்களாகும்.
இன்னொரு பிரபலமான முருகப் பெருமான் ஆலயம் சங்கனாஸேரி மாவட்டம், பெருண்ண கிராமத்தில் உள்ள சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான
ஸ்ரீ சுப்பிரமண்ய ஸ்வாமி ஆலயம் ஆகும். இதை கேரள பழனி என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு வேறு எந்த முருகன் ஆலயத்திலும் நாம் காண முடியாத ஒரு தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
முருகன் என்றாலே அவருடைய தலைசிறந்த ஆயுதமான வேலாயுதம் நம் நினைவை நிறைக்கும். முருகப் பெருமானுக்குரிய கந்தன், கார்த்திகேயன், சரவணன் போன்ற பெயர்களைத் தவிர வேலைப் போற்றும் வகையில் வேலாயுதம், வேல்முருகன், செந்தில்வேல், சக்திவேல் போன்ற பெயர்கள் நமக்கு நன்கு பரிச்சயமானவை. முருகனுக்குரிய ஆலயக் கருவறையில் முருகப் பெருமான் பெரும்பாலும் நின்ற திருக்கோலத்தில் தேவியரோடு காட்சி தரும்போது, தவறாமல் அவரது சக்தி ஆயுதமான வடிவேலும், சேவற் கொடியும் அவரது இரு புறங்களிலும் இடம் பெற்றிருக்கும். இந்த வடிவேலின் கூர்மையான நுனி மேல் நோக்கியே இருக்கும்.
ஆனால், பெருண்ண ஆலயத்தில் மட்டும் அந்த வேல் தலைகீழாக, நுனி கீழ்நோக்கியவாறு வைத்த கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். முருகக் கடவுள் தாருகாசுரனை வதம் செய்த கையோடு, சினம் சற்றும் நீங்காது இங்கு எழுந்தருளியிருப்பதாக ஒரு ஐதீகம். இங்கு முருகன் கோபாவேசத்தோடு உக்ர பாவமாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் சத்ரு சம்ஹார மூர்த்தி என்றே அழைக்கப்படுகிறார்.
இந்தப் பகுதி ஒரு காலத்தில் கடற்கரையை ஒட்டிய பகுதியாக இருந்ததால் ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் (கடலும் கடல் சார்ந்த இடமும்) என்ற பெயரை நினைவூட்டும் வகையில் பெரும் நெய்தல் என்றும் பெரும்நெய்தலூர் என்றும் (பெரிய கடற்கரைப் பகுதி) என்ற அழைக்கப்பட்டு அதுவே பெருண்ண என்று மருவியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பெருண்ண ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம் அமைந்ததன் பின்னணியில் அக்காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி விரிவாகக் கூறப்படுகிறது. குமரன் நம்பூதிரி என்ற முருக பக்தர் தவறாது ஒவ்வோரு ஆண்டும் பழனிக்குச் சென்று முருக தரிசனம் செய்து வந்தார். அவர் ஒரு சமயம் பழனி சென்றிருந்தபோது அவருக்கு திடீரென்று ஊர் நினைவு வந்து வருத்தவே, முருகன் அவரது கனவில் தோன்றி, ‘கொடுந்தரா’ என்ற ஊரில் அச்சன்கோவில் ஆற்றில் உள்ள தனது விக்கிரகத்தை எடுத்து பெருண்ண கிராமத்தில் பிரதிஷ்டை செய்யும்படி அறிவுறுத்தினார். அதை ஏற்று அவரும் அந்த விக்கிரகத்தைத் தேடி எடுத்து பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டினார். இந்த ஆலயத்திற்கு குடமுழுக்கு நடைபற்ற ஆண்டு கிபி 753, மீன மாதம் (பங்குனி) 10ந் தேதி என்று வரலாற்றுச் சான்று உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டவுடனேயே விக்கிரகம் முழுவதும் சூரிய ஒளி படர்ந்ததாம். இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் இந்த பிரதிஷ்டா தினத்தில் சூர்ய ஒளி விழுவதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலயம் பற்றிய இன்னொரு கதையும் கூறப்படுகிறது. பெருண்ண அருகில் உள்ள உம்பிழி மற்றும் பெருண்ண ஆகிய இரண்டு கிராமங்களிலும் நம்பூதிரி அந்தணர்கள் வசித்து வந்தனர். பெருண்ண கிராமத்து மக்கள் அமைதியை விரும்பும், மிகவும் சாத்விகமான ஆட்களாக இருக்க, உம்பிழி கிராமத்தினர் உக்ர வழிபாட்டில் ஈடுபட்டவர்களாகவும் கோபக்காரர்களாகவும் இருந்தனராம். சிவ பக்தர்களான பெருண்ண கிராமத்தினர் தங்களுக்கென்று ஒரு சிவாலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். சிவபெருமான் அருளால் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வதைக் கண்டு பொறாமைப்பட்ட உம்பிழி அந்தணர்கள் அவர்களுக்கு பல இடையூறுகளைச் செய்து சிவாலயத்தை இடித்துத் தள்ள, அதிர்ஷ்டவசமாக சிவலிங்கம் மட்டும் காப்பாற்றப்பட்டது. தற்போது அது கீழ்க்குளங்கரா சிவாலயத்தில் உள்ளது.
இப்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்டு இடமனா இல்லத்தைச் சேர்ந்த நம்பூதிரி ஒருவர் பிரச்னையைத் தீர்த்து வைக்க இங்கிருந்து பழனி ஆலயத்திற்கு கால்நடையாகச் சென்று பஜனம் இருந்தார். சில வாரங்கள் கழித்து முருகன் அவர் கனவில் தோன்றி தேவர்களாலும் முனிவர்களாலும் பூஜிக்கப்பட்ட தன் விக்கிரகம் பத்தனந்திட்ட மாவட்டம் கொடுந்தரா ஆற்றில் உள்ளதாகத் தெரிவித்து அதை எடுத்து பிரதிஷ்டை செய்யுமாறு ஆணையிட்டாராம். அவரும் அந்த விக்கிரகத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக இன்னொரு கதை தெரிவிக்கிறது. அந்தப் பிரதிஷ்டையின்போது தங்களுக்கு இடையூறுகள் அளித்த உம்பிழி கிராமத்தினரை தன் மந்திர சக்தியால் அவர் அடக்கினார் என்றும், பின்னர் அந்த கிராமம் அழிந்து காடாக மாறியது என்றும் இந்தக் கதை தெரிவிக்கிறது.
பெருண்ண ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஆலயத்தின் நுழைவாயிலை அழகிய மூன்று நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. பலிபீடம், துவஜஸ்தம்பம், நமஸ்கார மண்டபம், நாலம்பலம் என்ற உட்பிராகாரம் ஆகியவற்றோடு கேரள பாணியில் அமைக்கப்பட்ட ஆலயமாக இது திகழ்கிறது. வட்ட ஸ்ரீ கோவில் எனப்படும் வட்டக் கருவறையில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி தேவசேனாதிபதியாக இரண்டு திருக்கரங்களோடு பத்ம பீடத்தின் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையின் அருகில் அவருடைய வேல் நுனி தலைகீழாகக் காட்சி தருகிறது. இடக்கையை இடுப்பில் வைத்து மிக அழகாக அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரகம் ஐந்து அடி உயரமானது. கருவறை வெளிச்சுவற்றில் கேரள பாணி சுவர் ஓவியங்கள் (mural paitings) உள்ளன. ஆலய வளாகத்தின் வெளியே ஒரு மரத்தின் கீழ் தலைகீழாக ஒரு பெரிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெருண்ண ஆலயத்தில் மஹாதேவர், ஐயப்பன், நாகதேவதை, ஸ்ரீ கிருஷ்ணர் சன்னிதிகள் உள்ளன. இங்கு ஸ்வாமிக்கு தினந்தோறும் சுமார் 5 கிலோ (ஐந்து இடங்கழி) அன்னம் நிவேதிக்கப்படுகிறது. ஐந்து கால பூஜைகள் செய்யப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். ஒத்த நாரங்கா வழிபாடு சிறப்பானது. பக்தர்கள் ஒரு தட்டில் எலுமிச்சம் பழம் மற்றும் பூஜைப் பொருட்கள் வைத்துக் கொண்டு வலம் வந்து முருகனுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
பெருண்ண ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இதை தைப்பூயம் என்கிறார்கள். இந்நாளில் நடைபெறும் காவடித் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இந்த காவடித் திருவிழாவில் கேரள மாநிலத்தின் மிக முக்கியமான ஏழு முதல் பதினைந்து யானைகள் கலந்து கொள்கின்றன. தைப்பூச நாளில்தான் முருகப் பெருமான் தாருகாசுரனை வதம் செய்ததாக ஐதீகம். பன்னிரு கரங்களோடு முருகப் பெருமான் அசுரனுடன் போர் செய்யச் சென்றபோது பதினொரு ஆயுதங்களை சிவபெருமான் அளித்ததாகவும் வலிமை மிக்க ஆயுதமான வேலை பார்வதி தேவி தனது குமாரன் முருகனுக்கு வழங்கியதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், திருக்கார்த்திகை, கந்த ஷஷ்டி, சூரஸம்ஹாரம் போன்ற முருகப் பெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
- விஜயலட்சுமி சுப்பிரமணியம்