
நம் முன்னோர்கள் நமக்கு சூட்சுமமாக நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் எப்போதும் பாசிட்டிவான வார்த்தைகளை பேச வேண்டும் என்பது. ‘ததாஸ்து’ என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருளாகும். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
நம் வீட்டில் எப்போதுமே ஒரு தேவதை நம்மைச் சுற்றி இருந்துக் கொண்டேயிருக்கும். நாம் எதைச் சொன்னாலும் உடனே 'ததாஸ்த்து' என்று சொல்வதே அதனுடைய வேலையாகும். அதாவது 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்வதே அந்த தேவதையின் விதிக்கப்பட்ட வேலையாகும்.
அதனால் தான் நம் வீட்டில் எப்போதுமே மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். எப்போதும் பாசிட்டிவான நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவது குடும்பத்திற்கு நன்மையை தரும்.
உதாரணத்திற்கு யாராவது தெரிந்தவர்கள் ஒரு பொருளை நம்மிடம் கடனாக கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பொருள் நம்மிடம் இல்லை அல்லது அந்த பொருளை கொடுக்க நமக்கு மனமில்லை என்றால், உடனே ‘என்னிடம் இல்லை’ என்று சொல்லக்கூடாது.
அவ்வாறு நாம் சொல்லும் போது அப்படியே ஆகட்டும் என்று அந்த தேவதை ஆசிர்வதிக்கும் போது அவ்வாறே நடந்துவிடும். எனவே, ‘எங்களிடம் அந்த பொருள் நிறைய இருந்தது. தற்போது திரும்பவும் வாங்கிவர வேண்டும்’ என்று சொல்ல வேண்டும். யாரேனும் பணம் கடன் கேட்டால் அது உங்களிடம் இல்லை என்றால், ‘உங்களுக்கு தரும் அளவிற்கு என்னிடம் மிகுதியாக பணம் வந்து சேர வேண்டும்’ என்று சொல்வது நல்லதாகும்.
இவ்வாறு நல்ல பாசிட்டிவான வார்த்தைகளை தேர்வு செய்து பேசும் போது நம் வீட்டிற்கு மேலும் செல்வம் வந்து சேரும். அதைவிடுத்து ‘இல்லை’ என்று கூறுவதால், இருப்பதும் இல்லாமல் போய்விடும். இதற்காக தான் எப்போதும் நல்ல மங்களகரமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள். நாம் பேசும் வார்த்தைகளில் இருந்து வரும் பாசிட்டிவான அதிர்வலைகள் நம்மையும், நம் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இனி நீங்களும் உங்கள் வீட்டில் ‘இல்லை’ என்று சொல்லாமல் பாசிட்டிவாக பேசுவதற்கு முயற்சித்துப் பாருங்களேன்.