
காமதேனுவின் சாபத்தை போக்குவதற்காக வேங்கை வடிவில் வந்த சிவப்பெருமான் இன்றைக்கும் சிவலிங்கத்தில் வேங்கை வடிவில் காட்சித் தருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காண்போம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டத்தில் அமைந்திருக்கும் திருவேங்கைவாசல் என்னும் இடத்தில் இந்த அதிசயக் கோவில் அமைந்துள்ளது.
‘வியாக்ரம்’ என்றால் புலி என்று அர்த்தம். இக்கோவிலின் மூலவரை வியாக்ரபுரீசுவரர் என்றும் தாயாரை பிரகதாம்பாள் என்றும் பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள். இக்கோவிலில் உள்ள மூலவரை திருவேங்கைநாதர் என்றும் அழைக்கிறார்கள்.
இவர் இங்கே சிவலிங்க வடிவில் காட்சித் தருக்கிறார். அர்ச்சகர் தீபாரதனை காட்டும்போது வரும் ஒளியிலே இறைவனின் வேங்கை வடிவத்தை காண முடியும். சிவலிங்கத்தின் மேல்பகுதியில் இரண்டு வேங்கை கண்களையும், ஆக்ரோஷமாய் திறந்திருக்கும் வேங்கையின் வாய்ப்பகுதியையும் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புராணக்கதையின்படி, ஒரு சமயம் இந்திரன் விடுத்த சாபத்தின் காரணமாக தெய்வப்பசுவான காமதேனு சாதாரண பசுவாக பூமியில் பிறப்பெடுத்தது. அதை வசிஷ்ட முனிவர் அன்போடு வளர்த்து வந்தார். ஒருநாள் காமதேனு வசிஷ்ட முனிவரிடம் தனக்கான சாப விமோச்சனத்திற்கான வழியைக் கேட்டது. அதற்கு வசிஷ்டர் காமதேனுவை கபில முனிவரை போய் பார்க்கும்படி அறிவுரைக் கூறினார். காமதேனுவும் கபிலரை சந்தித்து நடந்ததைக் கூறியது. அதற்கு கபில முனிவரும், ‘அங்கிருக்கும் சிவாலயத்தில் சிவபெருமான் வகுளவனேசுவரராக காட்சித் தருகிறார் என்றும் தினமும் அவருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்துவர சாபவிமோச்சனம் கிடைக்கும்' என்று கூறி அனுப்பி வைத்தார்..
காமதேனுவும் தினமும் கங்கை நீரை தனது காதுகளில் ஏந்திக்கொண்டு சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தது. இதற்கு நடுவிலே ஒரு கன்றையும் ஈன்று அதற்கு பால் ஊட்டிக்கொண்டு வந்தது.
ஒருநாள் காமதேனு கங்கை நீரை எடுத்துக்கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய சென்றுக் கொண்டிருந்த போது ஒரு வேங்கை அதனை சாப்பிட காத்திருந்தது. வேங்கையிடம் கெஞ்சிய காமதேனு, ‘என்னை விட்டுவிடு! நான் சிவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு, என் கன்றுக்கு பால் கொடுத்துவிட்டு திரும்பி உன்னிடமே வருகிறேன்’ என்று வாக்குக் கொடுத்தது. காமதேனுவும் அவ்வாறே தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வேங்கையிடம் இரையாக வந்து நின்றது. இதை பார்த்து மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியுடன் காட்சி அளித்து காமதேனுவிற்கு நற்கதி வழங்கினார்.
சிவபெருமான் வேங்கையாக உருமாறி பசுவை வழிமறித்த இடம் தான் ‘திருவேங்கை வாசல்’ என்று அழைக்கப்படுகிறது. பசு தன் காதுகளில் கங்கை நீரை எடுத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த தலம் ‘திருகோகர்ணம்’ என்று வழங்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று சிவபெருமானை தரிசித்துவிட்டு வருவது வாழ்வில் நன்மை பயக்கும்.