
சிவபெருமானின் கண்ணீர் துளிகள் சிந்திய இடத்தில் அவதரித்த மரம்தான் ருத்திராட்சம். ருத்திராட்ச பழங்களின் உள்ளே காணப்படும் விதைகளில் படிந்துள்ள பள்ளங்களே அந்த சதையில் அழுத்தி பிதுங்கி கொண்டு, பின் நாட்களில் முகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பள்ளங்கள் பழத்திற்குப் பழம் வேறுபடுவதால் ருத்திராட்ச முகங்களும் வெவ்வேறு எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ருத்ராட்சம் அணிவது பற்றி பகவான் ஆதிசங்கரர் கூறுவது என்ன? அதை அணிந்ததால் திரௌபதிக்கு நடந்தது என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஜபம் செய்யும்பொழுது எந்தெந்த நேரத்தில், உடலில் எந்த இடத்தில் ஜபமாலையை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆதிசங்கரர் தனது மாணவர்களுக்குக் கூறிய கருத்து என்னவென்றால், காலை நேரத்தில் ஜபமாலையை நாவிற்கு இணையாகவும், நடுப்பகலில் மார்புக்கு நேராகவும், மாலை நேரத்தில் நாசிக்கு இணையாகவும் வைத்துக்கொண்டு ஜபம் செய்தல் வேண்டும் என்று கூறுகிறார். இப்படி ஜபமாலை கொண்டு ஜபிப்பதால் மனதின் ஒருநிலை சிதறாமல், இறை நாமத்தை உருக்கொள்ள முடிகிறது. இதனால் ஜபத்தின் முழுமையான பயனை விரைவில் அடைய முடியும் என்று கூறியிருக்கிறார்.
பெண்கள் அணியும் முறை: ருத்ராட்சத்தை ஐந்து வயது முதல் அனைவரும் அணியலாம் என்று கூறப்படுகிறது. மூதாட்டிகளும், வீட்டு விலக்கற்ற நாளில் பிற பெண்களும் அணியலாம் என்ற கருத்தும் இருக்கிறது. மூன்று முக ருத்ராட்சத்தை பெண்கள் தாலிக்கொடியில் அணிந்து இருந்தால் கணவருக்கு ஆயுள் பெருகும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, பெண்கள் ருத்ராட்சம் அணிவதற்குத் தடை இருந்ததாகவும் கூறப்படுவதைக் காண முடியும். ஆனால், பாஞ்சாலி வரலாற்று சபதத்தில் வரும் ஒரு செவிவழிச் செய்தி இதற்கு மாறாக உள்ளது.
இதுபோல், செவிவழி செய்திகள் ராமாயணம், மகாபாரதக் காப்பியங்களில் சில இடங்களில் வருவதைக் காணலாம். குறிப்பாக, பெண்கள் எதற்கும் ஆசை உடையவர்கள் என்பதற்கு சீதையும் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் ஒரு கதை கூறப்படுகிறது. அதுவும் செவிவழிச் செய்திதான். அசோகவனத்தில் இருக்கும் பொழுது அங்குள்ள அம்மி குழவியில் தினசரி மசாலா அரைத்தது சீதைக்கு அந்த அம்மி குழவி மீது ஆசை வந்ததாம். அதையும் எடுத்துச் செல்லலாம் என்று கூறியதாக ஒரு தகவல் உண்டு. இதுவும் செவிவழிச் செய்திதான்.
மகாபாரதத்தில் கூறப்படும் செய்தி: அன்று நடைமுறை வழக்கப்படி வீட்டு விலக்கான பெண்கள் அவைக்கு வருவதும், இறைவனை வணங்குவதும் தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் பாண்டவர்கள் சூதாடி, திரௌபதியையும் இழந்த பின்னர் அவள் அவைக்கு இழுத்து வரப்பட்டாள் என்றாலும், மேற்கூறிய காரணத்தால் அவள் அவைக்கு வருவதையோ, இறைவனை வணங்குவதையோ விரும்பவில்லை என்றும், அதனால்தான் கண்ணனை உடனேயே அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தனது தற்காப்பு முயற்சிகளுக்குப் பின்னர் சற்று காலம் தாழ்த்தி கண்ணபிரானை உதவிக்கு அழைத்ததாகவும், அந்த மன மாற்றத்திற்குக் காரணம் அவள் அணிந்திருந்த மூன்று முக ருத்ராட்சமே என்றும் கூறப்படுகிறது. ருத்ராட்சம் இறைவனுக்குச் சமமானது. வீட்டு விலக்கு காலத்திலும் ருத்ராட்சம் அணிவது சரி என்பதால் அந்த நேரத்தில் இறைவனை வணங்குவதோ அழைப்பதோ தவறில்லை என்ற முடிவுக்கு வருகிறாள். கண்ணபிரானை கை குவித்து வணங்கி அழைக்கிறாள். அவரும் உதவிக்கு வருகிறார்.
இதனால் மூன்று முக ருத்ராட்சத்தை பெண்கள் தாலி கொடியில் எப்போதும் அணிந்திருந்தனர் என்று தெரிய வருகிறது. தூய்மையற்ற காலத்தில் ருத்ராட்சத்தை அணிந்துவிட்டதாகக் கருதினால் அதனை தூய்மை செய்திட கோமியம், மஞ்சள் நீர், கறந்த பால் இவற்றில் ஏதாவது ஒன்றினால் கழுவி தூய்மைப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக, ருத்ராட்சம் தனி மணியாகவும், மாலையாகவும் அணியப்படுகிறது. முனிவர்கள் தலை, கழுத்து, மார்பு, காது, கை போன்ற பகுதிகளில் இதை அணிவதுண்டு. நாடி மண்டல பகுதிகளில் அணிதல் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது. நான்முகன், கலைமகள், பெருமாள், திருச்செந்தூர் முருகன் போன்ற கடவுளர்கள் கையில் ருத்ராட்ச மாலை வைத்திருப்பதும், சிவ பார்வதி உடல் முழுவதுமாக ருத்ராட்சம் அணிந்திருப்பதும் ருத்ராட்சத்தின் பெருமையை உணர்த்துபவையாகும். ருத்ராட்சங்களை முறையாக அணிவதும், பிறர் கை அதில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியதும் அதி முக்கியம்.