

சகல லோகங்களையும் அச்சுறுத்தி வந்த தீய சக்திகளான அரக்கர்களை அழிக்க ஈசனின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரே பைரவ மூர்த்தி. இவரே பிரம்மனின் ஆணவத்தை அழிக்க ஒரு தலையைக் கொய்து நான்முகனாக மாற்றியவர். அன்னபூரணியிடம் தானம் பெற்று காசிராஜனாக, காலதேவனாக வீற்றிருப்பவரும் பைரவரே. காலமெனும் யமனின் அதிகாரத்தைக் குறைத்து தம்மை சரண் அடையும் பக்தர்களுக்கு அபயம் அளித்து நீண்ட ஆயுள் வழங்கும் தெய்வமும் இவரே என்கின்றன புராணங்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் சூரக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது தேசிகநாதர் சிவன் கோயில். இங்குள்ள மூலவர் தேசிகநாதர் ஆவார். முன்னொரு காலத்தில் சூரியன் வழிபட்ட தலம் இது என்பதால் இங்கு முதலில் சூரியனுக்கு பூஜை செய்யப்பட்டு, பின்னரே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கும். பொதுவாக, சிவன் கோயில்களில் பைரவர் கையில் சூலத்துடன் காட்சி அளிப்பார். ஆனால், இங்கு பைரவர் சூலத்திற்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருகிறார். இங்கு பைரவரே பிரதான மூர்த்தி. இங்கு நடைபெறும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா வருகிறார்.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அரசூர் கிராமத்தில் அமைந்துள்ளது திருவாலீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் திருவாலீஸ்வரர் மற்றும் சௌந்தரவல்லி அம்மன் அருள்வதுடன், சில சிறப்பு வாய்ந்த அம்சங்களும் உள்ளன. இங்கே உள்ள பைரவர் சிலை கருங்கல்லால் ஆனது என்றாலும், அதைத் தட்டினால் வெண்கல ஓசை எழுவது ஒரு அதிசயமான அம்சமாகும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது வைரவன்பட்டி பைரவர் கோயில். அழகான திருக்குளத்துடன் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது இக்கோயில். வளரொளி நாதராக கோயில் கொண்டிருக்கிறார் ஈசன். இக்கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீ பைரவ தரிசனம். பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார். தொடர்ந்து 3 புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீ பைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்; இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்கின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு வாலீஸ்வரர் சன்னிதியை விட, காலபைரவரின் சன்னிதியே பெரிதாக உள்ளது. நின்ற கோலத்தில் காலபைரவர் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே அவருடைய வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வித்தியாசமாக வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை இல்லாத தம்பதிகள் இங்குள்ள புனித குளத்தில் நீராடி காலபைரவரை வணங்கி அங்கு கல் வடிவில் இருக்கும் நாய் குட்டியை எடுத்து கொண்டு அங்கிருக்கும் நாய் வாகனத்தை மூன்று முறை சுற்றி வந்து பொம்மையை கீழே வைத்து விட்டு காலபைரவரை பிரார்த்தனை செய்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மதுரையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 25 கி.மீ. தூரத்தில் உள்ள திருமயம் சென்று, அங்கிருந்து 9 கி.மீ. சென்றால் உள்ளது துர்வாசபுரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இங்கு தனி சன்னிதியில் உள்ள காலபைரவருக்கு கற்பூர ஆரத்தி செய்யப்படும் தட்டை பக்தர்களிடம் காட்டுவது கிடையாது. அதுபோல, இங்குள்ள பைரவருக்கு சாத்தப்பட்ட சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் பூக்களையும் பக்தர்களுக்கு கொடுப்பதில்லை. சிவன், அம்பாள் சன்னிதியிலும் பிரசாதம் தரப்படுவதில்லை. நினைத்த காரியங்கள் கைகூட இவருக்கு பசு நெய்யால் செய்த வடை மாலை சாத்தப்படுகிறது. கார்த்திகையில் நடக்கும் சம்பக சூர சஷ்டி விழாவின்போது ஆறு நாட்களும் பைரவர் பவனி வருகிறார். அப்போது மல்லாசுரன், பத்மாசுரன் என்னும் அசுரர்களை வதம் செய்த வைபவம் நடக்கிறது. பைரவர் இங்கு பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால் இக்கோயில், ‘பைரவர் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் பாதையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மற்ற கோயில்களில் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கும் காலபைரவர், இக்கோயிலில் மேற்கு நோக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்குள்ள காலபைரவர் சன்னிதியில் தரும் அர்த்த ஜாம பூஜை விபூதி பிரசாதத்தை குழந்தைகளுக்கு இட, அவர்களை காலபைரவர் காப்பதாக நம்பிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது சோளீஸ்வரர் கோயில். இது, எட்டு திசைகளிலும் எட்டு பைரவர் சிவலிங்கங்களைக் கொண்ட ஒரு சிறப்பான ஆலயம் ஆகும். இந்த அஷ்ட பைரவர்களும் ‘ஓம்’ என்ற வடிவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லாதது.
காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தங்கத்தினாலான காலபைரவர் உத்ஸவ விக்கிரகம் உள்ளது. வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே இவர் திருவீதி உலா வருகிறார். அந்த நாள் தீபாவளி திருநாள்.