

ஒரு வீட்டில் செல்வமும் செழிப்பும் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் மகாலட்சுமி தாயார் தங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும். அன்னை மகாலட்சுமி விரும்பியதை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்கும் மனது கொண்ட தெய்வம். செல்வச் செழிப்பு மட்டுமல்ல, ஒருவரின் மரியாதையை நிர்ணயம் செய்வதும் மகாலட்சுமி தாயாரின் அருளினால்தான். இது மட்டுமல்லாமல், மகிழ்ச்சியின் மூல காரணமாகவும் அன்னை மகாலட்சுமி தேவியே இருக்கிறாள்!
மகாலட்சுமி ஒரு வீட்டில் வந்து தங்க வேண்டும் என்றால், அவருக்குப் பிடித்ததைப் போல அந்த வீடு இருக்க வேண்டும். ஒருசிலர் நல்ல செழிப்பாக இருந்து விட்டு, திடீரென்று வறுமையின் பிடியில் சிக்கி தங்களின் உயர்ந்த நிலையில் இருந்து, தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பார்வை திடீரென்று தடைப்பட்டதால், அவர்களின் அதிர்ஷ்டம் கெட்டுப்போய், தொட்ட செயல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கும். மகாலட்சுமி தாயார் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற ஒருசில செயல்கள் காரணமாக உள்ளன. அந்த செயல்கள் என்னவென்று அறிந்துக் கொண்டு அந்தத் தவறை மீண்டும் செய்யாதிருங்கள்! அது குறித்து இனி பார்ப்போம்.
1. தேவையில்லாமல் பணத்தைச் செலவிடுதல்: பணத்தை எப்போதும் தேவைக்கேற்ப செலவிட வேண்டும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை கூடுமான அளவில் தவிர்த்து விட வேண்டும். பணத்தினை சேமிக்கும் பண்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயாரின் ஆசிர்வாதம் இருக்கும் வரையில் பணம், போதும் போதும் என்ற அளவிற்கு வந்து சேர்ந்து விடும். அதை தகுந்த முறையில் சேமிக்காமல், வீண் செலவுகள் செய்தால் மகாலட்சுமி தேவியின் அருளை இழக்க நேரிடும். எப்படிப் பணம் வேகமாக சேர்ந்ததோ, அதேபோல ஒரு நாளில் மொத்தமாக கரைந்து விடும்.
2. வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்: மகாலட்சுமி தாயார் எப்போதும் சுத்தத்தினை விரும்புவாள். சுத்தமான, பிரகாசமான இடத்தைப் பார்த்தால், மகாலட்சுமி தாயார் அங்கு வந்து குடியேற நினைப்பாள். வீட்டில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மிக முக்கியமாக சமையல் அறையின் தூய்மை. அடுப்பை எப்போதும் சுத்தமாக வைக்க வேண்டும், பயன்பாட்டிற்குப் பின் அசுத்தமானதும் உடனே துடைத்து விடவும், முக்கியமான நாட்களில் அடுப்பை சுற்றி சிறிய கோலங்கள் இடுவதும் தேவியை வரவேற்கும் செயலாக இருக்கும். அனைத்திலும் முதன்மையாக வீட்டு வாசல் சுத்தம் செய்யப்பட்டு அரிசி மாவு கோலம் இட வேண்டும்.
3. இருட்டிய பின்னர் செய்யக் கூடாதது: சூரியன் மறைந்த பின்னர் துடைப்பத்தை எடுக்கக் கூடாது. வீட்டை சுத்தம் செய்வது, வீட்டைக் கழுவுவது போன்றவை கூடாது. தலையை சீவுவது, பேன் பார்ப்பது, முடிகளை வெட்டுவது, நகங்களை வெட்டுவது, துணி தைப்பது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இது போன்ற செயல்களை செய்தால் மகாலட்சுமி தேவி கோபமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவாள்!
4. சோம்பல் மற்றும் மோசமான நடத்தை: ஒரு இடத்தில் சோம்பல் வந்து விட்டால், அந்த இடத்தில் உழைப்பு என்பது குறைந்து விடும். உழைப்பு குறைந்து விட்டால், செல்வம் சேர்வதில் தடை ஏற்படும். சோம்பல் குடிக்கொண்ட இடத்தில் எப்போதும் மகாலட்சுமி குடியிருக்க விரும்ப மாட்டாள். அது போல வீட்டில் உள்ளவர்களின் பேச்சிலும் செயலிலும் நல்ல வார்த்தைகள் இருக்க வேண்டும்.
பெரியோர்களை மதிக்கும் குணமும், இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் குணமும் இருக்க வேண்டும். தினமும் மங்கலகரமான வார்த்தைகளை உச்சரிப்பவர்கள் வீட்டிலும், மகாவிஷ்ணுவின் நாமத்தை ஜபிக்கும் வீட்டிலும் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வாள். அது போல துளசி செடி வைத்திருந்தால், அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதை வாட விடக் கூடாது.
மேற்கண்ட விஷயங்கள் குறைவின்றி நடைபெறும் வீடுகள் அனைத்திலும் அன்னை மகாலட்சுமி தாயார் விருப்பமுடன் தங்கி செல்வ மழை பொழிவாள் என்பதில் சற்றும் ஐயமில்லை.