
புத்தரின் இறுதித் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதை அனைவரும் அறிந்து கொண்டனர். அவர்களின் வருத்தம் சொல்லி மாளாது. பலர் கண்ணீர் விட்டுக் கலங்கினர். பலர் புலம்பலாயினர். அனைவரையும் பார்த்தவாறே புத்தர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
புத்தர் ஒருபோதும் பெரிய கூட்டத்தையோ அல்லது சிஷ்யர்களின் ஆரவாரமான குழுவையோ விரும்பியதில்லை. ‘தன் சொல்லைப் பின்பற்ற வேண்டும்’ என்பதே அவரது போதனை. தனக்கு பெரிய சிலை அமைத்து மரியாதை செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அவர் சொன்னதே இல்லை.
இப்படி அனைவரும் புலம்பித் தவிக்கும்போது தம்மாராமா என்ற ஒரு பிக்ஷு மட்டும் வருத்தப்படாமல், புலம்பாமல் இருந்தார். அவர் மனதில், “இப்படிப் புலம்பித் தவிப்பதற்குப் பதிலாக புத்தபிரான் சொன்னதை அப்படியே கடைப்பிடித்து ஒரு உயர்நிலையை அடைவதற்கு அனைவரும் முன் வர வேண்டும்” என எண்ணினார்.
இந்த உறுதியுடன் அவர் ஒரு தனி இடத்தில் ஒதுங்கினார். தியானத்தில் ஆழ்ந்த அவர் ஓர் உயரிய நிலையையும் சுத்தமான மனதையும் அடைந்தார். ஆனால், இதைப் பார்த்த மற்ற பிக்ஷுக்களுக்கு பெரும் கோபம் வந்தது. ‘எல்லோரும் இப்படி வருந்தித் தவிக்கிறோம். தம்மாராமன் மட்டும் ஒரு தனி இடத்தில் இருக்கிறாரே. இது நியாயமா?’ என்று எண்ணி அவரைக் கட்டி இழுத்து புத்தரிடம் கொண்டு சென்றனர்.
புத்தர், ‘‘எதற்காக இவரைக் கட்டி இழுத்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“ஐயனே! அனைவரும் வருத்தப்படும் வேளையில் இவர் ஒரு சோகமும் இன்றி தனி இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால்தான் இவரை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர்.
புத்தர் அவரைப் பார்த்து, “இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டார்.
“ஆமாம், ஐயனே! உண்மைதான்! நான் நீங்கள் சொன்னபடி ஒரு தனி இடத்தில் இருந்து தியானித்து நீங்கள் மறைவதற்கு முன் நீங்கள் சொன்ன உயரிய நிலையை அடைய ஆசைப்பட்டேன். அதற்காக அப்படி தனி இடத்தில் இருந்து தியானிக்க ஆரம்பித்தேன். நான் இவர்களைப் போல அழவில்லை” என்றார்.
அவரைப் பார்த்த புத்தபிரான் அவர் பரிபக்குவ நிலையை அடைந்ததை உடனே உணர்ந்து கொண்டார். தனது இரு கைகளையும் கூப்பி, “சாது! சாது! சாது!” என்றார்.
அழுது கொண்டிருக்கும் மற்ற பிக்ஷுக்களைப் பார்த்து, “பிக்ஷுக்களே! யாரெல்லாம் அழுது புலம்புகிறார்களோ அவர்கள் எல்லம் என் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தமில்லை. என் ஒரு வார்த்தையை சிரமேற்கொண்டு அதை அப்படியே கடைப்பிடித்திருக்கிறாரே தம்மாராமன், இவரே எனக்குப் பிடித்தமானவர். யார் என் சொல்படி நடக்கிறார்களோ அவர்களே என்னை நிஜமாக அறிந்தவர்கள்” என்றார்.
தனது இறுதிகட்ட நிலையில் இருந்த புத்தர் அருளிய கடைசி உபதேசம் இதுவே! ‘வழிகாட்டும் நெறிமுறைகளை சங்கத்திடமிருந்து நான் கற்று அதைக் கடைப்பிடித்து சங்கத்தின் வழியில் நிற்பேன்’ என்பதே, ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்பதன் உண்மையான அர்த்தமாகும்.