திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு வணங்க வேண்டிய கடவுள் யார் தெரியுமா?

Adi Varaha Swamy Temple Tirupati
Adi Varaha Swamy Temple Tirupati
Published on

திருமாலின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் குறித்து அறிந்திருப்போம். பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் கொண்டு சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமி பிராட்டியை காக்க, வராக அவதாரமெடுத்த பகவான் மகாவிஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு அசுரனை வென்று பூமா தேவியை காத்தார் என்பது வரலாறு.

நாடு முழுவதும் வராகப் பெருமானுக்கு பல கோயில்கள் இருந்தாலும் திருமலை திருப்பதியில் உள்ள வராகப் பெருமானின் கோயில் மிகவும் விசேஷமானது. திருமலை திருப்பதி தலம் ஆதியில் வராக தலமாகவே இருந்துள்ளது. அங்கே இருக்கக்கூடிய புஷ்கரணிக்கு சுவாமி புஷ்கரணி என்று பெயர். அதன் கரை மேல் அமைந்துள்ளது ஆதி வராக சுவாமி திருக்கோயில். அன்று முதல் இன்று வரை திருமலை திருப்பதியில் முதல் பூஜை வராகப் பெருமானுக்குத்தான்.

‘ஸ்ரீ வேங்கட வராஹாய சுவாமி புஷ்கரணி தடே
சர்வணர்ஷே துலா மாஸே ப்ராதுர்பூதாத்மனே நம’

‘திருவேங்கட மலையில் உள்ள சுவாமி புஷ்கரணியில் ஐப்பசி மாதம் திருவோண நன்னாளில் தோன்றிய வராக பெருமாளுக்கு வணக்கம்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். பாத்ம புராணத்தில் திருமலை வராக தலமாக இருந்தது விளக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அதிகம் அறியப்படாத ரகசியங்களைக் கொண்ட 6 தனித்துவமான கோயில்கள்!
Adi Varaha Swamy Temple Tirupati

முன்னொரு காலத்தில் பக்தியுடன் இருந்த ஓர் அரசன் தொடர்ந்து பசும்பாலை ஒரு புற்றின் துவாரத்தில் அபிஷேகம் செய்தபோது அதன் உட்பகுதியில் இருந்து வராகப் பெருமான் தோன்றி காட்சியளித்தார் என்பது ஆன்மிக வரலாறாக உள்ளது. ஆயினும், இங்கே ஸ்ரீநிவாச பெருமாளுக்குதான் பிரத்யேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காரணம், ஒரே திருத்தலத்தில் இரண்டு பெருமாளுக்கு முக்கிய பூஜைகள் நடப்பது ஏற்புடையது அல்ல என்பதால் சீனிவாச பெருமாளுக்கு பலிபீட பூஜை, ஹோமம், பிரமோத்ஸவம் முதலியவற்றை நடத்தும்படியான முறைகளை ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்தினார். திருப்பதி சீனிவாசப் பெருமாளுக்கு பூஜைகள் தொடங்குவதற்கு முன்பு வராக பெருமாளுக்கு பூஜை செய்யப்பட வேண்டும் என்பதே நியதி. யாத்திரை செல்பவர்கள் வராக தீர்த்தத்தில் நீராடி வராக விமானத்தை வணங்க வேண்டும் என்றும் இராமானுஜர் வரையறுத்துள்ளார்.

புராணத்தில் சீனிவாச பெருமாள் வராகரிடம் இங்கே தங்க இடம் வேண்ட, அவருக்கு வராக பெருமாள் இடம் வழங்கியதாக குறிப்பு உள்ளது. சீனிவாசர் வராக பெருமானிடம் கேட்கிறார், ‘இம்மலையில் உம்மைக் காணும் பாக்கியம் பெற்றேன். கலி யுகம் முடியும் வரை இங்கேயே நான் வசிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. எனக்கு வசிக்க இடம் அளிக்க வேண்டும்’ என்று விண்ணப்பிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
பக்தியின் உச்சம்: பணம், புகழைத் தாண்டி கடவுளிடம் கேட்க வேண்டிய விஷயம்!
Adi Varaha Swamy Temple Tirupati

அதற்கு வராகரும், ‘எனக்கு ஏதேனும் விலை கொடுத்து வசிக்கும் இடத்தை பெற்றுக் கொள்ளும்’ என்று கூற, சீனிவாசனும், ‘இத்தலத்தில் எல்லோரும் உம்மையே முதலில் வணங்குவர். பால் திருமஞ்சனமும் நைவேத்தியமும் உமக்கே நடைபெறும்’ என்று கூற, வராக பெருமானும் சீனிவாசனுக்கு 100 அடி விஸ்தீரணம் அளவு கொண்ட இடத்தைக் கொடுத்தார் என்று புராணத்தில் உள்ளது.

வராகப் பெருமானுக்கு ராமானுஜர் ஒரு உத்ஸவ மூர்த்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு ஒரு நாள் அத்யயன உத்ஸவம், வராக ஜயந்தி உத்ஸவம் நடத்தினார். திருமலையில் வராகர் தோன்றிய ஐப்பசி திருவோண தினத்தன்று சிறப்பாக உத்ஸவம் நடத்தி அருளினார். இன்றும் அப்படியே நடைபெற்று வருகிறது. மேலும், இன்றும் வராகரை வணங்கிவிட்டே மலையப்பனை வணங்க வேண்டும் என்பது நியதியாக உள்ளது. அப்பொழுதுதான் திருப்பதி பெருமாளின் வழிபாடு பூரணத்துவம் பெறும் என்கின்றனர் பக்தர்கள்.

‘விட்டுத் தருபவர்களுக்கே முதலிடம்’ எனும் தத்துவத்தை வராகப் பெருமாள் இதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார். இனி, திருமலை திருப்பதி சென்றால் ஸ்ரீ வராகரை முதலில் தரிசித்து நலம் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com