Prayer to God
Prayer to God

பக்தியின் உச்சம்: பணம், புகழைத் தாண்டி கடவுளிடம் கேட்க வேண்டிய விஷயம்!

Published on

தினமும் வீட்டில் விளக்கேற்றி, சுவாமி படங்களுக்கு பூக்கள் சாத்தி, ஊதுபத்தி சாம்பிராணி பொருத்தி வைத்து பிரார்த்தனை செய்து முடிவில் சூடம் காட்டி வழிபடுகிறோம். நமது பிரார்த்தனையில் கண்டிப்பாக கடவுளிடம் குடும்பத்திற்காகவும் தனக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம். அதேபோல, கோயில்களில் குடும்பத்தினரின் பெயர்களில் அர்ச்சனை செய்து, தனக்கு வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களை ஒரு பட்டியல் போட்டு அவற்றை நிறைவேற்றித் தரும்படி இறைவனை மனதார வேண்டுவது மனிதர்களின் இயல்பு. அந்தப் பட்டியலில் பணம், பொருள், பதவி, அந்தஸ்து, அதிகாரம் போன்றவை நிச்சயம் இடம் பெறும். வெகு சிலர் பணம், பதவிக்கு ஆசைபடாமல், ஆரோக்கியம், மன நிம்மதி மட்டும் வேண்டும் என்று கேட்பதும் உண்டு.

சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கும்போதே, ‘நாம நல்லா இருக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ’ என்று பெற்றோரால் சொல்லித் தரப்பட்டுத்தான் வளர்க்கப்படுகிறோம். வளர வளர பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும், கல்லூரி தேர்வுகள், பின்பு நல்ல வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வீடு, வாகனம், சொத்துக்கள் போன்றவை வாங்குவதற்கும் கடவுளுடைய உதவியை நாடுகிறோம். ஒரு மனிதனின் கடைசி மூச்சு வரை கடவுளிடம் வேண்டுவது நிற்பதில்லை.

இதையும் படியுங்கள்:
முப்பெரும் மன்னர் காலத்தில் வழிபாட்டில் இருந்த ஜேஷ்டா தேவி வழிபாட்டின் ரகசியம்!
Prayer to God

தினமும் இப்படி வேண்டுவதால் கடவுள் நம் மீது எரிச்சலும் கோபமும் கொள்வாரா? இது குறித்து ஒருமுறை, தமது சொற்பொழிவில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறும்போது, ‘ஒரு மனிதன் தினமும் அலுவலகம் செல்லும்போது பேருந்து நிலையத்தில் இருக்கும் இரண்டு, மூன்று பிச்சைக்காரர்களுக்கு தினமும் ஐந்து பைசா யாசகம் கொடுப்பது வழக்கமாம். அது மிகவும் சிறிய தொகை என்பதால் அவரும் தொடர்ந்து தர்மம் செய்துகொண்டு வந்திருக்கிறார். ஒருமுறை இப்படி ஐந்து பைசாக்கள் கொடுத்த பின்பு, பத்து நிமிடத்திலேயே மீண்டும் அவரிடமே அந்த யாசகர்கள் காசு வேண்டி நின்றபோது அவருக்கு அதீதமான கோபம் வந்ததாம். ‘இப்பதானே ஆளுக்கு அஞ்சு, அஞ்சு பைசா கொடுத்தேன். அதுக்குள்ள மறுபடியும் வந்து நிக்கிறீங்க?’ என்று கத்தினாராம்.

ஒரு நாளில் இரண்டாம் முறை கேட்கும்போதே மனிதனுக்கு கோபம் வருகிறதே? ஆனால், தினமும் கடவுளிடம் ஓயாமல் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்களே பக்தர்கள். இப்போது தெரிகிறதா? யார் உண்மையான யாசகர்கள் என்று?’ எனக் கேட்கிறார், தனக்கே உரிய பாணியில் வாரியார் சுவாமிகள்.

இதையும் படியுங்கள்:
குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் மீனாட்சி அம்மன் கோயில் பள்ளியறை பூஜை தரிசனம்!
Prayer to God

கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுப் பெறுவதில் தவறில்லை. பணம், புகழ், பதவி, அதிகாரம், அந்தஸ்து என்று விரும்பாத மனிதர்கள் யாரும் இல்லை. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் மனம் கண்டிப்பாக தன்னிறைவு அடைந்தே தீர வேண்டும். போதும் என்ற மனப்பான்மை வர வேண்டும். வாழ்வின் கடைசி கட்டத்தில் மரணத்தின் தருவாயில் இருந்து கொண்டு ஞானம் பெறாமல், மத்திம வயதிலாவது லெளகீக விஷயங்களை கேட்பதை நிறுத்த வேண்டும்.

கடவுளின் அன்பும் அருளும் மட்டும் போதும் என்ற நினைப்பு வர வேண்டும். அவர் இத்தனை வருடங்களாக தனக்கு அளித்திருக்கும் நல்வாழ்க்கைக்காக மனமார்ந்த நன்றி சொல்லலாம். ஒருகட்டத்தில் கடவுளிடம் எதையும் கேட்காமல் நிறுத்திவிட்டு, பிறருக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com