நொடிப்பொழுதில் பக்தர் துயர் போக்கும் சக்கரத்தாழ்வார்!

ஜூலை 4, சுதர்சன ஜயந்தி
Sri Mahavishnu, Sudarsanar
Sri Mahavishnu, Sudarsanar
Published on

திருமாலின் ஐந்து ஆயுதங்களில் முதன்மையானதும் மிகச்சிறப்பு வாய்ந்த ஆயுதமாகவும் சுதர்சனம் திகழ்கிறது. முதலும் முடிவும் இல்லாத தன்மை கொண்டதும் பெருமாள் எடுக்கும் அவதாரங்கள் தோறும் அவரை விட்டுப் பிரியாத பேறு பெற்ற சக்ராயுதத்தை சுதர்சனர், சக்கரத்தாழ்வார், திருவாழிஆழ்வான் என்று வைணவர்கள் போற்றி வணங்குவர். வைணவ தலங்களில் சிறப்பான தரிசனம் தரும் சுதர்சனர், பதினாறு பேறுகள் தரும் பதினாறு திருக்கரங்களுடன் மூன்று கண்களும் கேசங்கள் அக்னியாய் சுடர் விட, சுழலும் திருவடிகளுடன் பக்தர்களுக்கு அபயமளிக்கும் அருட்கோலத்தில் காட்சி தருவார்.

அனைத்து வைணவத் தலங்களிலும் எழுந்தருளினாலும், மதுரை மேலூர் பெருவழியில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமோகூர் தலத்தில் சிறப்பாகக் காட்சி தருகிறார். ஸ்ரீ சுதர்சனர் பின்பக்கத்தில் நரசிம்மராகவும் முன்புறம் சக்கரத்தாழ்வாராகவும் நாற்பத்தெட்டு தேவதைகள் சூழ ஆறு வட்டங்களில் நூற்றி ஐம்பத்தி நான்கு அட்சரங்கள் பொறிக்கப்பட்டிருக்க பதினாறு திருகரங்களில் ஆயுதங்கள் தரித்து காட்சி தரும் சக்கரத்தாழ்வாரின் தரிசனம் பாவத்தைப் போக்கும் புண்ணிய தரிசனம் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
மகத்துவம் நிறைந்த சாதுர்மாஸ்ய விரதத்தின் அற்புதப் பலன்கள்!
Sri Mahavishnu, Sudarsanar

பொதுவாக, திருமாலை வேண்டி நிற்கும் பக்தர்களை ஆபத்து காலத்தில் உடனே ஓடிச் சென்று அருளும் பொருட்டு ஓரடி முன்னே வைத்த கோலத்தில் காட்சி தருவார் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். எனவே, துன்பச் சூழலில் உழலுவோர் ஆலயம் சென்று சக்கரத்தாழ்வாரின் சன்னிதியை வலம் வந்து வணங்கி வேண்டினால் துன்பங்கள் உடனே தீர்ந்து போகும். பக்தர்களின் துயரத்தை நொடி பொழுதில் தீர்ப்பவர் சுதர்சனர். திருமாலின் வலது கை சுட்டு விரலில் நின்று சுழலும் இந்த ஆயுதம் மிகுந்த சக்தி வாய்ந்தது. தன்னை எதிர்ப்பவரை அழித்துவிட்டு மீண்டும் திருமாலின் கரங்களையே வந்து அமர்ந்து விடும் இந்த சுதர்சன சக்கரம்.

ஒரு சமயம் அம்பரீசன் என்னும் மன்னன் ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை மனம் உருகி வழிபட்டுக் கொண்டிருந்தான். அந்த சமயம் அவனது அரண்மனைக்கு துர்வாச முனிவர் வருகை தந்தார். அவரை அன்புடன் உபசரித்தான் மன்னன். முனிவர் அவனிடத்தில் தாம் நீராடி விட்டு வந்ததும் உணவருந்துவதாகக் கூறி, நீராடச் சென்றார். வெகு நேரம் கடந்தும் முனிவர் வரவில்லை. மன்னனுக்கோ விரதத்தை பூர்த்தி செய்யும் நேரம் நெருங்கியது. முனிவருக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும். ஆதலால், வேறு வழியின்றி துளசி பத்திரம் இட்ட நீரை மட்டும் அருந்தி விரதத்தை பூர்த்தி செய்தான் மன்னன்.

இதையும் படியுங்கள்:
வருடத்தில் எவ்வளவு மழை பொழியும் என்பதைக் கூறும் அமானுஷ்ய கோயில்!
Sri Mahavishnu, Sudarsanar

திரும்பி வந்த முனிவர், மன்னன் தன்னை நிராகரித்து விட்டதாகக் கருதி, கோபம் கொண்டு அவனை சபித்தார். மன்னன் பெருமாளை சரணடைய, அவனது பக்தியை அவமதித்த முனிவரை தண்டிக்கும் நோக்கத்தில் சக்ராயுதமாக சுதர்சனம் சீறி எழுந்தது. விபரீதம் உணர்ந்த முனிவர், திருமாலை சரணடைந்தார். திருமாலோ, ‘சுதர்சனத்தை தன்னால் கட்டுப்படுத்த இயலாது’ என்று கூறி விட்டார். இறுதியில் முனிவர் மன்னனையே சரணடைந்தார். அம்பரீசன் சுதர்சனத்தை வழிபட, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அமைதியடைந்து அருள்புரிந்தார். முனிவரும் மன்னனின் பக்தியைப் புரிந்து அவனுக்கு ஆசி வழங்கினர்.

சக்கரத்தாழ்வாரின் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் எனத் தெரியுமா? திருமாலின் கையில் உள்ள சக்கரத்தை, சக்கரத்தாழ்வார் என்பர். சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாகத் தீரும் என்பது ஐதீகம். பக்தன் பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார். தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடன் மீது வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசரத் திருக்கோலம் என்பர்.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் தோஷம் - அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!
Sri Mahavishnu, Sudarsanar

பக்த பிரகலாதனுக்காக ஓடி வந்த ஸ்ரீ நரசிம்மமூர்த்தி யோக வடிவில் சக்கரத்தாழ்வாருக்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும், அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக நம் குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.

சுதர்சன வழிபாடு சங்கடங்கள் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ‘நாளை என்பது நரசிம்மருக்குக் கிடையாது.’ துன்பத்திலிருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது மிகச் சிறப்பு. இதன் அடிப்படையில்தான் சக்கரத்தாழ்வருக்கு பின்னால் ஸ்ரீ நரசிம்மர் காட்சி தருகிறார். சுதர்சன ஜயந்தியன்று சக்கரத்தாழ்வாரை வழிபட்டு நமது கஷ்டங்களைப் போக்கிக் கொள்வோம். உடனடியாக உதவும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அருளையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com