
கேரளப் பகுதிகளில் அதிக அளவில் விளையும் நேந்திரம் வாழைக்கும் ஓணம் பண்டிகை தொடங்கக் காரணமான திருக்காட்கரை அப்பன் பெருமாள் கோயிலுக்கும் தொடர்பு உண்டு. திருக்காட்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். ஆனால், வாழை சரியான விளைச்சலை அளிக்கவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அந்த விவசாயி, திருக்காட்கரை அப்பன் கோயிலுக்குச் சென்று, தங்கத்தால் செய்யப்பட்ட வாழைக்குலை ஒன்றை சுவாமிக்கு சமர்ப்பித்து, “இறைவா, உன்னுடைய கண் பார்வை, வாழை பயிரிட்டுள்ள எனது நிலத்தில் பட வேண்டும்” என்று மனமுருக வேண்டிக்கொண்டார்.
திருக்காட்கரையப்பனும், தனது பக்தன் நிலத்தைத் தனது கண்களால் பார்த்தார். இதனால் அவர் பயிரிட்ட வாழை அதிக விளைச்சல் கண்டதுடன், அதில் விளைந்த வாழை, பெரிய அளவில் இருந்தது. இறைவனின் கண் பார்வையால் விளைந்த வாழை என்பதால் அதற்கு, ‘நேத்திரம் வாழை’ என்று பெயர் வந்தது. கண்ணுக்கு ‘நேத்திரம்’ என்ற பெயர் உண்டு. இதுவே காலப்போக்கில் மருவி, ‘நேந்திரம் வாழை’ என்று ஆனது.
108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரையப்பன் கோயில் 78வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள சில கோயில்களில் இதுவும் ஒன்று. வட்ட வடிவ கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலை பரசுராமர் நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது.
திருக்காட்கரையப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றதாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகையன்று, அதிகாலையில் நேந்திரம் வாழைக்குலைகளை தோள்களில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பிப்பதைக் காணலாம். அந்த வாழைக்குலைகள் கோயில் முன் விமானங்களில் கட்டித் தொங்க விடப்படுகின்றன. கேரளாவில் மக்கள் தங்களது வீடுகளில் ஓணம் பண்டிகை அன்று மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து நேந்திரம் பழங்களைப் படைத்து வழிபாடு செய்கின்றனர்.
செங்காளிக்கூடம் நேந்திரம் என்பது புவியியல் குறியீடு பெற்ற, திருக்காட்கரையப்பன் கோயில் தொடர்பான ஒரு வகை நேந்திரம் பழமாகும். இந்த நேந்திரம் பழங்கள் மற்ற வாழைப் பழங்களை விட பெரியவை மற்றும் கேரளா, திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகம் விளைகின்றன. செங்காளிக்கூடம் நேந்திரம், அதன் தனித்துவமான சுவை, மணம் மற்றும் சத்துக்களுக்காகப் பிரபலமானது.
2000 ஆண்டுகள் பழைமையானது ஸ்ரீ பூர்ணாத்திரேயசர் கோயில். இது கேரளத்தின், எர்ணாகுளம் அருகில் உள்ள, திருப்பூரணித்துறையில் அமைந்துள்ள ஒரு விஷ்ணு கோயில் ஆகும். கொச்சி ராஜ்ஜிய அரச குடும்பத்தின் 8 அரச கோயில்களில் இது முதன்மையானது. இந்தக் கோயில் கேரளத்தின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெருமாள் ஈஸ்வர பட்டம் பெற்ற கேரளக் கோயில்.
பெருமாளே நேரில் வந்து அமைக்கச் சொன்ன கோயில் என்பதால் இத்தலத்தில்தான் ஓணம் திருநாள் ஆரம்பமானது என்கிறார்கள். இக்கோயிலின் உள்ளே ‘பல்குண தீர்த்தம்’ எனும் மிகப்பெரிய குளம் உள்ளது. இங்குதான் கேரளாவில் உள்ள கோயில்களிலேயே முதன் முதலாக ஓணம் திருவிழா துவங்கும். அதன் பிறகே மற்ற கோயில்களிலும், வீடுகளிலும் ஓணத் திருவிழா துவங்கும்.
குழந்தை வரம் தரும் கோயில் இது. இத்தலத்திற்கு வந்து குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குழந்தை இழந்தவர்கள் வேண்டுதல் செய்வது சிறப்புடையது என்று கூறப்படுகிறது. இங்குள்ள ‘கடா விளக்கு’ எனப்படும் அணையா விளக்கு ரிக், யஜுர், சாம வேதங்களைக் குறிக்கும் வகையில் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இந்த விளக்கை ஏற்றி குழந்தை இல்லாதவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். இந்த அணையா விளக்கை ஏற்றி வழிபடுவதை, ‘உலப்பன்னா’ என்கின்றனர் பக்தர்கள்.