
ஏகாதசி நாள் என்பது விஷ்ணுவை வழிபடுவதற்கு மிக முக்கியமான நாளாகும். விரதங்களிலேயே மிகவும் புண்ணிய பலன்களை தரும் விரதமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். பெருமாளுக்கு மிகவும் விருப்பமான ஏகாதசி விரதத்தை யார் ஒருவர் தவறாமல் கடைபிடிக்கிறாரோ அவருக்கு பெருமாளின் அருளுடன் வைகுண்ட பதவியும் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்தப் புனித நாளான ஏகாதசி நாளில் விரதம் அனுஷ்டிப்பது விஷ்ணுவின் அருளைப் பெறவும், பாவங்கள் நீங்கவும், செல்வ வளம் பெருகவும் உதவும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
மாதத்திற்கு இரண்டு முறை என ஆண்டிற்கு 24 அல்லது 25 ஏகாதசி விரத நாட்கள் வந்தாலும், ஒவ்வொரு ஏகாதசிக்கும் தனித்தனி பெயரும், சிறப்பும், பலனும் உள்ளது.
வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் ஏகாதசிகளுக்கு மட்டும் விரதம் அனுஷ்டித்தாலே அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏகாதசி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள், அன்றைய தினம் முழுவதும் தூய மனதுடன் பெருமாளின் திருநாமங்கள், மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தாலும், தான தர்மங்களை செய்தாலும் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் செப்டம்பர் மாதம் பௌர்ணமிக்கு முன்பு அதாவது இன்று (செப்டம்பர் 3-ம்தேதி) வரும் இந்த புனித ஏகாதசி பார்சவ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பார்சவ ஏகாதசி, பார்ஸ்வ ஏகாதசி அல்லது பரிவர்த்தினி ஏகாதசி அல்லது பரிவர்த்தன் ஏகாதசி அல்லது வாமன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி விஷ்ணுவின் வாமன அவதாரத்தை வணங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாளாகும்.
பார்சவ ஏகாதசியான இன்று என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம்...
மாதந்தோறும் 2 ஏகாதசிகள் வரும். அதில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை சுக்லபட்ச ஏகாதசி என்று கூறுவார்கள். இன்று விரதம் அனுஷ்டித்து பெருமாள வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. எனினும் இன்றைய நாளில் நாம் ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக செய்யவே கூடாது.
* ஏகாதசி அன்று அரிசி உணவுகளை சாப்பிடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
* இன்று பகலில் உறங்கக்கூடாது. ஏகாதசி நாளில் பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்த்து மனத்தூய்மையுடன் பெருமாளுக்கு உகந்த ஸ்லோகங்கள், மந்திரங்களை சொல்லி கொண்டே இருப்பது நல்லது.
* இன்று நீங்கள் சாப்பிடும் உணவில் வெங்காயம், பூண்டை சேர்த்துக்கொள்ளக்கூடாது.
* இன்றைய தினம் அசைவம், போதை வஸ்துக்களை தொடவே கூடாது. இவ்வாறு செய்வது பெரும் பாவமாக கருதப்படும்.
* யாரையும் அடிக்கவோ, கோபமாகவோ, கடுமையான சொற்களை பயன்படுத்தி திட்டுவோ கூடாது.
* இன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. அப்படி செய்தால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பூஜைக்கு தேவையான துளசியை முன்தினமே பறித்து வைத்துவிட வேண்டும்.
* ஏகாதசி நாளில் தேவையுள்ள ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம்.
இன்றைய நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராடி பெருமாளை வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
இன்றைய நாள் முழுவதும் மனத்தூய்மையுடன் விஷ்ணுவிற்கு உகந்த ஸ்லோகங்களையும், மந்திரங்களையும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் உங்களது உள்ளமும், மனமும் தூய்மையடைவதுடன், விஷ்ணுவின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும்.