நீங்கள் மகாபலிபுரம் சென்றால் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் கண்டு அதிசயித்திருப்பீர்கள். ஆனால், அவர்கள் முதன் முதலில் கட்டிய குடைவரைக் கோயிலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஆமாம். விழுப்புரம் மாவட்டம், மண்டகப்பட்டு கிராமத்திலுள்ள பல்லவர்களின் முதல் குடைவரைக் கோயிலைப் பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
இந்தக் குடைவரை கோயில் வட தமிழ்நாட்டின் முதல் குடைவரை கோயிலாகக் கருதப்படுகிறது. தென்னாட்டில் உள்ள பிள்ளையார்பட்டி பாண்டியர்களின் முதல் குடைவரைக் கோயிலாகச் சொல்லப்படுகிறது. அது தென்னாட்டின் முதல் குடைவரைக் கோவிலாகும். வரை என்றால் மலை. குடைவரைக் கோயில் என்றால் மலையை குடைந்து கட்டப்பட்ட கோயில் என்று பொருள்.
இது மும்மூர்த்திகளுக்கான குடைவரைக் கோயில். இந்தக் குடவரை கோயிலானது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 600 முதல் 630க்குள் கட்டப்பட்டது. மிகவும் எளிமையான புற, உள் அமைப்பினைக் கொண்ட இந்தக் குடைவரைக் கோயில் குடைவரைக் கோயிலின் பரிணாம வளர்ச்சியை நமக்குத் தெரியப்படுத்துகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளுக்கு தனித்தனியாக சன்னிதிகள் அமைத்து மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட இந்த குடைவரை கோயிலுக்கு ‘லக்ஷிதாயனம்’ என்று பெயரிடப்பட்டது.
இந்தக் கோயிலைக் கட்டிய முதலாம் மகேந்திரவர்மன் இதனைக் குறித்து வடமொழியில் கிரந்த எழுத்துக்களில் கல்வெட்டு பொறித்துள்ளான்.
கல்வெட்டு வடமொழி வாசகம் பின்வருமாறு:
‘அதன்திஷ்டகந்த்ரும் மலோ
ஹமசுதம் விசித்திர சித்தேன
நிம்மர்பிதன்னபேன பிரம்மோ
ஸ்ரவிஷ்ணு லக்ஷிதாயன்’
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு:
பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இரும்பு, மரம், செங்கல், சுதை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் விசித்திரசித்தனால் குடையப்பட்டது.
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர பல்லவனுக்கு பல்வேறு பட்டப் பெயர்கள் உண்டு. மாமல்லன், லக்க்ஷிதாயன், மத்தவிலாசன் என பல்வேறு பட்டப் பெயர்கள் உண்டு. அவனது பட்டப்பெயரான விசித்திர சித்தன், அதாவது வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவன் என்ற ஒரு பட்டப் பெயர் இந்தக் கோயிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, புதுமையாக கல்லினைக் குடைந்து கோயில்கள் கட்டும் முறையை வட தமிழ்நாட்டில் தொடங்கியவன். இவன் குடைவரைக் கோயில் கட்டுமானத்தின் முன்னோடி என்று கருதப்படுகிறான்.
இந்தக் கோயிலில் எளிமையான தூண்களுடன் முன்பகுதியைத் தாண்டிச் சென்றவுடன் அங்கு முகமண்டபம் உள்ளது. அதைத் தாண்டி அர்த்தமண்டபம் உள்ளது. அர்த்தமண்டபம் தாண்டி மூன்று தனித் தனி சன்னிதிகள் பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு உள்ளன. அங்கு ஒரு காலத்தில் மரச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவை காலப்போக்கில் இல்லாமல் போய்விட்டன என்றும் கருதப்படுகிறது. சிலைகளை சொருகுவதற்கு என்று சன்னிதியில் கீழே குழிகள் உள்ளன. மேலும், கதவுகள் மாட்டுவதற்கு சுவர்களில் குழிகள் உள்ளன.
இது முதல் குடைவரைக் கோயில் என்ற காரணத்தால் தூண்களில் எந்த ஒரு வேலைப்பாடும் இல்லாமல் சதுரம் மற்றும் எண்கோண சேர்ந்த வடிவில் அமைந்துள்ளன. எல்லா தூண்களும் ஒரே மாதிரி அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலே கூரைகளிலும் எந்த ஒரு வேலைப்பாடுகளும் இல்லை. தரைத் தளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரே தள உயரத்தை அமைத்துள்ளனர். கோயிலில் இரண்டு பக்கங்களில் இரண்டு துவாரபாலகர்கள் சிலைகள் உள்ளன. அவை ஒரே மாதிரி இல்லாமல், வெவ்வேறு அமைப்பில் உள்ளன.
கோயிலுக்கு முன்பு ஒரு அருமையான குளம் உள்ளது. விழுப்புரம் சென்றால் இந்தக் கோயிலைக் காணத் தவறாதீர்கள்.